தேவிகுளம் தொகுதியில் சாதிக்கணக்கு- கேரள வேட்பாளர் சதுரங்கம்

Published On:

| By Balaji

கேரளத்துக்குள் இப்போது இருந்தாலும், தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளின் தமிழ் நிலத் தொடர்ச்சியை இன்றைய தேர்தல்கூட சொல்லிக்கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க கேரளக் கட்சிகளை மையமாகக் கொண்டதாக இருந்தாலும், அங்கு கணிசமான வாக்காளர்கள் தமிழர்கள்தான்!

இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் 65 சதவீதம் பேரும், பீர்மேடு தொகுதியில் 35 சதவீதம் பேரும், உடும்பஞ்சோலை தொகுதியில் 22 சதவீதம் பேரும் தமிழ் வாக்காளர்கள் என்கின்றன, கேரள தேர்தல் புள்ளிவிவரங்கள். மாவட்டத்தில் இருக்கும் 10 பஞ்சாயத்துகளில் 90 சதவீதத்துக்கும் மேல் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்கிறது, இன்னொரு புள்ளிவிவரம்.

இதில் பீர்மேட்டைப் பொறுத்தவரைக் கணிசமான வாக்காளர்கள் மலைத்தோட்டத் தொழிலாளர்கள்தான். பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துசென்ற விவசாயத் தொழிலாளர்கள். இவர்களிலும் மலைத்தோட்டங்களில் லயம் எனப்படும் லைன் வீடுகளில் வசிக்கும் தமிழர்களே அங்கு தேர்தல் முடிவைத் தீர்மானிக்கிறார்கள்.

உடும்பஞ்சோலை தொகுதியில் இருக்கும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஏலக்காய் தோட்டங்களில் வேலைசெய்கிறார்கள்.

தேவிகுளம் தொகுதி கேரள மாநிலத்தின் ஒரே மொழிச் சிறுபான்மையினர் தொகுதி ஆகும். தேர்தலில் தமிழர்களின் பங்களிப்பு ஓங்கியிருக்கும் இடம் இதுதான். இந்தத் தொகுதியில்தான் மூணாறு இடம்பெற்றுள்ளது. பெரும்பாலும் மலைத்தோட்டத் தொழிலாளர்களே இந்த வட்டாரத்தில் வசிக்கின்றனர். பிரிட்டன் காலத்தில் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களின் வாரிசுகள் தற்போது மூணாறு பகுதியில் வசிக்கிறார்கள்.

தேவிகுளம் தொகுதியில் வேட்பாளரை அறிவிப்பதில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் நீயா நானா என ஆட்டம் காட்டிவருகின்றன. கடந்த 10ஆம் தேதியன்று சிபிஎம் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் தேவிகுளம் தொகுதிக்கும் மஞ்சேஸ்வரம் தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

தேவிகுளத்தில் மொத்தத்தில் 65சதவீதம் உள்ள தமிழர் வாக்காளர்களில், பெரும்பாலானவர்கள் தலித் மக்கள். (கேரள அரசின் பட்டியல் சாதியினர் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளபடி) பள்ளர் சமூகத்தினரும் ஆதிதிராவிடர் சமூகத்தினரும் இங்குத் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்துவருகின்றனர்.

சிபிஎம் கட்சியில் பள்ளர் சமூகத்திலிருந்து ஆர்.ஈஸ்வரன், ஆதிதிராவிடர் சமூகத்திலிருந்து ஏ.ராஜா என இரண்டு பேரைத் தேர்வுசெய்து வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கூட்டணியிலும் இரண்டு பேரை இறுதிப்பட்டியலில் வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள்.

எதிரணியில் நிறுத்தப்படும் வேட்பாளரைப் பொறுத்து தங்கள் வேட்பாளரை அறிவிக்கலாம் என இரு தரப்பும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றன.

**- இளமுருகு**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment