x7.5% அரசாணை: எடப்பாடி முடிவின் அரசியல் பின்னணி!

politics

நீட் தேர்வு வந்த பிறகு கிராமப்புற பகுதிகளிலுள்ள, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது பெருமளவில் குறைந்துவிட்டது. இதனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க ஏதுவாக கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி சட்டமன்றத்தில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அது ஆளுநருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

ஆனால் நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தபிறகும் ஆளுநர் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்காமல் தாமதித்ததால் மருந்துவக் கலந்தாய்வும் பாதிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் இப்பிரச்சினையைக் கையிலெடுத்துப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு பதில் கடிதம் எழுதினார். அதில் தனக்கு நான்கு வாரம் தேவைப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனியும் ஆளுநரின் முடிவுக்குக் காத்திருக்க மாட்டோம் என்ற முடிவெடுத்து 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு தொடர்பாக அக்டோபர் 29 ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளார்.

அதில், “தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆலோசனையைப் பெற்று, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் பொருட்டு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, தற்போது சேர்க்கைப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த விஷயத்தில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளதால், சட்டமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசியலமைப்பின் 162ஆவது பிரிவின்படி அரசு எடுத்த கொள்கை முடிவின்படி உள் ஒதுக்கீட்டு உத்தரவை பிறப்பிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணையை சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

இந்த அரசாணைக்கு அரசியல் பின்னணியும் இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆளுநரையும், அதை வலியுறுத்தாத தமிழக அரசையும் கண்டித்து, அக்டோபர் 24 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க. சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,

“ ஆளுநரைப் பொறுத்தவரை மிகவும் சுறுசுறுப்பானவர். ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தவர். வரைமுறைகளை மீறி, ‘தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியா, கவர்னரா?’ என்று சந்தேகம் வரக்கூடிய அளவுக்குச் சுற்றுப்பயணம் செய்தவர். அவ்வளவு சுறுசுறுப்பானவர் இதில் முடிவெடுக்கத் தாமதம் செய்ய வேண்டிய அவசியம் என்ன, அலட்சியம் என்ன? ‘எடப்பாடி அரசு எப்படி நம்மிடம் கேள்வி கேட்கலாம்? எடப்பாடி கேட்க மாட்டார்’ என்பதுதான் அவர் அலட்சியத்துக்குக் காரணம்.

எடப்பாடி கேட்காவிட்டாலும் இந்த ஸ்டாலின் கேட்பான்; திராவிட முன்னேற்றக் கழகம் கேட்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அதற்கான அடையாளம்தான் இந்தப் போராட்டம்.

கடந்த 21-ஆம் தேதி, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினேன். கடிதம் அனுப்பியது மட்டுமல்லாமல், அ.தி.மு.க. இதற்காகப் போராடும்போது நாங்களும் இணைந்து போராடத் தயார் என்று அறிவித்திருந்தேன். நேற்று முன் தினம் ஆளுநர் அவர்கள் எனக்குப் பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார். நீங்கள் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். என்னை மதித்து பதில் கடிதம் அனுப்பியதற்காக ஆளுநர் அவர்களுக்கு முதலில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று முதல்வரை விட எதிர்க்கட்சித் தலைவரான தனக்கு ஆளுநர் மதிப்பளிப்பது போல பேசினார் ஸ்டாலின்,

மேலும், ” இதைப் பரிசீலித்து சட்டரீதியாக முடிவெடுக்க மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஆகும் என்று ஆளுநர் சொல்லியிருக்கிறார். இதே பதவியைப் பெறுவதற்காகத் தவழ்ந்து போய், ஊர்ந்துபோய் யாருடைய காலிலோ விழுந்து பதவியைப் பெற்றீர்களே, மசோதாவை நிறைவேற்ற ஆளுநரிடம் மன்றாட முடியாதா? அவரிடம் தவழ்ந்து போகச் சொல்லவில்லை. போய்க் கேட்க முடியாதா?”என்று ஸ்டாலின் கேட்டிருந்தார். இது முதல்வரை கடுமையாக டென்ஷன் படுத்தியது.

அதிமுகவினர் வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது,

“திமுக இந்த விஷயத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதைத் தடுக்கும் அதேநேரம் சட்ட ரீதியாகவும் இதைத் தீர்க்க விரும்பினார் முதல்வர்.

முதல்வரின் தாயார் மறைவுக்காக இரங்கல் தெரிவிக்க சென்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முதல்வரிடம் இந்த விவகாரம் தொடர்பாக சில சட்ட ஆலோசனைகளையும் தெரிவித்திருக்கிறார். இந்தப் பின்னணியில் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், தலைமைச் செயலாளர் கே. சண்முகம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி, ’இட ஒதுக்கீடு பிரச்சினையில் அதிமுக எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை. எம்ஜிஆர் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என அறிவித்து அதை மக்கள் ஏற்றுக்கொள்ளாததால், திரும்பப் பெற்றார். ஜெயலலிதா 69% இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்தினார். இதற்காக சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டமும் பெற்றார். இப்போது நீட் விவகாரத்தில் நாம் கொண்டு வந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு என்பது அனைவராலும் வரவேற்கப் படுகிற நிலையில், ஆளுநர் ஒப்புதல் கொடுக்காவிட்டாலும் சட்ட ரீதியாக இதற்குத் தீர்வு காண வேண்டும் ’ என்று கூறியிருக்கிறார்.

அந்த ஆலோசனையில், அரசியல் ரீதியாக இந்த விவகாரத்தில் திமுக தன்னை மிகவும் கடுமையான விமர்சனம் செய்வது ஒருபக்கம் என்றால், ஆளுநருக்கு தமிழக அரசு அடிபணிந்து போகாது என்பதை மத்திய அரசுக்கும் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் விவாதித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதற்காக காத்திருந்த முதல்வர், பாஜகவினரும் இந்த உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தரவேண்டும் என்று அறிவித்துவிட்ட நிலையில்தான், சட்ட ரீதியாக இம்முடிவை எடுத்திருக்கிறார்” என்கிறார்கள்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.