பிரதமரின் கோவை விசிட்டுக்காகவே காத்திருந்ததுபோல, அவர் வந்து போன மறுநாளே தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். அவருடைய வருகையால், பேச்சால், அறிவிப்புகளால் அல்லது அவர் துவங்கி வைத்த திட்டங்களால் தமிழக மக்களிடம் பெரிய வரவேற்போ, மகிழ்ச்சியோ, மாற்றமோ ஏற்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை. குறைந்தபட்சம் அதிமுக கூட்டணிக்குள்ளாவது அவருடைய கோவை விசிட் ஏதாவது நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறதா என்று விசாரித்தால் அப்படியும் தெரியவில்லை.
புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, கோவைக்கு ஜம்போ விமானம் மூலமாக வந்திறங்கினார் பிரதமர் மோடி. அவருடைய வருகையை விட, அவர் வந்த ஜம்போ விமானம் கோவை விமான நிலையத்தில் முதல் முறையாக இறக்கப்பட்டதுதான், கோவையிலுள்ள தொழில் அமைப்பினரிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்போதுள்ள கோவை விமான நிலையத்தில் ஏர்பஸ் போன்ற பெரிய விமானங்கள் எதையும் இறக்க முடியாது என்று காரணம் காட்டித்தான் கேரளாவிலுள்ள கொச்சி, கோழிக்கோடு போன்ற விமான நிலையங்களில் இருந்து வெளிநாட்டு விமானங்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன. இங்கே இத்தகைய விமானங்களை இறக்குவது பாதுகாப்பற்றது என்று இந்திய விமான நிலைய ஆணையத்திலுள்ள அதிகாரிகள் நீண்ட காலமாக காரணம் கூறிவந்தனர். அதற்காகவே விமான நிலைய விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கோவையிலுள்ள தொழில் அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்தியாவிலுள்ள விமானங்களிலேயே மிகப்பெரிய விமானமான ‘போயிங் 777’ எனப்படும் ஜம்போ விமானம், அதுவும் பிரதமரே பயணம் செய்து வந்த விமானம் கோவை விமான நிலையத்தில் இறக்கப்பட்ட பின்பு, பாதுகாப்பில்லை என்று கூறப்படும் காரணம் பொய்யாகி விட்டதாக கோவை தொழில் அமைப்பினர் மத்தியில் சமூக ஊடகங்களில் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு புறமிருக்க, பிரதமரும் அவருடைய பாதுகாவலர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே பயணம் செய்வதற்கு 350 பேர் பயணம் செய்யும் இவ்வளவு பெரிய விமானம் இயக்கப்பட வேண்டுமா என்கிறரீதியிலும் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் கிளம்பின.
இந்த விவாதங்கள், விமர்சனங்கள் ஒருபுறமிருக்க, கோவை தொழில் அமைப்பினரை பிரதமர் மோடி சந்திப்பார், அவர்களுடைய குறைகளைக் கேட்பார் என்று அங்குள்ள தொழில் அமைப்பினர் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எந்த சந்திப்பும் நடக்கவில்லை. அவர்களிடமிருந்து எந்த கோரிக்கை மனுவையும் அவர் வாங்கவுமில்லை. அதற்காக தொழில் அமைப்பினர் முயற்சி எடுக்கவில்லையா அல்லது முயற்சி செய்தும் சந்திக்க முடியவில்லையா என்பது தெரியவில்லை. கடந்த முறை அவர் கோவைக்கு வந்தபோது, பல்வேறு தொழில் அமைப்பினரையும் சந்தித்தார். இப்போது தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், அவர் கண்டிப்பாக சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் கோவைக்கு வந்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தொழில் துறையினரைச் சந்தித்தார். அப்போது அவர்கள் பல்வேறு குறைகளையும் கூறி, எங்களுடைய குரலை நீங்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது, சமூக ஊடகங்களில் இன்றளவும் வைரலாகப் பரவி வருகிறது. ராகுல் காந்தியைச் சந்தித்து கோவை தொழில் அமைப்பினர் முறையிட்டதன் காரணமாகவே, இங்குள்ள எந்த அமைப்பினரையும் பிரதமர் சந்திக்க மறுத்திருக்கலாம் என்றும் பேசப்பட்டது. கட்சி நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, ‘ஒரு நாள் அதுவும் சில மணி நேரப் பயணம் என்பதால்தான் யாரையும் சந்திக்கவில்லை’ என்றனர்.
கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், அரசு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெய்வேலி புதிய அனல் மின் திட்டம், தென்மாவட்டங்களில் அமைக்கப்பட்ட சூரிய மின் சக்தித் திட்டங்கள் போன்றவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் அந்த விழாவில் கீழ்பவானி பாசனத்தை நவீனப்படுத்தும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களையும் பிரதமர் துவங்கி வைத்தார். விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். துணை முதல்வர் பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அமைச்சர் வேலுமணி ஆகியோர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் கலந்து கொண்டார்.
