மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப ஆக்சிஜனை விநியோகிக்கும் மத்திய அரசு, டெல்லிக்கு மட்டும் ஏன் குறைவாக ஆக்சிஜனை கொடுக்கிறது? என டெல்லி அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா பாதிப்பினால் டெல்லியின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ஆக்சிஜன், படுக்கை வசதி தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, உடல்களை எரிக்க இடமில்லாமல் மக்கள் தகன மேடைகளை தேடி அலைந்து திரிகின்றனர். தற்போது உடல்களை எரிக்க விறகுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு நாளும் மோசமான பாதிப்புகளை டெல்லி சந்தித்து வருகிறது.
ஆக்சிஜன் தொடர்பான விவகாரத்தை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இன்று(ஏப்ரல் 29) நீதிபதிகள் விபின் சங்கி, ரேகா பல்லி ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, டெல்லி அரசு சார்பில், “மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு, அவர்கள் கேட்கும் அளவுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது. ஆனால், டெல்லிக்கு மட்டும் நாங்கள் கேட்கும் அளவுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்படுவதில்லை. அது ஏன் என்று தெரியவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
டெல்லி அரசு வைக்கும் இந்தக் குற்றச்சாட்டு உண்மையெனில், அதற்கான விளக்கத்தை மத்திய அரசு தர வேண்டும். எப்படி இருப்பினும், மத்திய அரசு விரைந்து மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
**அபிமன்யு**
.�,