தமிழகத்தில் தேச விரோதம்: ஆளுநரைச் சந்திக்கும் அண்ணாமலை

Published On:

| By Balaji

நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதற்காக யூடியூபர் மாரிதாஸ் டிசம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், திமுக அரசுக்கு எதிராக கடுமையாக கொந்தளித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

நேற்று (டிசம்பர் 11) தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “நமது முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இறப்பு தொடர்பாக திமுக, திகவினர் சமூக தளங்களில் மாரிதாஸை விட நூறு மடங்கு மேலாக தேச துரோக குற்றத்துக்குரிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. திக, திமுகவினர் சுமார் 300 பேரின் இத்தகைய பதிவுகள் என்னிடம் உள்ளன. ஓர் அமைப்பு பிபின் ராவத் மரணத்தைக் கொண்டாடிய ஸ்கிரீன் ஷாட்டும் உள்ளது. இதையெல்லாம் விட்டுவிட்டு தேசியவாதியான மாரிதாஸ் கருத்து சுதந்திரத்துக்கு அருகே இருந்து சொன்ன கருத்தை பெரிய பிரச்சினையாகப் பேசுகிறார்கள். திமுக ஐடி விங் டெலிட் பன்ணிய பதிவுகளை நான் உங்களிடம் கொடுக்கிறேன். நீங்கள் இதே கேள்வியை டிஜிபியிடம் போய் கேளுங்கள்” என்று கூறிய அண்ணாமலை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவையும் மிகக் கடுமையாகத் தாக்கினார்.

“தமிழ்நாட்டில் சைக்கிளில் செல்வதற்கும் செல்ஃபி எடுப்பதற்கும்தான் டிஜிபி. தமிழ்நாட்டில் காவல்துறையை ரன் பண்ணுவது திமுகவின் மாவட்டச் செயலாளர்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அந்தந்த மாவட்ட திமுக ஐடி விங் நிர்வாகிகள்தாம் அந்தந்த மாவட்ட எஸ்பிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

ஒரு டிஜிபி நேர்மையாக இருந்திருந்தால் இத்தனை பேர் பதிவு போட்டிருக்கும்போது அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர்களெல்லாம் டிஜிபி கண்ணுக்குத் தெரியவில்லையா? எதற்கு இந்தப் பாரபட்சமான நடவடிக்கை? டிஜிபி ஒரு ஸ்பெஷல் இன்வெஸ்டிகேட்டிங் டீம் போட்டு தமிழ்நாட்டில் யாரெல்லாம் இதுமாதிரி பேசியிருக்கிறார்கள் என்று அறிந்து ஆக்‌ஷன் எடுக்க வேண்டும்.

மாரிதாஸ் மீது திமுக ஐடி விங்கைச் சேர்ந்த ஒரு சின்ன பையன் புகார் கொடுத்திருக்கிறார். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எத்தனை நாள்தான் பொறுமை காக்க முடியும், காவல் துறையை ஏவல் துறையாக வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் டிஜிபி என்ற பதவி தமிழ்நாட்டில் எதற்கு இருக்க வேண்டும்? தமிழ்நாட்டின் உயரதிகாரிகள் கோபாலபுரத்தின் சேவகர்களாக, தமிழ்நாட்டின் அடிமைகளாக மாற்றி வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்ற அண்ணாமலை மாரிதாஸ் போட்ட பதிவில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், “தமிழ்நாட்டில் போடப்பட்ட இப்படிப்பட்ட பதிவுகளுக்கு தமிழகக் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்… இந்தியா முழுவதும் இருக்கும் சிஆர்பிஎஃப் போலீஸுக்கு அதுபற்றி விசாரிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் தமிழ் தெரிந்த ஒருவர் புகார் கொடுத்தால் அதன்மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய முடியும். இதை தமிழக காவல் துறையும், திமுக அரசும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்

இதற்கிடையில் இன்று (டிசம்பர் 12) காலை சமூக ஊடகங்களில் கருத்து சுதந்திரத்துக்காக எதிராக திமுக அரசு பதிவு செய்து வரும் வழக்குகளை எதிர்த்து போராட்டம் நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது. கமலாலயத்தில் இன்று இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் அண்ணாமலை அதையடுத்து தமிழக ஆளுநரை இன்று முற்பகல் சந்திக்கிறார். ஆளுநரிடம் திமுக, திகவினர் பிபின் ராவத் மரணம் பற்றி பதிவு செய்த பல்வேறு கருத்துகளைத் தொகுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்க இருக்கிறார் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

இதற்காகவே நேற்று பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் பால் கனகராஜ் உள்ளிட்ட குழுவினரை தனியாக சந்தித்த அண்ணாமலை, ‘பிபின் ராவத் மரண விவகாரத்தில் சமூக தளங்களில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு தேச விரோத கருத்தையும் ஆவணப்படுத்துங்கள்’ என்று உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், ‘தமிழகத்தில் அமைச்சர்களுக்கு எதிரான முக்கியமான டாக்குமென்ட்டுகள் வேண்டும். இதை வைத்து இந்த ஆட்சியை நாம் உலுக்கியெடுக்க வேண்டும்’ என்று அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார் என்கிறார்கள் பாஜகவினர்.

தமிழகத்தில் நடக்கும் இந்த விவகாரங்கள் தொடர்பாக பாஜகவின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளரான பி.எல்.சந்தோஷிடமும் அண்ணாமலை பேசியதாகவும், ‘இதுகுறித்து பிரதமருக்கு நானே நோட் வைக்கிறேன்’ என்று சந்தோஷ் சொன்னதாகவும் பாஜக வட்டாரத்தினர் கூறுகிறார்கள்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share