�
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக்கை ஏன் மூடவில்லை என்று அமமுக பொதுசெயலாளார் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில் அதிகபேர் கூடும் டாஸ்மாக் தொடர்பான அறிவிப்பு இடம்பெறவில்லை.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ள டிடிவி தினகரன், “தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிற முதலமைச்சர் ஸ்டாலின், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், “நோய் பரப்பும் இடங்களாகச் செயல்படும் டாஸ்மாக் கடைகளையும், மதுபானக்கூடங்களையும் மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் முழுமை பெறாது. தேவைப்பட்டால் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கடந்த ஆண்டுகளில் ஸ்டாலின் விடுத்த அறிக்கைகளை அவரே திரும்ப எடுத்துப் படித்துப் பார்த்துக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**
�,