fபேனர் எச்சரிக்கை: உதயநிதி தான் காரணமா?

Published On:

| By Balaji

திமுக தொடங்கி சுமார் முப்பதாண்டுகளுக்கு மேல் வரையில் அக்கட்சிக்கு இளைஞரணி என்ற அணியே தேவைப்படவில்லை. காரணம், திமுகவைத் தொடங்கி நடத்தியவர்கள் எல்லாம் துடிப்பான இளைஞர்கள்தான். அவர்கள் எல்லாம் நடுத்தர வயதை தாண்டிக் கொண்டிருந்த நிலையில்தான் திமுகவில் இளைஞர் அணி 1981 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் தொடங்கப்பட்டது.

இன்றைக்கு திமுக இளைஞரணியின் 41 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பலரும் வாழ்த்துகளை பெற்றும் தெரிவித்தும் வருகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக ஒரு வீடியோவை தனது சமூக தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் திமுகவை அண்ணா தொடங்கியதில் இருந்து கடந்த தேர்தலில் திமுகவின் இளைஞரணி சார்பில் 4 லட்சம் நிர்வாகிகள் பணியாற்றியது வரை குறிப்பிட்டிருக்கிறார்.

இளைஞர்கள் அரசியல் பேசக் கூடாது என்ற நிலையை மாற்றி இளைஞர்கள் சரியான இடத்தில் இருந்து சரியான அரசியலை செய்து, தமிழகத்துக்கு எதிரான சக்திகளை முறியடிக்க வேண்டும் என்றும் அந்த வீடியோவின் மூலம் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

இளைஞரணியின் 41 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பெரிய பெரிய பேனர்கள் வைக்க திமுக இளைஞரணியினர் திட்டமிருந்த நிலையில்தான்… ஜூலை 18 ஆம் தேதி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து அந்த அறிக்கை வெளிவந்தது.

“பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் இன்னும் கூட ஆங்காங்கே கழகத்தினரும் – கழக நிர்வாகிகளும் பேனர்களை வைப்பது தொடர்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் சென்ற அ.தி.மு.க. ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட பேனர் கலாச்சாரத்தால் மரணங்களும், விபத்துக்களும் நிகழ்ந்த நிலையில் – “எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கமாட்டோம்” என்று முதன் முதலில் உயர்நீதிமன்றத்தில் கழகத் தலைவர் அவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தது என்பதைக் கழகத்தினர் அனைவரும் அறிவீர்கள்.

அதன்பிறகு, கழகத்தினர் பெரும்பாலானோர் பேனர் வைக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர் என்றாலும், ஒரு சிலர் இன்னும் பேனர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளைக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. ஆகவே அனுமதியின்றி பேனர்கள் ஏதும் இனி வைக்கவே கூடாது என்று கழகத்தினர் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கழகத் தலைவர் அவர்களின் ஆணையை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”என்று எச்சரித்திருந்தார் ஆர்.எஸ்.பாரதி.

இந்த எச்சரிக்கைக்கும், இதை இளைஞரணியின் 41 ஆவது ஆண்டு விழாவுக்கு சில நாட்கள் முன்னால் வெளிட்டமைக்கும் ஒரு பின்னணி இருக்கிறது.

2019 செப்டம்பர் மாதம் சென்னை பள்ளிக்கரணையில் அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக வின் பேனர் விழுந்து டூவீலரில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் பரிதாபமாக பலியானார். அப்போது தமிழக மக்களின் ஒட்டு மொத்த கோபமும் பேனர்கள் மீது திரும்பியது.

மக்களின் மனசாட்சியை உணர்ந்த சென்னை உயர்நீதிமன்றம் சில வழக்கறிஞர்களின் மனுவையடுத்து இந்த விவகாரத்தை கையில் எடுத்து விசாரித்தது.

இந்த வழக்கில் இனி அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது நீதிமன்றம்.

இதனடிப்படையில் அப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படி… திமுக சார்பில் எந்தவித பேனர்களும் வைக்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனாலும் கட்சியின் ஒவ்வொரு நிர்வாகிகளையும் கையை பிடித்து தடுக்க முடியாது என்பதைப்போல திமுகவில் ஆங்காங்கே பேனர்கள் வைத்தபடியும் இருந்தார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விட்ட நிலையில் மீண்டும் திமுகவினர் பேனர்களை வைக்க தொடங்கினார்கள்.

முதல்வர் ஸ்டாலின் கோட்டைக்கு செல்லும் வழியில் வைத்திருந்த வரவேற்பு பேனர்களை உடனடியாக அகற்ற சொன்னது சென்னை மாநகர் திமுகவினரிடையே பரபரப்பாக பேசப்பட்டது. சென்னையைத் தாண்டி தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் தன் வருகையின்போது பேனர்கள் வைக்க பல கட்டுப்பாடுகளை விதித்தார் ஸ்டாலின்.

ஆனால் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எந்த ஊருக்கு சென்றாலும் ஸ்டாலின் வருகைக்கு இணையாகவோ அல்லது அவரை விட ஒருபடி அதிகமாக தான் உதயநிதிக்கு வரவேற்புகள் அளிக்கப்பட்டன. இந்த வரவேற்புகளில் பேனர்களுக்கும் குறைவில்லை.

