வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 13ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இன்றும் சென்னை உள்பட சில இடங்களில் சாரல் முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் பல இடங்களில் அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில், பல ஆண்டுகளுக்குப் பின்பு வாலாஜா அணைக்கட்டு தடுப்பணைக்குப் பொன்னை, பாலாற்றிலிருந்து வந்த 85 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதுபோன்று வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள ரங்கம்பேட்டை கானாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளநீர் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பேரணாம்பட்டு பகுதியில் அஜிஜியா தெருவில் அனிஷா பேகம் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த வீட்டில் ஆசிரியை கவுசர் மற்றும் அவரது மகள் மகபூப் தன்ஷிலா வாடகைக்கு குடியிருந்தனர். நேற்று இரவு அதீத கனமழை காரணமாக தெருவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனால், அனுஷா பேகம் வீட்டில் ஆசிரியை கவுசர், மகபூர் தன்ஷிலா மற்றும் அக்கம் பக்கத்தினரும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இன்று(நவம்பர் 19) காலை திடீரென்று அந்த வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதனால் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 4 குழந்தைகள், 5 பெண்கள் என மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.அதாவது ஹபிரா (4), மனுலா (8), தமீத் (2), ஹப்ரா (3), மிஸ்பா பாத்திமா (22), அனிஷா பேகம் (63), ரூஹிநாஸ் (27), கவுசர் (45), தன்ஷிலா (27) உயிரிழந்தனர்.
ஒன்பது பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,குடியாத்தம் செம்பள்ளி கிராமத்தில் மழைநீர் சூழ்ந்த பகுதியில் தவித்து வரும் 230 பேரை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு சென்றுள்ளது.
வேலூரில் வீடு இடிந்து விழுந்தததில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக 54 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,