தமிழக சட்டப்பேரவையில் நேற்று துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் தொடங்கியது. அப்போது 110ன் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
அவர் பேசுகையில், “2021 திமுக தேர்தல் அறிக்கையில் தொழில் துறையை மீட்டெடுப்போம், தொழில் வளர்ச்சியைப் பரவலாக்கக் கொள்கைகள் வகுக்கப்படும், தொழில் தொடங்க முன்வருவோரை ஊக்குவிக்கக்கூடிய வகையில் ஒற்றைச் சாளர முறை மூலமாகத் தொழில் வளத்தைப் பெருக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தோம். அந்த வாக்குறுதிகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, 68,375 கோடி ரூபாய் முதலீடும், 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
மார்ச் 26, 28 ஆகிய நாட்களில் துபாய் மற்றும் அபுதாபி நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் 6,100 கோடி ரூபாய் முதலீடும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன” என்றார்.
மேலும் அவர், “லூலூ பன்னாட்டுக் குழுமம் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மண்டலங்களில் பல்வேறு திட்டங்களை நிறுவியுள்ளது. இரு பெரும் வணிக வளாகங்கள், உணவு பதப்படுத்தக்கூடிய திட்டம் ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நிறுவ, 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை இந்த குழுமத்துடன் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஆஸ்டர் டி.எம். மருத்துவ குழுமத்துடன் சென்னையில் 500 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை உருவாக்கும் வகையில், 500 கோடி ரூபாய் முதலீடும், 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஷெராப் குழும நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரு “சரக்கு பூங்கா” அமைத்திடப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஒயிட் ஹவுஸ் நிறுவனத்துடன், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் “ஆடை மற்றும் தையல் திட்டங்களை” அமைத்திடப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது ” எனத் துபாயில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்துப் பட்டியலிட்டார்.
புதிய தொழில் தொடங்குவோருக்கு மிகப்பெரிய நம்பிக்கை இந்த அரசின்மீது, தமிழ்நாட்டின் மீது ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், “கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் மட்டும் தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது 41.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் முதலீடுகளை ஊக்குவிக்கும் முகமைக்கு ஆசியா ஓசியானியா வருடாந்திர முதலீடுகள் மாநாட்டில், ‘சிறந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம்’ என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
“அடுத்தகட்டமாக, 2022 ஆண்டு மே மாதத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்திலும், ஜெர்மனி நாட்டில் ஹானோவர் நிகழ்விலும், ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள குளோபல் ஆப் ஷோர் வின்ட் நிகழ்விலும், ஜூலை மாதத்தில் அமெரிக்க நாட்டிலும், முன்னணி முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
முக்கியமாக எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, 2023ஆம் ஆண்டின் இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்தப்படும். அதன் மூலம் மேலும் அதிகமான முதலீடுகள் திரட்டப்படும். நம்முடைய பல லட்சம் தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த அரசு போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இனிமேல் போடப்போகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் முதலீடுகளாக, வேலைவாய்ப்புகளாக மாறும்” என்றும் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
**-பிரியா**