பாஜகவை எதிர்த்து மறியல், நடைபயணம்: காங்கிரஸ் அறிவிப்பு!

politics

தமிழக காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு ஜூன் 6,7 தேதிகளில் மாமல்லபுரத்தில் நான்கு பிரிவுகளாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து இன்று (ஜூன் 7) மாலை சிந்தனை அமர்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

“ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்ற அகில இந்திய சிந்தனை அமர்வைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு நேற்றும் இன்றும் நடைபெற்றது. இரு நாட்களும் நான்கு பிரிவுகளாக 12 அமர்வுகள் விரிவான விவாதம் நடைபெற்றது. ஜனநாயக ரீதியில் இந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக சிந்தனை அமர்வுகள் நடைபெறும்.

இந்தியா முழுதும் விஷ விருட்சமாக தோன்றும் பாஜகவை நமது தத்துவார்த்தத்தின் மூலமாக தகர்த்தெறிய வேண்டும் என்பதுதான் இந்த அமர்வுகளின் முக்கிய நோக்கம்.
மத வாதத்துக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து மாபெரும் மகாபாராதப் போரை நடத்த வேண்டும். நாம் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். இந்திய எல்லைக்குள் வாழும் அனைவரும் இந்தியர் என்பதுதான் காங்கிரஸ் கட்சி. ஆனால் இந்திய எல்லைக்குள் இருப்பவர்களையே பிரித்துப் பார்ப்பதுதான் பாஜக. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு. ஆழமான கொள்கைப் பற்று, கடுமையான களப்பணி மூலமாகவே பாஜகவை அகற்ற முடியும்.

இந்த மாமல்லபுரம் சிந்தனை அமர்வின் வெளிப்பாடாக வரும் 28 ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாஜகவுக்கு எதிரான மறியல் போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். இது தமிழக காங்கிரஸின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக அமையும். மக்களுக்கு தெளிவு ஏற்படுத்தும் விதமாக அமையும்.
ஆகஸ்டு 9 ஆம் தேதியில் இருந்து பாஜக அரசின் தவறான போக்குகளை வெளிக்காட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 கிலோ மீட்டர் நடைபயணம் செய்வது என தீர்மானித்துளோம். இந்த நடைபயணத்தில் இந்திய, தமிழக மக்களுக்கு காங்கிரஸ் தனது ஆட்சியில் என்ன செய்திருக்கிறது, இப்போது பாஜக என்ன செய்துகொண்டிருக்கிறது என்பது பற்றி மக்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லுவோம்” என்று தெரிவித்தார் அழகிரி.

மேலும் பேசிய அழகிரி, “ இன்று இந்திய அரசு உலக அரங்கில் தலைகுனிந்து நிற்கிறது. அதற்குக் காரணம் பாஜகவினர் முகமது நபி பற்றி தவறான கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள். ஏறக்குறைய ஏழுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் இந்தியாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. அதன் காரணமாக இந்திய அரசு மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்திருக்கிறது. பாஜக செய்த தவறுக்காக இந்திய அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது” என்றார் அழகிரி.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *