பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்கான விமானச் செலவுகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில் செலவிடப்பட்ட தொகை விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமென மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி மலூக் நகர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துபூர்வமாக நேற்று (மார்ச் 4) பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன், ஐந்து ஆண்டுகளில் பிரதமர் மோடியின் பயணத்துக்கான தனிப்பட்ட விமானத்துக்காக மட்டும் 446.52 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். 2015-16ஆம் ஆண்டில் ரூ.121.85 கோடி, 2016-17ஆம் ஆண்டில் ரூ.78.52 கோடி, 2017-18ஆம் ஆண்டில் ரூ.99.90 கோடி, 2018-19ஆம் ஆண்டில் ரூ.100.02 கோடி, 2019-20ஆம் ஆண்டில் ரூ.46.23 கோடியும் செலவிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
2019-20ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சில பயணங்களுக்கு மட்டும் ரசீதுகள் இன்னும் பெறப்படவில்லை என்றும் அவரது விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இணையதளத்தில், அவர் பிரதமராகப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 44 நாடுகளுக்குப் பயணம் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் ஒரே நாட்டுக்குப் பலமுறை பயணம் சென்றுள்ளதால் அதன் எண்ணிக்கை 100ஐ தாண்டும். 2019ஆம் ஆண்டில் தென்கொரியா, இலங்கை, மாலத்தீவு, பிரான்ஸ், பூடான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய ஒன்பது நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடி இந்தியாவிலேயே இல்லாமல் அடிக்கடி வெளிநாடு சென்றுவிடுவதாகவும், இதனால் வீண் செலவுகள்தான் ஏற்படுகின்றன என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்க, பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களால் இந்தியாவுக்கு அந்நிய முதலீடுகள் ஏராளமாக வருவதாகவும், தேசப் பாதுகாப்பு தொடர்பான முக்கியப் பிரச்சினைகளில் மற்ற நாடுகளின் ஆதரவுகள் கிடைப்பதாகவும் பாஜகவினர் வாதிடுகின்றனர்.
**-எழில்**
�,