அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கடந்தகால பேச்சுக்கள் பலவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதுபோலவே அமைச்சர்கள் பலரும் ஊடகங்களில் பேசி வந்ததால், முதல்வர் அனைத்து அமைச்சர்களையும் தனித்தனியாக அழைத்து ஊடகங்களிடம் பேசுவதைக் குறைத்துக்கொள்ளுமாறு கூறினார். ஆனால், [அதனையும் மீறிய](https://minnambalam.com/k/2020/01/31/16) ராஜேந்திர பாலாஜி, ‘ஓ.பி ரவீந்திரநாத் குமாரை தாக்க வந்தவர்களின் கைகளை முறிக்கவும் தெரியும். மதக்கலவரம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அமைதி காத்தோம்’ என்று பேசியிருந்தார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராஜேந்திர பாலாஜி, பாஜக நிர்வாகி விஜயரகு கொலை செய்யப்பட்டது குறித்து பேசினார்.
“விஜயரகு கொலை செய்யப்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், பின்புறத்தில் இருந்து வெட்டியுள்ளார்கள் என்றால் அது மதரீதியாக நடத்தப்பட்ட கொடூரம். இப்படியே இஸ்லாமிய பயங்கரவாதத்தை தொடர்ந்துகொண்டு சென்றால், இந்துக்களை கொல்லும் வேலைகளை தொடர்ந்தார்களானால், இந்துக்களை கொலை செய்யும் இயக்கங்களுக்கு திமுக துணையாக இருந்தது என்றால், இந்து பயங்கரவாதம் உண்டாவதை எவனும் தடுக்க முடியாது” என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். இந்த பேச்சு கடும் சர்ச்சையை உண்டாக்கியது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “பாஜகவுக்கு அதிமுக பாதம் தாங்குவது குறித்து நமக்கு ஆட்சேபனை இல்லை. அதற்காக நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற ராஜேந்திர பாலாஜி என்ற ஒரு அமைச்சர் திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.
நெஞ்சில் நஞ்சும்,வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியான நடவடிக்கை தேவை! https://t.co/656WPLQM8z
— M.K.Stalin (@mkstalin) February 2, 2020
மேலும், “அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் கண்ணுக்கு முன்னால் மதச்சார்ப்பின்மைக்கு எதிராக பேசுகிறார். மக்களை மதரீதியாக துண்டாடத் துணிகிறார். ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
�,”