.வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.
“கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் நிம்மதியாக இருப்பதாக முன்னாள் சட்ட அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகம் பேசியுள்ளார்.
திண்டிவனத்தில் உள்ளாட்சித் தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் கூட்டத்தில் பேசிய சி.வி சண்முகம், ‘கடந்த ஒரு வாரமாகத் தான் ரொம்ப நிம்மதியாக இருக்கிறோம். உற்சாகமாக இருக்கிறோம்.
இதுவரை யாரோ செய்த தவறுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய நிலைமையில் இருந்தோம். இப்ப அது இல்லை. விலகிடுச்சு. ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த மாதிரி இருக்கு’ என்று கைதட்டல்களுக்கிடையே சி.வி சண்முகம் பேசினார்.
அவர் குறிப்பிட்டது பாஜக உடனான கூட்டணி தான் என்பதையும், அக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையும்… சி.வி சண்முகம் பேச்சும் அதற்கு தொண்டர்கள் கொடுத்த ரியாக்சனும் தெளிவாக காட்டின.
மின்னம்பலத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் [பாஜக கூட்டணி தொடருமா? எடப்பாடி சொன்ன காரணம்!](https://minnambalam.com/politics/2022/02/01/28/bjp-admk-alliance-edapadi-%20up-election%20-result) என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது.
அதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டி என ஜனவரி 31ஆம் தேதி பிற்பகல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். அதன் பிறகு அன்று இரவு 8 மணிக்கு சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தங்களது நிர்வாகிகள் தொண்டர்கள் அதிக அளவு போட்டியிட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இந்த வகையில்தான் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அவர்கள் எங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டார்கள் என்று சொல்லாதீர்கள்’ என்று கூறினார்.
இதையடுத்து சேலத்திலிருந்த எடப்பாடி பழனிசாமியிடம் சி.வி. சண்முகம் தொடர்பு கொண்டு, ‘என்ன இப்படி சொல்லிட்டீங்க? இதுதான் நல்ல சமயம். இப்போதிலிருந்தே பிஜேபியுடன் நாம் நம்மை தூரத்தில் வைத்துக் கொள்வது நல்லது. வரும் எம்பி தேர்தலுக்கும் இதேபோல பிஜேபி அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது நல்லது’ என சொல்லியிருக்கிறார் என்பதை பதிவு செய்திருந்தோம்.
அந்த மனநிலையின் தொடர்ச்சியாகத் தான் நேற்று உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சி.வி. சண்முகம் மனம் திறந்து பாஜக கூட்டணி ஒரு பாரம் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்.
சி.வி. சண்முகத்துக்கு தொண்டர்கள் நிர்வாகிகள் மத்தியில் இருந்து கிடைத்த கருத்துகளின் அடிப்படையில்தான் அன்றே எடப்பாடியிடம் இனி பாஜக கூட்டணி வேண்டாம் என்று சொன்னார். அதையே தேர்தல் கூட்டங்களிலும் வெளிப்படையாக கூறி வருகிறார்.
சி.வி சண்முகம் தொடங்கி வைத்த இந்த பாஜக எதிர்ப்பை அதிமுகவில் மேலும் பலர் கையில் எடுப்பார்கள் என்று தெரிகிறது. தொண்டர்கள் கருத்து என்ற அடிப்படையில் இனி பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற முடிவை பன்னீர்செல்வமும் எடப்பாடியும் எடுப்பதற்கு சி.வி சண்முகம் போன்றவர்கள் நிர்ப்பந்திப்பார்கள் என்கிறார்கள் சண்முகத்திற்கு நெருக்கமானவர்கள்.
இதற்கிடையே 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பேசிய ஒரு சிறு வீடியோவை அதிமுக நிர்வாகிகள் பலர் வாட்ஸ்அப்பில் தற்போது பகிர்ந்து வருகிறார்கள்.
‘உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை அவர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா? தமிழ்நாட்டில் பாஜக ஒரு நாளைக்கும் ஆட்சி அமைக்க முடியாது’ என்று ஜெயலலிதா பேசிய அந்த வீடியோ காட்சியை அதிமுகவினர் தற்போது வெகு வேகமாக தங்களுடைய வாட்ஸ்அப் குரூப்களில் பரப்பி வருகிறார்கள்.
மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடியோ பன்னீர்செல்வமோ முயற்சித்தாலும் சி.வி. சண்முகம் போன்ற முன்னாள் அமைச்சர்கள் சிலரும் மாவட்ட செயலாளர்கள் பலரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பதே இப்போதைய அதிமுக வின் அப்டேட் நிலவரம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ்அப்.