முதல்வர், துணை முதல்வர் இருவரும் பிரதமரை வரவேற்றனர். அதிமுகவின் ஒரே எம்பியும், ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத், எல்லோருக்கும் முன்பாகவே பிரதமரின் காலில் விழுந்து ஆசி பெற்றார் . தமிழகத்தில் அவரால் துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களைப் பற்றி விரிவாக விளக்கிப் பேசினார் பிரதமர். அவருடைய பேச்சின் தமிழ் மொழிபெயர்ப்பை, அகில இந்திய வானொலியின் முன்னாள் ஊழியர் சுதர்சன் என்பவர் வாசித்தார். பிரதமருக்குப் புரிய வேண்டும் என்பதற்காக முதல்வரும், துணை முதல்வரும் ஒரே விஷயத்தை தமிழிலும், அதன் பிறகு ஆங்கிலத்திலும் பேசினர். பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசி வரவேற்றார் ஓபிஎஸ். தமிழகத்துக்கான பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவியையும், கோரிக்கைகளையும் வாசித்தார் முதல்வர் இபிஎஸ்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 50 சதவீத நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்றும், கோவை மற்றும் மதுரை விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை வைத்தார். மிகமுக்கியமான தொழில் மையமாகவுள்ள கோவையிலிருந்து துபாய்க்கு வாரம் ஒரு முறை விமானத்தை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரினார். இவை எதற்குமே பிரதமர் மோடி தன் உரையின்போது எந்த பதிலும் தரவில்லை. இது முதல்வரை அப்செட் ஆக வைத்ததாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார். கிளம்பும்போது தன்னைப் பார்த்துக் கும்பிட்ட அமைச்சர் வேலுமணியை தோளில் தட்டிக்கொடுத்தார் பிரதமர் மோடி. அந்த புகைப்படம், கோவையில் சமூக ஊடகங்களில் வெகுவேகமாகப் பரவி, பலவிதமான விமர்சனங்களைக் கிளப்பியது. ஜெயலலிதா இறந்தபோது சசிகலாவின் தலையில் பிரதமர் மோடி கைவைத்துப் பேசிய படத்தையும் இந்தப் படத்தையும் ஒப்பிட்டு பலரும் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர்.
கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்கு வெளியிலுள்ள மைதானத்திலேயே பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐந்து மணிக்குத் துவங்கும் கூட்டத்துக்கு மதியம் ஒரு மணியிலிருந்து ஆட்களை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர். பத்திரிக்கையாளர்களையும் மூன்று மணி நேரத்துக்கு முன்பே, இருக்கைக்கு வந்து விட வேண்டுமென்று போலீஸ் தரப்பில் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் இரண்டு, மூன்று மணிக்கே வந்தவர்கள், மொட்டை வெயிலில் மண்டை காயக் காத்திருக்க வேண்டியதாயிற்று.
மோடி வருகையை முன்னிட்டு, ‘வாங்க மோடி….வணக்கங்க மோடி…கொங்கு மக்கள் வரவேற்போம் கூடி’ என்று பாரதிய ஜனதா சார்பில் வெளியிடப்பட்ட பாடல் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தது. எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை. ஆனால் மேடையில் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை, ‘காவல்துறையினர் ஆங்காங்கே எங்களுடைய தொண்டர்களை வரவிடாமல் தடுப்பதாகத் தகவல் வருகிறது. யாரையும் தடுக்காதீர்கள்’ என்று எதிர்க்கட்சியின் பொதுக்கூட்டம் போல ஆளுக்கு ஆள் அடிக்கடி எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தனர்.
பிரதமர் மேடைக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, மேடையிலிருந்து தலைவர்கள் பேச்சைத் துவக்கினர். காங்கிரசிலிருந்து வந்திருந்த கார்வேந்தன் பேசும்போது, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எவ்வளவு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்ற பட்டியலை ஆண்டுவாரியாக வாசித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து பாரதிய ஜனதா ஆட்சிக்காலத்தில் ஐந்தே ஐந்து ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் பேசியது மேடையிலிருந்தவர்களைக் கவனிக்க வைத்தது.
திமுகவிலிருந்து பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ள முன்னாள் எம்பி கேபி ராமலிங்கம், ஸ்டாலினை நேரடியாகத் தாக்கிப் பேச ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து திமுகவிலிருந்து வந்த முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியும் ஸ்டாலினைக் குறி வைத்து கேள்விகளாக அடுக்கினார். மேச்சேரி விவகாரத்தை அவர் பேசியது யாருக்குமே புரியவில்லை. பாரதிய ஜனதாவின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகளுக்குச் செல்லும் அதிகமான வரிதான் காரணமென்று விளக்கினார். இவர் ஏன் இதை இப்போது பேசுகிறார் என்று கீழே இருக்கும் கட்சி நிர்வாகிகள் முதல் மேடையிலிருந்து தலைவர்கள் வரை பலரும் நெளிந்தனர்.
