தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 19ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில் கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜூலை 16) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
அதுபோன்று பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, “தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிஷா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தான் 80 சதவிகித பாதிப்பு உள்ளது. மூன்றாம் அலையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து தயாராக இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
இந்நிலையில் நேற்று இரவு ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாகத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்துத் தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 31-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.
**தடை**
மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து
திரையரங்குகள்
அனைத்து மதுக்கூடங்கள்
நீச்சல் குளங்கள்
பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்
பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
உயிரியல் பூங்காக்கள்
நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாகத் திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
**நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.**
** ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று பணியாற்றலாம்**
தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள், தட்டச்சு- சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்டத் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,