டிசம்பர் 13 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு அடுத்த சட்டமன்றப் பேரவைத் தொடர் ஜனவரி 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கும் என்று தெரிவித்தார்.
அப்போது ஒரு பத்திரிகையாளர், “தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மூன்று நிதிக்குழுக்களை கண்காணிப்பதற்கு நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு கண்காணிப்பாளரை நியமித்திருக்கிறார்கள் என்று தகவல் வந்திருக்கிறது. அவர் எதற்காக வந்திருக்கிறார்? அவருடைய பணி என்ன?” என்று கேட்டார்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு பதிலளிக்கும்போது, “கண்காணிப்பதற்காக போட்ட மாதிரி எனக்குத் தெரியலை. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து பல திட்டங்களை செயல்படுத்துகிறது. நமது முதல்வர் இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதல்வராக செயல்பட்டு வருகிறார். அதுபற்றி பார்வையிட்டு அறிந்துகொண்டு செல்வதற்காக வேண்டுமானால் அந்த அதிகாரி வந்திருக்கலாம்” என்று பதில் சொல்லியிருக்கிறார்.
சபாநாயகரின் இந்த பதிலை தொலைக்காட்சியில் பார்த்து நிதியமைச்சர் பிடி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதைவிட கொடுமையாக அந்த அதிகாரியே சபாநாயகரின் இந்த பேட்டியைப் பார்த்து வேதனை அடைந்திருக்கிறார்.
இதன் பின்னணி பற்றி கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம்.
“ மு.க.ஸ்டாலின் அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், அதன் 12 ஆம் பக்கத்தில், “ சட்டமன்றத்தின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மன்றத்தில் 1921 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும் பேரவையின் நிதிக் குழுக்களின் (மதிப்பீட்டுக் குழு, பொதுக்கணக்குக் குழு பொதுத்துறை நிறுவனங்கள் குழு) செயல்பாட்டை வலுப்படுத்துவதற்காக உரிய அலுவலர்களுடன் கணினிமயமாக்கப்பட்ட சிறப்புச் செயலகம் அமைக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மூன்றுக் குழுக்களும் நிதித்துறையின் கீழ் வருகின்றன. மதிப்பீட்டுக் குழு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மதிப்பீடு செய்கிறது. பொதுக் கணக்குக் குழுவானது அந்தத் திட்டங்களின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்கிறது. இந்தக் குழுவின் தலைவர் பதவி எப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கே வழங்கப்படும். இம்முறை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் பதவி செல்வப் பெருந்தகைக்கு அப்பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது குழுவான பொது நிறுவனங்கள் குழுவானது பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறது. இந்த மூன்று குழுக்களும்தான் அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை பற்றிய ஆய்வை செய்து அரசுக்கு உறுதுணையாக இருக்கின்றன.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த குழுக்களின் செயல்பாட்டில் பல குளறுபடிகள் நடந்துள்ளன என்று கருதிய நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அதுகுறித்து ஆய்வு செய்வதற்காக நிதித்துறையின் மூன்று குழுக்களையும் ஒருங்கிணைத்து ஒரு சிறப்புச் செயலகம் அமைக்க முடிவு செய்தார். இதுகுறித்து முதல்வரிடம் ஒப்புதல் பெற்றுத்தான் பட்ஜெட்டிலும் அறிவித்தார். ஆனாலும் தலைமைச் செயலகத்திலே இருக்கும் சில ‘பழமையான மூத்த’ அதிகாரிகளுக்கு பிடிஆரின் இந்த நடவடிக்கை உறுத்தியிருக்கிறது. அதனால் அவர்கள் இந்த சிறப்புச் செயலகம் அமைப்பதற்கு நிர்வாக ரீதியான சிறு சிறு தடைகளை ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள்.
ஆனால் அவற்றையெல்லாம் மீறி நிதியமைச்சர் முதல்வரிடம் ஆலோசித்து இந்த சிறப்புச் செயலகத்துக்கு பொறுப்பான அதிகாரியைத் தேடி வந்தார். அந்தத் தேடலின் முடிவில் நாடாளுமன்ற செயலகத்தில் மூத்த இயக்குநராக பனியாற்றிவந்த தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.கே. ராஜா. என்ற அதிகாரியை கண்டுபிடித்தார். பிடிஆர்.
இந்த ராஜா நாடாளுமன்றத்தில் பொது கணக்கு குழு, பெண்கள் நல அமைச்சகத்தின் பாராளுமன்ற நிலைக்குழு, நாடாளுமன்ற கணினிமயமாக்கல் பொறுப்பையும் கவனித்தவர். மேலும் 5 ஆண்டுகள் மத்திய அரசின் வெளியுறவுத்துறையில் மாநிலங்கள் பிரிவில் (states division ) பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இந்த முயற்சியின் விளைவாக ராஜாவை தமிழக சட்டமன்ற செயலகத்துக்கு சிறப்பு அந்தஸ்தில் தமிழக பணிக்கு அழைத்து வந்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
இது தொடர்பான அரசாணை நவம்பர் 23 ஆம் தேதி சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் மூலம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. “லோக்சபா செயலக இயக்குனராக இருக்கும் ராஜா நவம்பர் 15ஆம் தேதி விடுவிக்கப்பட்டு, 16 ஆம் தேதி முதல் தமிழக சட்டமன்றத்துக்கு சிறப்புப் பணிக்காக அனுப்பப்படுகிறார். நிதித்துறையின் மூன்று குழுக்கள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் சிறப்பு அதிகாரியான ராஜாவின் பார்வைக்குப் பிறகே நிதித்துறை செயலாளருக்கு அனுப்பப்படும்’ என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த அரசாணை நிர்வாக நடைமுறைப்படி சபாநாயருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, இந்த அதிகாரி நியமனம் பற்றி நிதியமைச்சரும், சபாநாயகரும் ஏற்கனவே ஆலோசனையும் நடத்தியிருக்கிறார்கள்.
இவ்வளவு நடந்திருக்கும் நிலையில் தமிழக சட்டமன்றத்தைக் கண்காணிக்க நாடாளுமன்றத்தில் இருந்து சிறப்பு அதிகாரி வருகிறார் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்ட நிலையில், ‘அது தவறு… பட்ஜெட்டில் நாங்கள் அறிவித்தவாறுதான் இந்த சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதை சபாநாயகர் எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது சட்டமன்றச் செயலாளர் சீனிவாசன் அவர் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். இதற்கான அரசாணையை வெளியிட்ட அவராவது இதை சபாநாயகரிடம் நினைவூட்டியிருக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் நடக்காதது நிதியமைச்சர் பிடிஆருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி தனது அதிருப்தியை அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியிருக்கிறார் நிதியமைச்சர். இப்படிப்பட்ட சூழலில் நிதித்துறையின் மூன்று குழுக்களயும் ஒருங்கிணத்து சிறப்புச் செயலகம் அமைப்பதுதான் இப்போது பிடிஆருக்கு சவாலாக இருக்கிறது” என்கிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள்.
**-ராகவேந்திரா ஆரா**
.
�,”