சமூக நீதி கண்காணிப்புக் குழுவில் பெண் உறுப்பினர்!

Published On:

| By Balaji

சமூக நீதி கண்காணிப்புக் குழு உறுப்பினராக டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சமூக நீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் ”சமூகநீதிக் கண்காணிப்பு குழு” அமைக்கப்படும். இக்கண்காணிப்புக் குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும் என்று சமூக நீதி அரசாணையின் நூற்றாண்டு நாளான கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

தொடர்ந்து அக்டோபர் 23ஆம் தேதி “சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவினை” அமைத்து அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, சமூகநீதி கண்காணிப்புக் குழுவின் தலைவராக சுப. வீரபாண்டியன் மற்றும் உறுப்பினர்களாக முனைவர் தனவேல், முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், ஆர்.ராஜேந்திரன், கோ. கருணாநிதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

சமூகநீதி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் வரப்பெற்றாலும், சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் இக்குழுவில் பெண் உறுப்பினர்கள் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று(அக்டோபர் 24) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவில், மாணவர் சமுதாயத்துக்கான சமூக நீதி, மகளிர் உரிமை, பெண்களுக்குச் சமூகப் பங்களிப்பில் அதிகாரமளித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டுள்ள டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்தை உறுப்பினராக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share