12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காந்தி சிலையிலிருந்து விஜய் சவுக் வரை பேரணி சென்றனர்.
கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். குளிர்கால கூட்டத்தொடர் முடியும் வரை இவர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று தடை விதித்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.
இதனைக் கண்டித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோன்று எதிர்க்கட்சி எம்.பி.க்களும் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மாநிலங்களவை அலுவல் நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இன்று மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் மீண்டும் எழுப்பினர். பின்னர் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்து, பேரணி நடத்தினர். இந்த பேரணியில் மக்களவை எம்.பிக்களும் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இது ஜனநாயக படுகொலை.
பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை. இது ஜனநாயகத்தை நடத்துவதற்கான வழி அல்ல. எப்போதெல்லாம் பிரச்சினைகளை எழுப்ப முயல்கிறோமோ அப்போதெல்லாம் அதைச் செய்யவிடாமல் தடுக்கப்படுகிறோம்.
12 எம்.பி.க்களின் இடைநீக்கம் என்பது இந்திய மக்களின் குரல் நசுக்கப்பட்டதன் அடையாளமாகும். அமளிகளுக்கு நடுவே மசோதாக்களுக்குப் பின் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது நாடாளுமன்றத்தை நடத்தும் முறையல்ல. இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலையாகும்.
உத்தரப் பிரதேசத்தில் ஒரு அமைச்சர் விவசாயிகளைக் கொன்றார். பிரதமர் மோடிக்கு இது தெரியும். இருந்தாலும் அந்த அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படமாட்டார். உண்மை என்னவெனில் 2,3 முதலாளிகள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்.
பிரதமரும், மாநிலங்களவை தலைவரும் வெறுமனே இயக்குபவர்கள் மட்டும்தான். இவர்களுக்குப் பின்னால் விவசாயிகளின் வருமானத்தைத் திருட நினைக்கும் சக்திகள் இருக்கின்றன. இந்த சக்திதான் இவர்களை இயக்குகின்றன என்று குறிப்பிட்டார்.
**-பிரியா**
�,