பேராசிரியர் அன்பழகன் மறைவு குறித்து திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார்.
வயது முதிர்வின் காரணமாக திமுகவின் பொதுச் செயலாளரும், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவருமான க.அன்பழகன் மார்ச் 7ஆம் தேதி இரவு 1 மணிக்குக் காலமானார். கீழ்ப்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட முன்னணி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை அன்பழகன் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. அப்போது ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கதறி அழுதது காண்போரைக் கலங்கச் செய்தது.
இந்த நிலையில் பேராசிரியர் அன்பழகன் மறைவு தொடர்பாக தொண்டர்களுக்கு ஸ்டாலின் நேற்று (மார்ச் 8) எழுதிய கடிதத்தில், “முதுமையினால் ஏற்படும் உடல்நலக்குறைவினால் பேராசிரியர் முடிவெய்தினார் என்றாலும், இன்னும் சில ஆண்டுகள் அவர் இருந்திருக்கக்கூடாதா, நூற்றாண்டு வயது கண்ட திராவிட இயக்கத்தின் தலைவர்களில் நூறாண்டு கண்ட ஒரே தலைவர் என்ற பெருமையையும், வாழ்த்துகளையும் நம் அனைவருக்கும் வழங்கி, கழகம் மீண்டும் ஆட்சியில் அமரும் மாட்சிமை கண்டு பெருமிதம் கொண்டு, அதனை வழிநடத்தும் முறைகளை நமக்குக் கற்றுத்தரும் அந்தத் தத்துவப் பேராசிரியரை, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இழக்கச் சம்மதிப்போமா?” என்று குறிப்பிட்டுள்ளார்.
கழகத்திற்காகப் பணியாற்றும் ஒவ்வொரு நாளும் கலைஞரின் வாழ்த்துகளுக்கு முன்பாக பேராசிரியப் பெருந்தகை அவர்களின் வாழ்த்துகள் என்னை ஊக்கப்படுத்தும் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், “2003ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடந்த மண்டல மாநாட்டுக்குத் தலைமையேற்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தபோதும், பேராசிரியர் அவர்கள் தன்னுடைய சிறப்புரையில் என்னை வாழ்த்தி, இன்னும் பல பொறுப்புகளைப் பெற்றுச் செயலாற்றிட வேண்டும் என வாழ்த்தினார் எனவும் கூறினார்.
திமுகவின் தலைமைப் பொறுப்புக்கு உங்களில் ஒருவனான நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் பேராசிரியரின் வாழ்த்துகள், தலைவர் கலைஞர் இல்லாத சூழலில் அந்தக் குறை தெரியாதபடி செய்தன. தலைவர் கலைஞர் அவர்களுக்கு உடன்பிறந்த அண்ணன் இல்லை. ஆனால், அவரது ‘உடன்பிறப்பான’ அண்ணனாகப் பேராசிரியர் இருந்தார். தலைவர் கலைஞரின் மகனான எனக்குப் பெரியப்பா இல்லை. பேராசிரியர்தான் பெரியப்பா என்ற நிலையில் பெரும் பாசத்துடன் அரவணைத்து, ஆலோசனைகள் – அறிவுரைகள் வழங்கி, வழிநடத்தினார்” என்று உருக்கமாகக் குறிப்பிட்ட ஸ்டாலின்,
“அப்பாவையும் பெரியப்பாவையும் இரண்டாண்டு இடைவெளிக்குள்ளாக அடுத்தடுத்து இழந்த நிலையில், இயற்கை பறித்துக்கொண்ட சதியால், கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், தனிப்பட்ட வகையிலும் கலங்கி நிற்கிறேன். உங்களில் ஒருவனான நான் மட்டுமல்ல, நாம் அனைவருமே உயிரும் உடலும் கலங்கித்தான் நிற்கிறோம். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது, யாரிடம் யார் தேறுதல் பெறுவது என்று தெரியாத நிலையில், நமக்கு நாமே ஆறுதலாகவும், நம்மை நாமே தேற்றிக்கொண்டும், இனமான பேராசிரியர் வாழ்நாளெல்லாம் எண்ணிய வழியில், இலட்சியச் சுடரை ஏந்திச் செல்வதுதான், நம் முன் உள்ள முக்கியக் கடமையாகும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் பண்புடன் பழகிய பேராசிரியப் பெருந்தகைக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்ட தமிழக முதலமைச்சர், நேரில் வந்து மரியாதை செலுத்திய துணை முதலமைச்சர், அமைச்சர் உள்ளிட்ட அதிமுகவினர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சித் தலைவர்கள் என அனைவருக்கும் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்” என்றும்,
“இனமான பேராசிரியப் பெருந்தகையே… இதயத்தில் வீற்றிருக்கும் பெரியப்பா அவர்களே… இந்த இயக்கத்தின் தலைவர் – எனது தந்தையை நீண்ட காலம் பிரிந்திருக்க மனமின்றி, நீங்களும் அவர் சென்ற இடத்திற்கே எம்மை தவிக்க விட்டுச் சென்றுவிட்டீர்கள்… போய்வாருங்கள் பெரியப்பா… உங்கள் புகழினைக் கட்டிக்காத்திடும் வகையில், நீங்கள் வழங்கிய ஆலோசனைகளோடும், தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகளோடும் இலட்சியப் பாதையில், எங்கள் பயணம் தொடரும்” என்றும் தனது கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
**எழில்**�,”