விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை: தடுத்த கொரோனா

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைத்து இன்று (அக்டோபர் 18) காலை முதல் 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தி வந்த நிலையில், இன்று மாலை முதல் மேலும் 5 இடங்களில் கூடுதலாக சோதனை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

2013இல் இருந்து 2021 வரை விஜயபாஸ்கர் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 27 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டு இந்த காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள், கட்டுமானப் பொருட்கள் விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த ரெய்டு நடந்திருக்கிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் இருக்கும் தன் வீட்டில்தான் விஜயபாஸ்கர் தனது மனைவி குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று பகல் விஜயபாஸ்கரின் கீழ்ப்பாக்கம் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் வந்தனர். அவர்கள் தங்களை விஜயபாஸ்கரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டபோது போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் அங்கேயே கொஞ்ச நேரம் இருந்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் செய்தியாளர்களிடம், “விஜயபாஸ்கரின் மனைவிக்கும் மகளுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உண்டாகியுள்ளது. இந்நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் முயற்சித்து இந்த ரெய்டு செய்வது மனித உரிமைகளுக்கு மாறானது” என்று கூறினார்.

லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “விஜயபாஸ்கரின் சொத்துகள் பல அவரது மனைவி, மகள் பெயர்களில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவின் பெயர் இரண்டாவதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டால் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்துவிடுவார்களோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் சொல்லியிருக்கிறார். அதனால் இப்போது அவர்களை விசாரிக்க முடியவில்லை. குணமானவுடன் விசாரிப்போம். ஏனென்றால் இது திடீர் ரெய்டு அல்ல, எல்லா ஆவணங்களும் எங்களிடம் உள்ளன” என்கிறார்கள்.

இன்று மாலை வரை சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி ரெய்டின் போது நடந்த போராட்டங்கள் அளவுக்கு விஜயபாஸ்கரின் ரெய்டின்போது எதுவும் நடக்கவில்லை.

இன்று மாலை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “திமுக அரசு தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி வக்கிர நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியை தேடியிருப்பது கண்டனத்துக்குரியது.

அதிமுகவின் பொன் விழா நேற்று (அக்டோபர் 17) சென்னையிலும் தமிழகம் முழுவதிலும் உற்சாகமாக தொடங்கியதைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக அரசு விடிந்தவுடன் காவல் துறையை ஏவிவிட்டு கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.

எத்தனைக் கழக நிர்வாகிகள் மீது என்னென்ன வழக்கு போட்டாலும் அவதூறு பரப்பினாலும் அதிமுக எதிர்காலத்தில் பெறப்போகும் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

**-வேந்தன்**

�,”

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts