துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி கடந்த ஜனவரி 14 ஆம் தேதி துக்ளக் வாசகர் சந்திப்பு பொங்கல் விழாவில் பேசிய பல கருத்துகள் சர்ச்சைக்குரியவை ஆகிவிட்டன.
மறைந்த துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோவுக்கும், குருமூர்த்திக்கும் அடிப்படைக் கொள்கை ஒன்றுதான் என்றாலும் அணுகுமுறையில் பலத்த வேறுபாடு உள்ளது. சோ, அரசியலில் இரு துருவங்களாக இருந்த ஜெயலலிதாவுக்கும் நண்பர், கருணாநிதிக்கும் நண்பர். சோவுக்கு ஆர்.எஸ்.எஸ்.,சிலும் நண்பர்கள் இருந்தனர். கம்யூனிஸ்டு இயக்கங்களிலும் நண்பர்கள் இருந்தனர். அரிதான ஓரிரு சந்தர்ப்பங்களை தவிர சோ, பிறர் மனம் புண்படும்படி பேசியதில்லை. மேலும் சோ வால் குற்றம் சாட்டப்படும் நபரே சோவின் பேச்சை ரசிக்க நேரிடும்.
ஆனால் ஆடிட்டர் குருமூர்த்தியின் உடல்மொழி, அவரது வாய்மொழி எல்லாமே சோவுடைய அணுகுமுறைக்கு நேர் எதிரான ஓர் “அடமென்ட் டைப்’ எனப்படும் வகையாகவே பார்க்கப்படுகிறது. சோ சொல்லி பல அரசியல் மாற்றங்கள் நடந்திருந்தாலும் அதை சோ ஒரு நாளும் சொல்லிக் கொண்டதில்லை. மாறாக, ‘நான் சொல்லியா ஜெயலலிதா கேட்கப் போகிறார்? நான் சொல்லியா கலைஞர் கேட்கப் போகிறார்?’ என்று தன்னை விலக்கி வைத்து, கீழே இறக்கி வைத்துத்தான் பார்ப்பார்.
ஆனால் குருமூர்த்தியோ, ‘நான் தான் ஓபிஎஸ்சை சசிகலாவுக்கு எதிராக மெரினா கடற்கரையில் ஜெ சமாதியில் தியானத்தில் அமரச் சொன்னேன்’, ‘அதிமுகவின் இரு அணிகளையும் இணைத்ததில் எனக்குப் பங்குண்டு’என்றும் சுய புகழ்ச்சிப் பிரகடனங்கள் செய்யக் கூடியவர். இது சோவின் குணநலன்களுக்கு முற்றிலும் எதிரானது.
இதுமட்டுமல்ல, ‘அதிமுகவினர் ஆண்மையற்றவர்கள்’ என்றும் பத்திரிகையாளருக்கே உரிய பக்குவம் இல்லாமல் பேசி பலத்த எதிர்ப்பை சம்பாதித்த ஆடிட்டர் குருமூர்த்தி… தற்போது கடந்த ஜனவரி 14 ஆம் தேதி துக்ளக் விழாவில் பேசிய பேச்சு அரசியல், நீதித்துறை என பல திசைகளிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சசிகலாவை சாக்கடை என்றும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசியல்வாதிகளின் காலைப் பிடித்து நீதிபதியாகிவிடுகிறார்கள் என்றும், ஜல்லிக்கட்டுக்கு காங்கிரஸ் தடை விதித்தது ஆனால் ராகுல்
அதை இப்போது பார்க்க வருகிறார் என்றும் குறிப்பிட்டார் குருமூர்த்தி.
குருமூர்த்தியின் இந்த உரைக்கு தமிழகத்தில் திமுக, அதிமுக, அமமுக, காங்கிரஸ் ஆகிய முக்கியக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நீதிபதிகள் பற்றிய அவரது கருத்துக்கு வழக்கறிஞர்கள் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் குருமூர்த்த்தி மீது நீதிபதிகளை இழிவுபடுத்தியதாக புகார் கொடுக்கப்பட்டு சி.எஸ்.ஆர் காப்பி பெறப்பட்டுள்ளது. குருமூர்த்தி மீது வெளிப்படையாக இப்படிப்பட்ட கண்டனங்கள் எல்லாம் அவரை வேண்டியவராக கருதும் பாஜக கூட இப்போது குருமூர்த்தியை கோபத்துடனேயே பார்க்கிறது.
ஒவ்வொரு கட்சியும் குருமூர்த்திக்கு வெளியிட்ட கண்டனங்களை வரிசையாகப் பார்க்கலாம்!
**அதிமுக- ஜெயக்குமார்**
குருமூர்த்தி தன்னை ஏதோ கிங்மேக்கர் என்றும், பிதாமகன், சாணக்யன் என்றும் நினைத்துக் கொண்டு பில்டப் செய்து வருகிறார். இதெல்லாம் தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம். வேறு எங்காவது போய் வைத்துக்கொள்ளட்டும்.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக அரசை தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டார்கள். இது நிதர்சனமான உண்மை. இந்நிலையில் கங்கை, சாக்கடை என்று உவமை சொல்லியிருப்பது அறிவிலித் தனமானது. இங்கே வீடும் பற்றி எரியவில்லை. அணைக்கவும் தேவையில்லை. குருமூர்த்தி வேண்டுமானால் அமெரிக்காவில் தற்போது வீழ்ந்த டிரம்ப்புக்கு போய் ஆலோசனை சொல்லலாம்.
தினகரனிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு, சம்பளத்தை வாங்கிக் கொண்டு குருமூர்த்தி இதுபோன்று கருத்துகளைக் கூறுகிறாரா? யாராக இருந்தாலும் நா காக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கடுமையாக கூறியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
**அமமுக -டிடிவிதினகரன்**
ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் விமர்சகராக, துக்ளக் இதழின் நிறுவன ஆசிரியராகஇருந்த சோ அவர்கள், தனது இறுதி மூச்சு வரை கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடும் நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர்.
அவரைத் தனது ஆசானாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோ அவர்களின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது.
கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல !
துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது
**திமுக- சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் சண்முக சுந்தரம்**
சட்டத் துறையோடு எந்தத் தொடர்பும் இல்லாத குருமூர்த்தி, சாஸ்த்ரா சட்டப் பள்ளியின் ஆய்விருக்கைப் பேராசிரியராக நியமனம் பெற்றிருக்கிறார். 2017-ல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் புதிய வழக்குரைஞர்கள் உறுதியேற்பு விழாவிலும்கூட அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தனியார் பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் கௌரவ வாய்ப்புகளாலும், பார் கவுன்சில் தன்னை அங்கீகரித்ததாலும், அவர் தன்னை தற்போது சட்ட அறிஞராகவும் வெளிக் காட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். பார் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. வழக்கறிஞர்களால் அது உரிய முறையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் போய்விட்டது.
இப்போது, நீதிபதிகள் நியமனத்தையே அவர் கேலிக்குரிய ஒன்றாகச் சித்தரித்திருக்கிறார். தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்கள், ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் கால்களைப் பிடித்து அந்த வாய்ப்பைப் பெற்றவர்கள் என்று குருமூர்த்தி பேசியிருப்பது, இந்திய நீதித் துறைக்கே களங்கம் விளைவிக்கும் கண்டனத்திற்குரிய பேச்சு.
நீதிபதிகளின் நியமனத்தில் மத்திய – மாநில அரசுகளின் கருத்துகள் பெறப்பட்டாலும், மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பே இறுதி முடிவு எடுக்கிறது என்பதை அனைவரும் அறிவர். சட்டமியற்றும் அமைப்பு, நிர்வாக அமைப்பு, நீதித் துறை என்று அரசின் ஒவ்வொரு அங்கத்துக்கும் இடையிலான அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு இதற்கு அடிப்படையாக இருக்கிறது. உச்சநீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் அரசமைப்புச் சட்டமே தகுதியை நிர்ணயித்திருக்கிறது. அதன்படிதான், நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். குருமூர்த்தி, அரசமைப்புச் சட்டத்தையும் தாண்டி தகுதி என்று எதைச் சொல்ல வருகிறார்?
**காங்கிரஸ் -கே.எஸ். அழகிரி**
துக்ளக் குருமூர்த்தியைப் பொறுத்தவரை அவரது உரை முழுவதுமே ஒரு கோமாளித்தனமான உளறலாகவே அமைந்து விட்டது. அ.தி.மு.க.வுக்கு அரசியல் தரகராக தம்மையே தானாக நியமித்துக் கொண்டு கூட்டணிக்குக் குந்தகம் விளைவிக்கிற வகையில் பேசியிருக்கிறார்.
தேவையில்லாமல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியைக் குருமூர்த்தி சீண்டிப் பார்த்திருக்கிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்பதற்காக, அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார். அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியைப் பற்றி கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டிருக்கிறார். துக்ளக் ஆசிரியராக சோ இருந்தபோது, ஒருகாலகட்டம் வரை பெருந்தலைவர் காமராஜரையும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையும் ஆதரித்து எழுதியும், பேசியும் வந்திருக்கிறார். 1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனக் கூட்டத்தில் பங்கேற்ற சோ அவர்கள், ‘அயோத்தியில் நடந்தது அயோக்கியத்தனம்’ என்று கடுமையாக விமர்சனம் செய்ததைக் குருமூர்த்தியால் மறுக்க முடியாது. ஏனெனில் அப்போது வெளிவந்த துக்ளக் அட்டைப் படத்தில் கருப்பு வர்ணம் பூசி, எதிர்ப்பை தெரிவித்ததோடு, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்து தலையங்கம் எழுதியவர் சோ. அதேபோல, 1996 தேர்தலில் ஜெயலலிதாவின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்ற நடிகர் ரஜினிகாந்தை களம் இறக்கி, தி.மு.க., த.மா.கா. கூட்டணியை வெற்றி பெற வைப்பதில் பெரும் துணையாக இருந்தவர் சோ. ஆனால், இன்றைய துக்ளக் இதழ் குருமூர்த்தியிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது. வகுப்பு வாதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., வகுப்புவாத சக்திகளின் ஊதுகுழலாகக் குருமூர்த்தி செயல்பட்டு வருகிறார். தற்போது, பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் கூட்டணியை ஏற்படுத்த அரசியல் தரகராக மாறியிருக்கிறார். தமிழக மக்கள் மீது நலனோ, சமூக நீதியில் அக்கறையோ, தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதிலோ, தமிழ் மொழி புறக்கணிப்பதைத் தடுப்பதிலோ அக்கறை காட்டாத வகுப்புவாத சனாதன அரசியல் நடத்துகிற குருமூர்த்தி, திரைக்குப் பின்னாலே இருந்துதான் செயல்பட முடியுமே தவிர, மக்கள் மன்றத்திற்கு வர முடியாது. ஆண்டுக்கு ஒருமுறை துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்கிற குருமூர்த்தி, தமிழக மக்களின் நாடித் துடிப்பை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழக மக்கள் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறார்கள். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 54 சதவிகித வாக்குகளைப் பெற்று 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டுமா ? மோடி வர வேண்டுமா ? என்று கேள்வி எழுந்தபோது தமிழக மக்கள், மோடியை விட ராகுல் காந்திக்கு 60 லட்சம் மக்கள் அதிகமாக வாக்களித்திருந்தார்கள்.
தமிழக மக்கள் நேரு பாரம்பரியத்தில் வந்த ராகுல் காந்தியை எந்தளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதற்கு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சான்றாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் ஜல்லிக்கட்டு குறித்து ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். ஆனால், 2004 முதல் 2014 வரை மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைபெற்றதையும், பா.ஜ.க. ஆட்சியில் 2015, 16 இல் நடைபெறவில்லை என்பதையும் எவராலும் மறுக்க முடியவில்லை. எனவே, தமிழ் மக்கள் மோடி மீது இருக்கிற வெறுப்பை மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படுத்தத் தான் போகிறார்கள். அதனால், பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படுகிற நிலையை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.
**குருமூர்த்தியை எச்சரித்த பாஜக**
இப்படி வெளிப்படையாக பல கட்சிகளின் கண்டனக் கணைகளை எதிர்கொண்ட குருமூர்த்தி, பாஜக தரப்பில் இருந்தே எச்சரிக்கப்பட்டிருக்கிறார் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
அமமுகவையும், அதிமுகவையும் இணைப்பதை பாஜகவில் சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில் அமமுகவை தேவையில்லாமல் சாக்கடை என்றும், ஆறு வருடங்களாக இந்தியாவில் பாஜக ஆட்சி நடக்கிற நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் பற்றியும் பேசியது பாஜகவை கோபப்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே ஓபிஎஸ் மூலம் அதிமுகவை உடைக்கலாம் என்று டெல்லிக்கு தவறான ஆலோசனை கொடுத்தவர் ஆடிட்டர்தான், ரஜினியை நான் அரசியலுக்கு அழைத்து வருகிறேன் என்று மிகையான நம்பிக்கையை பாஜக தலைமைக்கு ஊட்டியவர் குருமூர்த்திதான். ஆனால் இவை எதுவுமே நடக்காததால் குருமூர்த்திக்கு தமிழக அரசியலில் கிரவுண்ட் லெவல் தெரியவில்லை என்பதை அறிந்து பாஜக தலைமை கடந்த சில மாதங்களாகவே அவருடன் முன்பிருந்த நெருக்கத்தைப் பேணவில்லை. அதன் விளைவுதான் துக்ளக் விழாவுக்கு முதலில் அமித் ஷா வருவதாக இருந்து பின் அவர் வருகையை ரத்து செய்தது. இப்படி பல கட்சிகள் வெளிப்படையாக கண்டித்ததைக் கூட பொருட்படுத்தாத குருமூர்த்தி பாஜகவின் எச்சரிக்கையை அடுத்து ஆடிப் போய், தன் பேச்சுக்கு ஒரு விளக்கத்தை வெளியிட்டிருக்கிறார்.
**குருமூர்த்தி விளக்கம்!**
நான் நீதித்துறை மீது எப்போதுமே உயர்ந்த மதிப்பு வைத்திருப்பவன். துக்ளக் விழாவில் வாசகர் ஒருவருடைய பேச்சுக்கு நான் பதிலளிக்கும்போது .. நீதிபதி பதவிக்காக விண்ணப்பிக்கும் சிலர் எப்படி அரசியல்வாதிகளை ஆதரவுக்காக அணுகுகிறார்கள் என்பதையே நான் நினைத்துப் பேசினேன். ஆனால் அந்த சூழ்நிலையில வெப்பத்தில் நீதிபதி பதவிகளுக்கான விண்ணப்பதாரர்கள் என்ற பதத்திற்குப் பதிலாக நீதிபதிகள் என்று நான் பயன்படுத்தி விட்டேன். அது தவறுதான். அதற்காக நான் வருத்தப்படுகிறேன்.
நீதித்துறை மீதும் நீதிபதிகள் மீதும் எப்போதுமே நான் மரியாதை கொண்டிருப்பவன். . இந்த நிலையில் நான் நீதிபதிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு உண்மையாகவே எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்”என்று விளக்கமளித்துள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி.
இனியாவது பத்திரிகை ஆசிரியர் என்ற உயர்ந்த சமூகப் பொறுப்பில் இருக்கும் குருமூர்த்தி போன்றவர்கள் தாங்கள் மிகவும் நம்பும், ‘லட்சுமண ரேகையை’ கடக்காமல் இருப்பார்களா?
**-வேந்தன்**
�,”