வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே முழுமையாக கரையை கடந்தது.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக நேற்று சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்கனமழை பெய்தது. திருப்பூர், விழுப்புரம், நெல்லை, கடலூர், ஈரோடு, உதகை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்தது. பல இடங்களில் அணைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையிலும் பலத்த காற்றுடன் தொடர்மழை பெய்து வந்தது. தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும் மழை பெய்யும். ஆனால், அந்தளவுக்கு கனமழை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தொடர்கிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழை முதல் மிக அதிகனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி,தருமபுரி, கிருஷ்ணகிரி,கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,சேலம்,பெரம்பலூர், வேலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கடலூர்,அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி திறந்துவிடப்பட்டு வந்த நிலையில், மழை குறைந்ததால் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே முழுமையாக கரையை கடந்தது. அதிகாலை 1.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் 4 மணியளவில் முழுமையாக கரையை கடந்துள்ளது. இதனால், சென்னையில் அதிகாலை முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. வட தமிழகம், புதுச்சேரியின் ஒருசில இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
**-வினிதா**
�,