பாரதிய ஜனதா மகளிரணியின் தேசியத்தலைவர் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘கொங்கு மண்டலத்தில் இருந்து இரட்டை இலக்கத்தில் நமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்திற்குச் செல்வார்கள்’ என்று கூற, தொண்டர்களிடமிருந்து நிறைய கரவொலி கிளம்பியது. இல கணேசன் பேச்சைத் துவக்கும்போது, வெயில் லேசாகக் குறையத்துவங்கியது. அதைச் சுட்டிக்காட்டி, ‘கதிரவன் மறையத்துவங்கிவிட்டான்.’ என்று சிலேடையாகப் பேச, மேடையிலிருந்தவர்கள் கைதட்டி ரசித்தனர். அதன்பின் பிரதமர் மோடி வந்ததும், தமிழக பாரதிய ஜனதா தலைவர் முருகன் வரவேற்றுப் பேசத்துவங்கினார். அவர் என்ன பேசவந்தார் என்பதே யாருக்குமே புரியாத அளவிற்கு ஏதேதோ பேசினார். அவர் நடத்திய வேல் யாத்திரையைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசியதோடு, இடையிடையே ‘வெற்றிவேல் வீரவேல்’ என்று கோஷமும் எழுப்பினார். மேடையில் பேசியதில், கேபி ராமலிங்கம், விபி துரைசாமி, கார்வேந்தன், இல கணேசன் ஆகியோரைத் தவிர்த்து பிரதமர் மோடி வரை எல்லோருமே ‘வெற்றிவேல் வீரவேல்’ கோஷம் எழுப்பி, அதை மக்களும் திரும்பச் சொல்ல வேண்டுமென்று கூறினர்.
பிரதமர் மோடி பேசும்போது, தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் புள்ளி விபரங்களுடன் பேசியதோடு, திமுக–காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ‘‘திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சட்டவிரோதச் செயலில் ஈடுபடுவோர் தாங்களே ஆட்சிக்கு வந்ததைப் போல மகிழ்ச்சியடைவார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது. அம்மா ஜெயலலிதாஜியை இவர்கள் எவ்வளவு துன்பப்படுத்தினார்கள் என்பது உங்களுக்கே தெரியும்; நான் அதை மீண்டும் நினைவுபடுத்த வேண்டியதில்லை. அதிமுகவும், பாரதிய ஜனதாவும் இணைந்து வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறோம். திமுகவும் காங்கிரசும் ஊழல் செய்வதற்காக மட்டுமே இணைகிறார்கள். திமுகவில் ஊழல் செய்பவர்களுக்கே முக்கியப் பதவிகள் தரப்படுகின்றன’’ என்று தாறுமாறாகப் போட்டுத் தாக்கினார்.
‘‘திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து 25 ஆண்டுகளாகிவிட்டது. தமிழர்களுக்கான ஒட்டு மொத்த உரிமையை எடுத்துக்கொண்ட அரசியல் இயக்கம் என்ற அந்தஸ்தை அது எப்போதோ இழந்து விட்டது. இப்போது ஒரு மாநிலத்துக்குள் அதுவும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கிற பிராந்தியக் கட்சியாகச் சுருங்கிவிட்டது. தி.மு.க., ஆட்சியில் இருந்த கடும் மின் வெட்டை தமிழக மக்களால் மறக்கவே முடியாது. திமுகவும், காங்கிரசும் முதல் குடும்பத்தை மட்டுமே வளர்க்கின்ற கட்சிகள்!’’ என்று அவருடைய பேச்சின் சாராம்சம் முழுவதும் திமுகவைக் குறிவைத்துத் தாக்குவதாகவே இருந்தது.
திமுகவை இவ்வளவு கடுமையாகத் தாக்கிப் பேசிய மோடி, தப்பித்தவறியும் ‘தமிழகத்தில் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். அவரை ஆதரியுங்கள்!’ என்று ஒரு வார்த்தை கூடப் பேசவேயில்லை. இது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். பிரதமர் பிரசாரம் செய்த அதே மேடையில், கட்சியின் தேசியப் பொறுப்பில் உள்ள ஒருவர், கொங்கு மண்டலத்தில் அதிக சீட்களைப் பெற வேண்டுமென்பதையும் வெளிப்படுத்தியதும் அவர்களை பெரும் கோபத்திற்குள்ளாக்கியிருப்பதைப் பார்க்க முடிந்தது.
பிரதமர் மோடியின் கோவை விசிட்டில் தீர்வுகளும் இல்லை; அதிர்வுகளும் இல்லை!
**–பாலசிங்கம்**
�,”