விநாயகர் சதுர்த்தி முடிந்து ஒரு நாள் கழித்து, நள்ளிரவில் திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ஒரு ட்விட்டர் புகைப்படம் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை ஆகஸ்ட் 24ஆம் தேதி அதிகாலை 1.54 மணிக்குப் பதிவேற்றினார் உதயநிதி. அந்த நாள் முழுவதும் சமூகதளத்தில் இதுவே பேச்சாக இருந்தது. உதயநிதி விளக்கம் கொடுத்தும் அது ஓயவில்லை.
திமுக இந்து விரோத கட்சி என்றும், இந்துக்களின் பண்டிகைக்கு திமுக வாழ்த்து சொல்வதில்லை என்றும் பாஜக ஒரு பிரச்சாரத்தை முன்வைத்து அதை ஓர் இயக்கமாகவே நடத்திக் கொண்டிருக்கும் நிலையில, உதயநிதியின் இந்த வாழ்த்து அதற்குப் பதிலடியாக அமைந்திருக்கிறது என்று திமுகவில் பலர் வரவேற்கிறார்கள். அதேநேரம், திமுகவின் கொள்கைப் பாதையில் இருந்து உதயநிதி திசை மாறுகிறார் என்று விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன.
இதே விநாயகர் சதுர்த்தியை அடிப்படையாக வைத்து இதேபோன்ற அனுபவம் 2014ஆம் ஆண்டு ஸ்டாலினுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பது ஒரு சுவாரஸ்யமான வரலாறு. முதன்முறையாக பாஜகவின் சார்பில் நரேந்திர மோடி பிரதமரான தருணம் அது. தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கன்னியாகுமரி, தர்மபுரி என இரு நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றிருந்தது. தமிழகத்தில் மீதி 37 இடங்களையும் அதிமுகவே வென்றிருந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில், ‘திமுக என்பது இந்துக்களுக்கு விரோதமான கட்சி” என்ற பிரச்சாரத்தை வீதிகளிலும் வலைதளங்களிலும் நடத்தியது பாஜக கூட்டணி. அந்தத் தேர்தலிலும் திமுக படுதோல்வி அடைந்திருந்தது.
இந்த நிலையில் அப்போது ஸ்டாலினுக்கு ஆலோசகராக இருந்த சுனில், ‘திமுகவை இந்து விரோத கட்சின்னு கலர் பூசுறாங்க. அதை உடைக்கணும். மத்த மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ற மாதிரி திமுக தலைவர்கள் இந்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லணும். அப்படி சொல்றதன் மூலமா பாஜகவோட பிரச்சாரத்தை முறியடிச்சா மாதிரி இருக்கும். நம்ம கட்சிக்குள்ளயே நிர்வாகிகள் பலருக்கும் தலைவர் ஏன் நம்ம பண்டிகைக்கு வாழ்த்த மாட்டேங்குறாருங்குற எண்ணம் இருக்கு. அதனால இதுக்கெல்லாம் ஒரே பதில் சொல்ற மாதிரி விநாயகர் சதுர்த்திக்கு நீங்க வாழ்த்துகள் சொல்லுங்க. கலைஞர் சொல்லலேன்னா என்ன நீங்க சொன்னா அதுக்கு என்ன ரியாக்ஷன் வருதுன்னு பார்ப்போம்’ என்று ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்ட ஸ்டாலின். ‘இது நல்லா இருக்கே’ என்று சொன்ன ஸ்டாலின், 2014ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று தனது சமூக தளத்தில் விநாயகர் படத்தைப் பகிர்ந்து விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் என்று பதிவிட்டிருந்தார்.
ஸ்டாலினின் இந்த அணுகுமுறை திமுக நிர்வாகிகளால் பெரும் வரவேற்புக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது. பல்வேறு மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு போன் போட்டு, ‘அண்ணே நல்ல விஷயம் செஞ்சீங்கண்ணே… நம்ம கட்சிக்காரங்க பலருக்கே நாம கொண்டாடுற பண்டிகைக்கு தலைவர் வாழ்த்த மாட்டேங்குறாரேங்குற உறுத்தல் இருந்துச்சு. இப்ப அதெல்லாம் பறந்து போச்சு’ என்று ஸ்டாலினிடம் சொல்லிக் கொண்டே இருந்தனர். கட்சிக்கு வெளியே இருந்தும் இதற்காக ஸ்டாலினுக்கு வரவேற்பு கிடைத்தது. ஸ்டாலினுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. ‘நாம எடுத்த முடிவு சரியாதான் இருக்கு’ என்று ஸ்டாலின் நினைத்தார். அன்று முடிந்து அடுத்த நாளும் வரவேற்பும். பதிலுக்கு வாழ்த்துகளும் ஸ்டாலினுக்கு கிடைத்துக் கொண்டிருந்தன. திமுகவின் பகுத்தறிவுத் தலைவர்களான கலைஞர், பேராசிரியர் போன்றோரிடம் இருந்தும் எந்த எதிர்வினையும் வராத நிலையில் , இதே பாணியைத் தொடர திட்டமிட்டிருந்தார் ஸ்டாலின். ஆனால் ஓரிரு நாள் கழித்து ஆங்கில நாளேடு ஒன்றில் ஸ்டாலினின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியாக வர, அப்போதுதான் கலைஞர் கவனத்துக்கு இந்தத் தகவல் சென்று சேர்ந்தது.
