வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து விளையாடிய கிரிக்கெட் மேட்ச் விறுவிறுப்பாக நடைபெற்றதில் ஒரு ரன் வித்தியாசத்தில் காவல்துறை டீம் வெற்றிபெற்றது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பகுதியில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார், இன்றைய உடற்பயிற்சி தொல்காப்பிய பூங்காவில் என, தான் உடற்பயிற்சி செய்த இடத்தை குறிப்பிட்டவர், நாம் ஒவ்வொருவரும் நமது பணியில் செலுத்தும் கவனத்தில் சிறு அளவேனும் நம் உடல்நலத்தைப் பேணுவதிலும் செலுத்தவேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டமுடியும், உடல்நலனும் உள்நலனும்தான் உண்மையான செல்வங்கள் என்று அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
முதல்வரின் அறிவுரையை ஏற்று அரசு அதிகாரிகள் உடற்பயிற்சி, கபடி கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாடிவருகிறார்கள்.
நண்பர்கள் தினமான நேற்று ஆகஸ்ட் 1ஆம் தேதி, கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டார்கள். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் ஒரு டீம் கேப்டன், காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ் மற்றொரு டீம் கேப்டனாகவும் விளையாடினார்கள்.
மாவட்ட ஆட்சியர் டீமில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபிபுல்லா உட்பட நான்கு எஸ் ஐ,கள், மற்றும் மாவட்ட திட்ட அதிகாரி பவன் குமார் ஜி ஐ.ஏ.எஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 11 பேர்.
காவல்துறை கண்காணிப்பாளர் டீமில் சார் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஐ.ஏ.எஸ் உட்பட நான்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கடலூர் டிஎஸ்பி கரிக்கால் பாரி சங்கர், நான்கு எஸ் ஐ,கள், போலீஸ் உட்பட 11பேர்.
காலை 7.00 மணியளவில் களத்தில் இறங்கினார்கள். யார் முதலில் பேட்டிங் செய்வது என்று டாஸ் போட்டார்கள். அதில் வருவாய்த்துறையினருக்கு வாய்ப்பு கிடைத்தத. முதலில் பேட்டிங் செய்தார் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன். நான்காவது ஓவரில் ஆட்சியர் அடித்த பந்தை ஒரு எஸ். ஐ. கேட்ச் பண்ணிட்டார். அதனால் ஆட்சியர் அவுட்டாகிவிட்டார்.
திட்ட அதிகாரி பவன் குமார் மற்றும் டி.எஸ்.பி. சபிபுல்லா இருவரும் ஓரளவுக்கு ரன்கள் எடுத்தார்கள். அனைவரையும் வியக்கவைத்தது 25 வருடம் பணியில் உள்ள 55 வயதுள்ள டிஎஸ்பி சபிபுல்லா ரன் எடுக்க ஓடியதுதான். அதேபோல் மாவட்ட ஆட்சியரும் சிறப்பாக ஆடி 15 ஓவரில் 102 ரன் எடுத்தார்கள்.
அடுத்தாக காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகனேஷ் டீம் பேட் செய்தது. மூன்றாவது ஓவரில் எஸ்.பி சக்திகணேஷ் பேட்டிங் செய்தபோது, கலெக்டர் பாலசுப்பிரமணியன் பந்தை வீசினார். பந்தை ஓங்கி அடித்தார் எஸ்பி. உயரே சென்றுவந்த பந்தைப் பாய்ந்துபோய் கேட்ச் பிடித்து, எஸ்பியை அவுட்டாக்கினார் ஆட்சியர்.
தொடர்ந்து ஆடிய கடலூர் டிஎஸ்பி கரிக்கால் பாரி சங்கர், 46 ரன் எடுத்து 14 ஓவரில் 103 ரன்களை குவிக்க காவல்துறை கண்காணிப்பாளர் டீம் வெற்றிபெற்றது.
இந்த கிரிக்கெட் மேட்ச் கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் மத்தியில் ஆர்வமாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டது, இரு துறையிலும் உள்ள சிறப்பான விளையாட்டு வீரர்களை இன்னும் செழுமைப்படுத்தினால் அகில இந்திய அளவிலும் விளையாட்டில் வெற்றிக்கொடியை நாட்டுவார்கள் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.
**-வணங்காமுடி**
�,