கொல்லப்பட்ட முந்திரி தொழிலாளி குடும்பத்துக்கு பாமக நிதியுதவி!

Published On:

| By Balaji

கடலூர் திமுக எம்பி ரமேஷ் தனது முந்திரி ஆலையில் பணியாற்றிய கோவிந்தராஜ் என்ற தொழிலாளியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது கடலூர் கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கிறார்.

இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்து பாமக கையிலெடுத்துப் போராடி வருகிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரணை வேண்டுமென்று பாமக வழக்கறிஞர் பாலு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பிரேதப் பரிசோதனையில் உயர் நீதிமன்ற உத்தரவும் பாமக வழக்கின் பேரிலேயே கிடைத்தது. எம்பி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர் கைது செய்யப்பட வேண்டுமென்று பாமக வழக்கறிஞர் பாலு கொல்லப்பட்ட கோவிந்தராஜுவின் மகன் செந்தில்வேலை அழைத்துக் கொண்டு டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து வலியுறுத்தினார். இப்படி கள ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் இந்த விவகாரத்தை பாமக தீவிரமாக கையிலெடுத்து செயல்பட்டது.

இந்நிலையில் அடுத்த கட்டமாக கொல்லப்பட்ட தொழிலாளி கோவிந்தராஜின் குடும்பத்துக்கு நிதியுதவியையும் பாமக செய்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜின் மகன் செந்தில் வேல்- அவரது மனைவி வனஜா, கோவிந்தராசுவின் மகள் வளர்மதி – மகளின் கணவர் திருமுருகன் ஆகியோர் நேற்று )அக்டோபர் 16) சென்னையில் பாமக இளைஞரணிச் செயலாளரும் எம்;பி.யுமான அன்புமணியை சந்தித்தனர். சந்தித்து தங்களின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்காக பாமக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். அத்துடன் கோவிந்தராஜுவின் பேரக் குழந்தைகளின் கல்விச் செலவை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக் கொள்ளும் என்றும் உறுதிகொடுத்துள்ளார்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share