ஸ்டாலினை அழைத்த கலைஞர், ‘என்னப்பா… விநாயகர் சதுர்த்தி வாழ்த்து போட்டிருக்கியாமே?’ என்று விசாரித்திருக்கிறார். தன் தந்தை என்றாலும் தலைவர் என்பதால் மற்றவர்களை விட கலைஞர் மீது ஸ்டாலினுக்கு பயம் கூடுதலாகவே உண்டு. கலைஞர் விசாரித்து அறிந்த பின்னர்தான் தலைமைக் கழகம் சார்பில் ஒரு செய்தி வெளியானது.
‘திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிரத்யேக இணைய தளத்தில், அவர் விநாயகர் சதுர்த்தி நாளன்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி, மு.க.ஸ்டாலினின் இணைய தளத்தை பராமரிக்கின்ற சில தோழர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக, எல்லோரும் தெரிவித்திருப்பதைப் போல மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர். இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையைப் பார்த்ததும் ஸ்டாலின் வருத்தப்பட்டாலும், அதன்பின் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முனைப்பை அப்படியே ஓரங்கட்டிவிட்டார்.
இந்தப் பின்னணியில்தான்…. 2014இல் நடந்த சம்பவம் இப்போது 2020இல் வேறு மாதிரி நடந்திருக்கிறது. அன்று பொருளாளராக இருந்த ஸ்டாலின் செய்த அதே விஷயத்தை இன்று இளைஞரணிச் செயலாளராக இருந்து உதயநிதி செய்திருக்கிறார். அன்று ஸ்டாலினுக்குக் கிடைத்த அதே பாராட்டுகளும் வரவேற்புகளும் இன்றும் உதயநிதிக்கு கிடைத்து வருகின்றன. ஆனால் திமுகவை கொள்கை அடிப்படையில் முழுதாக ஆதரிக்கும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் போன்றோர் உதயநிதியை திமுகவின் கொள்கை வாரிசாக நினைத்திருந்த நிலையில் இப்படி செய்துவிட்டாரே என்ற விமர்சனங்களும் எழுந்துகொண்டிருக்கின்றன.
திமுக இந்து விரோத கட்சி என்ற பிரச்சாரம் 2014ஐ விட இன்றைய 2020இல் மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே உதயநிதி செய்தது சரிதான் என்றும், கொள்கை அடிப்படையில் உதயநிதி செய்தது தவறு என்றும் இரு வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உதயநிதியே இதற்கு ஒரு விளக்கத்தையும் அளித்துவிட்டார்.
“சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது. என் அம்மா வைத்து வழிபட்டது. கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது, அவ்வளவே. எனக்கும் என் மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் என் அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பதை யாவரும் அறிவார்கள். எங்கள் வீட்டில் பூஜை அறையும் உண்டு. அதில் என் மூதாதையர்களின் படங்கள் உள்ளன. மேலும் என் தாயார் விரும்பும் சில கடவுள் படங்களும் உண்டு. முக்கியமான முடிவெடுக்கும்போது அங்குள்ள மூதாதையர்களின் படங்கள் முன் நின்று அவர்களை மனத்தில் நினைத்துவிட்டுச் செய்வது எங்கள் வழக்கம்.
இந்த நிலையில் பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார் சிலையை வாங்கியிருந்தார். அந்த சிலையைப் பார்த்த என் மகள், இதை எப்படி செய்வார்கள் என்று என்னிடம் கேட்டார். நான் கூறியதும், ‘கரைப்பதற்கு முன் இந்த சிலையை வைத்து ஒரு போட்டோ எடுத்துக் கொடுங்கள்’ என்று என்னிடம் கேட்டார் மகள். அவரின் விருப்பத்தின்பேரில் நான் தான் அந்தப் புகைப்படத்தை எடுத்தேன். மகள் ரசித்த சிலையை அவர் விருப்பத்துக்காக என் ட்விட்டர் பக்கத்திலும் பதிந்தேன். அவ்வளவே” என்று விளக்கம் அளித்துள்ளார் உதயநிதி.
அன்று 2014ஆம் ஆண்டு இதே விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்தியதற்காக கலைஞர் இருந்தபோது தலைமைக் கழகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தது. இன்று திமுகவின் தலைவராக ஸ்டாலின் இருக்கும் நிலையில்… உதயநிதியின் செயலுக்காக தலைமைக் கழகம் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பலரிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது. கலைஞர் – ஸ்டாலின் நிகழ்வுகள்… ஸ்டாலின் – உதயநிதி காலத்தில் நடக்குமா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால் உதயநிதி ஸ்டாலினின் அறிக்கையே இன்றைய (ஆகஸ்ட் 25) முரசொலியில் முழுமையாய் வெளியிடப்பட்ட பிறகு அந்த கேள்வியும் அடிபட்டுப் போய்விட்டது.
**ஆரா**
�,”