டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் ஒருசில கட்டுப்பாடுகளுடன் ஒரு வாரக் கால ஊரடங்கை அறிவித்துள்ளார்.
சமீப நாட்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு நேற்று மாலை 6.30 மணியளவில் 471 ஆக பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. 400க்கும் அதிகமான காற்று தரக் குறியீடு அபாயகரமானதைக் குறிக்கிறது என்பதால் டெல்லியின் தற்போதைய நிலை மிக மோசமாக உள்ளது.
இதுதொடர்பான வழக்கு ஒன்றை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியின் காற்று தரத்தை மேம்படுத்த இரண்டு மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், அவசர கால அடிப்படையில் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கை அமல்படுத்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின், சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
அதில், காற்று மாசுபடுவதைக் குறைக்கும் வகையில், திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்துக்கு டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படுகிறது. ஆன்லைனில் பாடம் நடத்தப்படும். குழந்தைகள் மாசுபாடான காற்றை சுவாசிக்கக் கூடாது என்பதால் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
டெல்லியிலுள்ள அரசு ஊழியர்கள் ஒரு வாரத்துக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும்.
தனியார் நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நவம்பர் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,