விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267ஆவது பிறந்த நாளையொட்டி, முதல்வர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்டோர் அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சென்னிமலை அருகிலுள்ள செ. மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தார் தீரன் சின்னமலை. சிலம்பாட்டம், தடிவரிசை, மல்யுத்தம், வில்வித்தை, வாள்வீச்சு என அத்தனை வீரக் கலைகளையும் கற்று நிபுணத்துவம் பெற்றவர். இவரது இயற்பெயர் தீர்த்தகிரி. இவர் சிறுவயதில் இருக்கும் போது, கொங்கு நாடு மைசூரார் ஆட்சியிலிருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி அந்த வரிப்பணத்தை பிடிங்கி வந்து ஏழை மக்களுக்குக் கொடுத்தார். அப்போது வரிப்பணத்தை எடுத்துச் சென்ற தண்டல்காரரிடம், சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பணத்தைப் பறித்ததாகச் சொல் என்று அவர் சொன்னதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேகாரணமாக அவரது பெயர் சின்னமலை என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு ஈரோடு, காங்கேயம், சென்னிமலை, சங்ககிரி என கொங்கு மண்டலத்தில் ஒலிக்கத்தொடங்கிய தீரன் சின்னமலையின் வீரக்குரல் பின்னர் இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கியது. காரணம் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்துப் போரிட்டார். இறுதியாக அவர் 1805-ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டார். தீரன் சின்னமலையை கடைசி வரையில் போர் மூலம் ஆங்கிலேய அரசால் வெல்ல முடியவில்லை.
அப்படிப்பட்ட தீரன் சின்னமலையின் 267ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை, கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரும், தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தலைவர் ஈஸ்வரன் மற்றும் கவுன்சிலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அதுபோன்று அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், கட்சி ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
**-பிரியா**