திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா முதல்வர் குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், கழகத்தினர் கண்ணியமாகப் பேச வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து தனது பேச்சுக்கு ஆ.ராசா மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த சூழலில் பிரச்சாரத்தின் போது திமுக எம்.பி.தயாநிதி மாறன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து நேற்று இரவு தயாநிதிமாறன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வெறுப்பு அரசியல் செய்து இந்துக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் இடையேயான பாச உறவை என்றைக்கும் பிரிக்க முடியாது. சிறுபான்மையினரை ஒடுக்க நினைத்தால் அதற்கு எதிராக மு.க.ஸ்டாலின் உறுதுணையாக இருப்பார்
நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்டத்தை ஆதரித்துவிட்டுத் தேர்தல் அறிக்கையில், எதிர்ப்போம் என்று கூறி தேர்தலுக்காகப் பொய் சொல்கிறார்கள். ஏழை மாணவர்களின் மருத்துவ கனவைச் சிதைக்கும் வகையில் நீட் தேர்வை கொண்டு வந்தனர். தமிழகத்தில், நீட் தேர்வால் 14 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் தேர்வைக் கட்டாயமாக்கியுள்ளனர். உயர் கல்வியில் சேரவும் தகுதித் தேர்வு கட்டாயம் என்கின்றனர். எனவே தமிழகத்தின் உரிமையை காக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்தை நினைத்துப் பார்த்து அதிமுகவுக்குப் பாடம் புகட்ட வேண்டும்” என்றார்.
மேலும் அவர், ”அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜெயலலிதா எங்களுக்கு அம்மா, மோடி எங்கள் அப்பா என்கிறார். அப்படியானால் என்ன உறவுமுறை பாருங்கள். இதை நாம் சொன்னால் தவறு என்று சொல்வார்கள்” என்று பேசியுள்ளார்.
ஏற்கனவே ராசாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தயாநிதி மாறன் இவ்வாறு பேசியிருப்பது அரசியல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவிலிருந்து கண்டனமும் எழுந்து வருகின்றன.
**-பிரியா**
�,