ஆளுநர்-முதல்வர் உறவு: அப்பாவு

Published On:

| By Balaji

நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் தனது கடமையைச் செய்வார் என்று நம்புவதாக அப்பாவு தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில், முதல் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் உள்ள வளாகத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டு, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று பேரவை செயலாளர் கி.சீனிவாசன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மரபுப்படி சபாநாயகர் அப்பாவு இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று, ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “ஜார்ஜ் கோட்டையில் கூட்டத்தொடர் நடைபெறவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதுபோன்று ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்த சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும், அப்போது தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இது பத்திரிகையாளர்களுக்கும் பொருந்தும்.

சட்டமன்ற கூட்டத்தொடரை நேரலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து ஆளுநர்களும் எப்படிச் சிறப்பாக பட்ஜெட் உரையை நடத்தினார்களோ. அதுபோன்று ஆளுநர் ஆர்.என்.ரவியும் சிறப்பாக நடத்துவார் , சட்டப்பேரவையை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.

ஏற்கனவே நடந்த கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் எல்லோருமே சட்டப்பேரவை செயல்பாட்டை மிகவும் பாராட்டினர். கடந்த ஆண்டு ஒத்துழைப்பு கொடுத்தது போல் இந்த ஆண்டும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

இன்று ஆளுநரைச் சந்தித்த போது கூட அவர் நமது முதல்வரைப் பாராட்டிப் பேசினார். நெகிழ்வான, சக்திவாய்ந்த, நேர்மையான முதல்வர் என்றார். ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான உறவில் இதைத் தவிர வேறு என்ன வேண்டும்.

ஜனநாயக மரபுப்படி கடந்த ஆண்டு நடந்ததை போல இந்த ஆண்டு பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் . நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் அவரது கடமையைச் செய்வார் என்று நம்புகிறோம் என்றார்.

**-பிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share