டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பான பிரச்சினை இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 2) தொடங்கியது. முன்னதாக டெல்லி வன்முறைக்குப் பொறுப்பேற்று உள் துறை அமைச்சர் அமித் ஷா பதவிவிலக வேண்டுமென நாடாளுமன்ற வளாகத்தின் காந்தி சிலை அருகே ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவை காப்பாற்ற வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். இதுபோலவே மத்திய அரசு பதிலளிக்க வலியுறுத்தி திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் தனித்தனியாக போராட்டம் நடத்தினர்.
மக்களவை ஆரம்பித்ததும் பிப்ரவரி 28ஆம் தேதி காலமான வால்மீகி நகரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் எம்.பி பைத்யநாத் பிரசாத் மஹ்தோவின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை தொடங்கியதும் மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, அவை நடவடிக்கைகள் தொடர்பான குறிப்புகளை வாசித்தார். மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், காங்கிரஸ் எம்.பி மோதிலால் வோரா ஆகியோர் பேசினர். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் எழுந்து டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அனுமதி மறுத்தார். எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக முழக்கங்கள் எழுப்பவே, அவையை பிற்பகல் 2 மணி வரை தள்ளிவைத்தார்.
**எழில்**�,”