அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிவிட்டது. விலகியது மட்டுமல்ல; அதிமுக மீது சூடான விமர்சனக் கணைகளையும் ஏவ ஆரம்பித்துவிட்டது.
அதிமுக அணியில் தேமுதிக கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே இருந்தது. ஆனாலும் அப்போது கடைசி நேரத்தில் திமுகவுடனும் அக்கட்சி பேச்சு நடத்தியதை துரைமுருகன் படாரென போட்டு உடைத்துவிட அதிமுக அணிக்குள் தேமுதிகவின் நிலை திண்டாட்டமானது.
இந்த நிலையில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விரைவில் பேச்சுவார்த்தைகளை முடித்து தொகுதிப் பங்கீட்டை அறிவிக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஒரு மாதத்துக்கும் மேலாகவே கூறி வந்தார்.
ஒருகட்டத்தில் அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தையைத் தொடங்கியபோது வெறும் நான்கு தொகுதிகளில் ஆரம்பித்தது அதிமுக. கொஞ்சம் கொஞ்சமாக இருதரப்பும் பேசி தேமுதிகவுக்கு 12 சட்டமன்றத் தொகுதிகள் ஒரு ராஜ்யசபா என்ற நிலைக்கு வந்தனர். இதற்கிடையில் அதிமுக கூட்டணியில் முதல் ஆளாக பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து தேமுதிக, தங்களுக்கும் 23 தொகுதிகள் வேண்டும், பாமக வட மாவட்டக் கட்சிதான். ஆனால், நாங்கள் மாநிலம் முழுவதும் இருக்கும் கட்சி என்று அதிமுகவிடம் கேட்டது. அங்கே ஆரம்பித்த பிடிவாதமும் இறுக்கமும்தான் கடைசியில் மார்ச் 9 ஆம் தேதி, கூட்டணியை விட்டே வெளியேறும் நிலை வரை கொண்டு வந்திருக்கிறது.
தேமுதிகவின் கடந்த கால பலம் என்ன, தற்போதைய பலம் என்ன என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த தேர்தல் முடிவுகள் மூலமும், அண்மையில் எடுக்கப்பட்ட சர்வேக்கள் வாயிலாகவும் புள்ளி விவரத்தோடு வைத்திருந்தார். அதன்படி தேமுதிகவுக்கு 2.8% வாக்குவங்கிதான் இருக்கிறது என்று வாதிட்டது அதிமுக. மேலும் தேமுதிக விருப்ப மனு பெறும் அறிவிப்பை வெளியிட்டும் மிகச் சொற்பமான விருப்ப மனுக்களே பெறப்பட்டதாகவும், மாவட்டச் செயலாளர்களிடம் தலைமையே பேசியும் அவர்கள் விருப்ப மனுக்கள் கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் எடப்பாடிக்கு தகவல்கள் கிடைத்தன. அதனால்தான், தேமுதிகவுக்கு குறைவான அளவு இடங்களையே கொடுக்க முன் வந்தது அதிமுக. மேலும் தேமுதிகவின் முரசு சின்னம் நிற்கும் தொகுதிகளில் உதயசூரியன் நின்றால் வெற்றிவாய்ப்பு உதயசூரியனுக்கே செல்லும் என்றும், அதனால் தேமுதிக போனாலும் அந்தத் தொகுதிகளில் இரட்டை இலை நின்றால் உதயசூரியனுக்கு ஈடு கொடுத்துப் போராட முடியும் என்றும் கருதியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனால்தான் அதே நிலையில் தொடர்ந்து இருந்தது அதிமுக.
ஒருகட்டத்தில் அதிமுக தன் நிலையில் இருந்து இறங்கி வராது என்று தெரிந்த தேமுதிக தரப்பில் அதன் துணைச் செயலாளர் சுதீஷ் திமுக உயர்நிலைக் குழு உறுப்பினரான எ.வ.வேலுவிடம் பேச ஆரம்பித்தார். நான் தலைவரிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்று சுதீஷிடம் கூறிய வேலு, இதுகுறித்து ஸ்டாலினிடமும் தெரிவித்தார். ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தல் காட்சிகளை மனக்கண்ணுக்குள் ஓட விட்ட ஸ்டாலின், ‘எந்த உத்தரவாதமும் கொடுத்துடாதீங்க’ என்று வேலுவிடம் பதில் சொல்லியிருக்கிறார்.
**2016 சட்டமன்றத் தேர்தலில் என்ன நடந்தது?**
2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணியால் திமுக எதிர்க்கட்சியாகக்கூட வர முடியவில்லை. விஜயகாந்த் தான் எதிர்க்கட்சித் தலைவரானார். சில மாதங்களிலேயே அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் சட்டமன்றத்தில் பிரச்சினை வந்து வாக்குவாதம் ஏற்பட கூட்டணி முறிந்தது. இந்தப் பின்னணியில் 2016 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவைத் தனது கூட்டணிக்குக் கொண்டுவர திமுக கடுமையாக முயன்றது.
திமுகவுக்காக கலாநிதி மாறன் விஜயகாந்த் குடும்பத்தாரிடம் பேசினார். இத்தனை இடங்கள் வேண்டும், அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்றெல்லாம் தேமுதிக சார்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. பின் ஸ்டாலினே விஜயகாந்திடம் பேசினார். தனக்கு நெருக்கமான வழியில் எ.வ.வேலுவும் பிரேமலதா, சுதீஷிடம் பேசினார். ஆனால் அப்போது தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலைச் சந்தித்தது. முடிவில் அதிமுக மீண்டும் வென்றது. அதிமுக ஆட்சியில் அமரவும், திமுக ஆட்சியில் அமரமுடியாமல் போனதற்கும் நாங்கள்தான் காரணம் என்று தேமுதிகவினர் பொது மேடைகளில் பேசினார்கள்.
2016 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவிடம் திமுக பேசிய நிலையில், இப்போது நேர் மாறாக திமுகவிடம் தேமுதிக பேசிக் கொண்டிருந்தது. இந்த ஃப்ளாஷ்பேக்கை நினைத்துதான், தேமுதிகவுக்கு உத்தரவாதம் எதுவும் கொடுக்காதீர்கள் என்று கூறிவிட்டார் ஸ்டாலின்.
அதுமட்டுமல்ல, பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் மேற்கொண்ட தொடர் ஆய்வில் தேமுதிகவுக்கு 2% வாக்கு வங்கிதான் தற்போது உள்ளது. அதனால் அவர்களைக் கூட்டணியில் சேர்த்துக்கொண்டு அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அனுபவிக்க வேண்டாம் என்று திமுக தலைமைக்கு ஏற்கனவே ரிப்போர்ட் வைக்கப்பட்டிருந்தது. இதையும் கருத்தில்கொண்டுதான் தேமுதிகவை ஸ்டாலினும் தள்ளியே வைத்தார்.
இப்போது தேமுதிகவின் முன் இருக்கும் வாய்ப்புகள் அமமுக அணிக்குச் செல்லுதல், கமல் தலைமையிலான அணிக்குச் செல்லுதல், சீமானுடன் கூட்டணி வைத்தல், தனித்துப் போட்டியிடுதல் அல்லது தேர்தலைப் புறக்கணித்தல் ஆகியவையே.
இந்த வாய்ப்புகளில் தேமுதிக எதைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றிய ஆலோசனை நேற்று முழுவதும் அக்கட்சித் தலைமையில் நடந்திருக்கிறது.
**-ராஜ்**
�,