உதயநிதி பயணம் சென்ற பகுதிகளிலிருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த தகவல்களின்படி சாலையோரங்களில் ஆக்கிரமித்தும் பாதசாரிகளுக்கு இடைஞ்சலாகவும் ஆங்கங்கே பேனர்கள் வைக்கப் படுகின்றன என்று தெரிந்தது.

உதயநிதியிடம் இதுபற்றி நேரடியாகவே தெரிவித்து விட்டார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் உதயநிதியோ, நான் என்ன பண்றது? வேணாம்னு தான் சொல்றேன். நிர்வாகிகள் தான் இது போல அதிகம் வைக்கிறாங்க. இனி நானும் சொல்லித் தடுக்க பார்க்கிறேன்”என்று பதில் சொல்லியுள்ளார்.

அதற்குப் பிறகு அண்மையில் சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு உதயநிதி பயணம் செய்தார். அவர் போகும் வழிகளில் எல்லாம் வரவேற்பு பேனர்கள் பல இடங்களில் இருப்பதாக முதல்வருக்கு தகவல் போனது. உதயநிதி மீண்டும் சென்னைக்கு வரும் வரை காத்திருக்காமல் உடனே அவருக்கு போன் செய்துள்ளார் ஸ்டாலின்.

கடலூருக்கு சென்றுகொண்டிருந்த உதயநிதியிடம்,”என்னப்பா இன்னிக்கும் நீ போற இடங்களில் அதிக பேனர்கள் வைக்கப்பட்டுருக்குனு கேள்விப்பட்டேன். பாத்துக்கோ” என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இந்த திடீர் போன் காலை எதிர்பார்க்காத உதயநிதி மீண்டும் இளைஞரணி நிர்வாகிகளிடமும் மாவட்ட செயலாளர்களிடமும் பேனர்கள் குறித்து பேசியுள்ளார்.

இதற்கிடையே தமிழ்நாடு டிஜிபி யிடமிருந்து அனைத்து மாவட்ட எஸ்பி களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு மாவட்ட அரசியல் கட்சி பொறுப்பாளரிடமும் இனி பொது இடங்களில் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். அப்படி வைத்தால் அது ஆளும் கட்சியாக இருந்தாலும் உடனடியாக அகற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என்பதையும் தெரியப்படுத்துங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை மாவட்ட எஸ்.பிக்கள் அந்தந்த அரசியல் கட்சிகளிடமும் தெரியப்படுத்தி உள்ளார்கள்.

மேலும் தமிழகத்தில் திமுக நிர்வாகிகள் சார்பில் எங்கு அதிக பேனர்கள் வைக்கப்படுகின்றன என்ற ரிப்போர்ட்டும் போலீசுக்கு அனுப்பப்பட்டு அது ஆட்சி மேலிடத்துக்கு பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வளவு சொல்லியும் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பேனர்கள் வைக்கப்படுவது குறையவில்லை. இந்த தகவல் முதல்வருக்கு சென்ற நிலையில் தான் ஜூலை 18 ஆம் தேதி திமுகவின் அமைப்புச் செயலாளரான ஆர்எஸ் பாரதியிடம் இருந்து கண்டிப்பான அந்த அறிக்கை வெளி வந்திருக்கிறது.

2019ஆம் ஆண்டு இனி திமுக சார்பில் பேனர்கள் வைக்கப்படாது என்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது ஆர் எஸ் பாரதி தான் என்பதால் அவர் மூலமாகவே இந்த எச்சரிக்கை அறிக்கையை வெளியிட சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை மையமாக வைத்து திமுகவினர் நடத்திய பேனர் புரட்சி தான் இந்த எச்சரிக்கை அறிக்கைக்கு பின்னணி என்கிறார்கள் அறிவாலயத்தில்.

அதேநேரம் போலீஸ் தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது….”உதயநிதிக்கு தற்போது கட்சியில் அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் கட்சித் தலைமையால் ரசிக்கப்பட்டு தான் வருகிறது. உதயநிதியை காரணமாகக் கொண்டுதான் இந்த பேனர் எச்சரிக்கை அறிவிப்பு என்பது ஒருபக்கம் சொல்லப்பட்டாலும், இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது.

திமுக இப்போது ஆளுங்கட்சி ஆகிவிட்டது. எனவே பேனர்கள் வைத்து தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற பெரிய அவசியம் திமுகவிற்கு இப்போது இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகளான அதிமுக உள்ளிட்டவை தான் அதிக அளவு பேனர்கள் மூலம் அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இப்போது ஆளாகியுள்ளன. இந்த நிலையில் பேனர்கள் வைக்கக்கூடாது என்று திமுகவினருக்கு விடப்பட்ட எச்சரிக்கை என்பது அதிமுகவுக்கும் கூட பொருந்தும். போலீசாருக்கு கிடைத்த சுற்றறிக்கையின்படி பொது இடங்களில் எந்த அமைப்பு பேனர்களை வைத்திருந்தாலும் அகற்றப்பட வேண்டும். ஆளுங்கட்சியே பேனர்கள் வைக்க கூடாது என்றால் எதிர்கட்சி காரர்கள் எப்படி வைப்பார்கள்? எனவே இதனை உதயநிதிக்கு வைத்த செக் என்பதைவிட எதிர்க்கட்சிகளுக்கு ஸ்டாலின் வைத்த செக் என்றுதான் பார்க்க வேண்டும்” என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.

**-வணங்காமுடி வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel