ஆதி வழியே பேசிய எடப்பாடி: அவசரப்பட வேண்டாம் -இளங்கோவன் ஆலோசனை!

Published On:

| By admin

அதிமுகவில் சசிகலா, தினகரன் ஆகியோரை இணைத்துக் கொண்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும் என நேற்று மார்ச் 2ஆம் தேதி, தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தலைமையில் நிர்வாகிகள் கூடி முடிவு எடுத்துள்ளனர்.

இந்த கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் கைலாசபட்டி பண்ணை வீட்டில் நடந்ததால் இதற்கு பின்னால் ஓபிஎஸ் முழுமையாக இருக்கிறார் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

நேற்று இரவு இந்த தகவல் அறிந்த உடனேயே அதிமுகவில் பல்வேறு திசைகளிலிருந்தும் வெவ்வேறு கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்றன.
இன்று காலை சென்னை அடையாறில் உள்ள தன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன்.

**தொண்டர்கள் முடிவே என் முடிவு**

“இன்னொரு கட்சிக்குள் நடக்கும் விஷயங்கள் பற்றி நான் பெரிதாக கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. தேர்தலில் வெற்றி பெற்று அம்மாவின் உண்மையான ஆட்சி அமைப்பது தான் எங்கள் இலக்கு. அதேநேரம் டிடிவி தினகரன் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்க முடியாது. என் தொண்டர்கள் தான் எனது எஜமானர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுபற்றி நிர்வாகிகள் மூலம் அறிந்து அதன் அடிப்படையிலேயே நான் முடிவெடுக்க முடியும்.
நேற்று தேனியில் கூடிய கூட்டம் பற்றி தொலைக்காட்சிகளில் பார்த்தேன். தோல்விகளை அடுத்து அவர்கள் சுயபரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
எனக்கு யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. யாரும் கஷ்டப்பட வேண்டும் என்று நினைக்கும் கொடூரமானவன் அல்ல நான். ஒரு தேனி மாவட்டத்தில் முடிவெடுத்ததை வைத்து எதுவும் சொல்ல முடியாது. ஒட்டுமொத்த அதிமுகவும் என்ன முடிவெடுக்கிறது என்பதை பொறுத்தே இதில் கருத்து சொல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார் டிடிவி தினகரன்.

**எடப்பாடி ஆலோசனை**


இதே நேரம் இன்று காலை 11 மணி அளவில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்திற்கு அதிமுக பிரமுகர் செம்மலை, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரான ஆத்தூர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அவர்களோடு சுமார் மூன்று மணி நேரம் தன் வீட்டில் ஆலோசனை நடத்தினார். இடையிடையே வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இடம் தொலைபேசியிலும் பேசினார் எடப்பாடி.

**ஆதி ராஜாராமுக்கு எடப்பாடி ஆணை**
அந்த வகையில் சென்னையில் அதிமுக தலைமைக் கழகம் அமைந்துள்ள பகுதியை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளரான ஆதிராஜாராமிடம் எடப்பாடி பேசினார். வழக்கமாக இது போன்ற தருணங்களில் உடனடியாக எடப்பாடியின் கருத்தை எதிரொலிக்கும் ஜெயக்குமார் பேட்டி கொடுக்க வாய்ப்பில்லாத நிலையில், எடப்பாடி பேசிய சில நிமிடங்களில் ஆதிராஜாராம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்களோடு சென்றார்.

அங்கே செய்தியாளர்களிடம் பேசிய ஆதிராஜாராம், “தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த திமுக இன்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

அதுபோல பல தோல்விகளைக் கடந்து அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. அம்மா காலத்தில் பெற்ற தோல்வியை விட கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற தோல்வி மோசமானது அல்ல. எடப்பாடி அண்ணன் தலைமையில் அதிமுக கூட்டணி கட்சிகள் 70க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது.
சில ஆதாயம்தேடிகள், சில சந்தர்ப்பவாதிகள் தங்கள் பழைய எஜமானர்களுக்கு கால் கழுவுவதற்காக சில காரணங்களை கூறுகிறார்கள்.
சசிகலாவை கட்சிக்குள் சேர்ப்பதில்லை என ஏற்கனவே 90% மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி ஆகிவிட்டது. இது ஓ. பன்னீர்செல்வத்துக்கும் தெரியும்.

இவர்கள் இல்லாமலேயே அதிமுக விரைவில் பெரிய வெற்றியைப் பெறும்”என்று மறைமுகமாக பன்னீர்செல்வத்துக்கு எச்சரிக்கை விடுத்து பேட்டி அளித்தார் ஆதிராஜாராம்.

இதைத் தொலைக்காட்சியில் பார்த்த எடப்பாடி பழனிச்சாமி, “இதுதான் நம் கருத்து” என்று சொல்லியிருக்கிறார்.

**அவசரப்பட வேண்டாம்: ஆத்தூர் இளங்கோவன்**

தனது பண்ணை வீட்டில் நடந்த கூட்டம் பற்றி ஒ. பன்னீர்செல்வமே விளக்கம் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறார் எடப்பாடி. நேற்று பேட்டியளித்த தேனி மாவட்ட செயலாளர் சையது கான் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது எடப்பாடியின் இல்லத்தில். .

ஆனால் எடப்பாடியின் வலதுகரமாக அறியப்படும் ஆத்தூர் இளங்கோவன், “இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்” என்று எடப்பாடியிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
பல மாவட்ட செயலாளர்களிடமும் பேசிய எடப்பாடி பழனிச்சாமி பிற்பகல் 2.30 மணிக்கு ஆலோசனையை முடித்தார். வீட்டு வாசலிலேயே காத்திருந்த செய்தியாளர்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் புறப்பட்டார்கள் செம்மலையும் இளங்கோவனும்.

இதே நேரம் தேனியில் கிளைச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளும் முழுமையான மாவட்ட கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்கிறார் சையது கான்.

இதனால் அதிமுகவில் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share