கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம், இடம் பெற்றுள்ளதை நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் நாடு முழுவதும் போடப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது தேர்தல் விதிமுறை மீறல் என கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பதை நீக்க வேண்டும் என்று அண்மையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இந்நிலையில் நேற்று கேரள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மிதுன் ஷா தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த புகார் கடிதத்தில், ”கேரளாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த சூழலில் மாநிலத்தில் இலவசமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு சான்றிதழ் கொடுக்கும் போது அதில் பிரதமர் மோடியின் புகைப்படமும் அவர் பேசிய வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது. பிரதமரின் படம் இடம்பெற்றிருப்பது வாக்காளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுத்து அதனை நீக்க வேண்டும்.
தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் எனக்கு அளிக்கப்பட்ட சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருந்ததால் இந்த புகாரை அளிக்கிறேன். தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறி இருப்பதால் இதை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழகம் அசாம் கேரளா, புதுச்சேரி மேற்கு வங்கம் என தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பிரதமர் மோடி உருவப்படம் இருக்கும் விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள், பதாகைகளை நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
**-பிரியா**
�,