சிறப்புக் கட்டுரை: நிலைகுலைக்கப்படும் தெற்காசியா! பகுதி 2

politics

b> பாஸ்கர் செல்வராஜ்
உக்ரைன் போரை அடுத்து ரஷ்யாவின் மீது ஏவப்பட்ட பொருளாதாரத்தடை எனும் நிதிய – அணு ஆயுத ஏவுகணை ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்க என எல்லா கண்டத்தினரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் கோதுமை, எரிபொருள், உரங்கள், உலோகங்கள் உலக வர்த்தகத்தில் இருந்து நீக்கப்பட்டால் அது உற்பத்தியை பாதித்து உணவுப்பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வைக் கொண்டுவரும் என்பதை நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த அமெரிக்காவின் மிகைடாலர் அச்சடிப்பால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு பிரச்சினைக்கு எண்ணெய் ஊற்றியதைப்போல தீவிரமாக்கி, கொழுந்துவிட்டு எரியவிட்டிருக்கிறது. இருப்பினும் உக்ரைனிய பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க சார்பெடுக்கவும் மற்றவர்கள் நடுநிலை வகிக்கவும் காரணம், வெறும் பொருளாதார காரணங்கள் மட்டுமல்ல; அந்தந்த நாட்டு மக்களின் இனவாத அரசியல் உணர்வுகளும் இதில் பங்காற்றுகின்றன. மத்திய கிழக்கு, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் நடுநிலை அரசியல் ஒற்றுமை ரஷ்யாவை தனிமைப்படுத்தி ஒடுக்கும் அமெரிக்காவின் நோக்கத்தை முறியடித்திருக்கிறது.

**உடையும் வர்த்தகம்… பெருகும் பிரச்சினைகள்!**

அமெரிக்காவின் டாலர் வர்த்தகத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கையும் அதற்கு எதிரான ரஷ்ய – சீன நாடுகளின் சொந்த நாணய வர்த்தக மாற்று முன்னெடுப்பும் இதுவரையிலான உலக வர்த்தகக் கட்டமைப்பை உலுக்கி உடைக்க ஆரம்பித்திருக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து உலகம் முழுக்க விலைவாசி உயர்வு, டாலர் கடன் கொடுப்பனவுப் பற்றாக்குறை பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்நாட்டுக் குழப்பங்கள், போராட்டங்களை நோக்கி நகர்த்தி வருகிறது. இலங்கையின் அரசியல் சூழல் மற்ற நாடுகளில் இனிவரப்போகும் சூழலை முன்னறிவிக்கும் ஒரு தொடக்கம். கடனை அடைக்க மேலும் கடன் கொடுப்பது என்பது ஐஎம்எஃப் செய்யாதது அல்ல. இலங்கை இந்த சூழலை அடைவது அவர்களுக்குத் தெரியாததும் அல்ல. இதைக் கொண்டு முக்கிய வர்த்தகக் கடல்வழித் தடத்தில் இருக்கும் இலங்கையை வழிக்குக் கொண்டுவர நினைக்கிறார்கள். இந்திய, சீன நாடுகளை ஐஎம்எஃப்புக்கு எதிராக நிறுத்தியும், மாறிவரும் வர்த்தகச் சூழலை சாதகமாகப் பயன்படுத்தியும் இலங்கை இந்த அழுத்தத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் திசையில் காய்களை நகர்த்துகிறது. சிங்கள – தமிழ் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இந்தச் சூழலை பயன்படுத்தி ராஜபக்சே சகோதரர்களின் குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரப் பார்க்கிறார்கள்.


**பாகிஸ்தானின் அரசியல் பொருளாதாரம்! **
இதற்கு நேர்மாறாக பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றுகூடி பிரதமர் இம்ரான்கானை பதவியில் இருந்து நீக்கி ஷரிப் குடும்ப ஆட்சியை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள். எந்த ஒளிவுமறைவுமின்றி அமெரிக்கா அங்கே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கிருக்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம் இதற்கு உடன்பட்டு இருக்கின்றன. இந்த ஆட்சி மாற்றத்தைச் செய்ய வேண்டியதற்கான காரணத்தையும் இதைச் செய்ய ஏதுவாக நிலவும் மலிவான அரசியல் சூழலையும் பாகிஸ்தானின் அரசியல் பொருளாதாரத்தின் வழி புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் பல்வேறு இனக்குழு சமூகங்களால் ஆனது. இந்திய சுதந்திரம் முதன் மூவர்ணத்தின் விடுதலையாக இருந்ததைப்போல அங்கு வலுவான பஞ்சாப் பகுதி நிலவுடைமையாளர்களின் விடுதலை கோரிக்கையாகவே அது இருந்தது. அதன்பிறகு பஞ்சாப், சிந்து பகுதியைச் சேர்ந்த நிலவுடைமை ஆதிக்க பெருமுதலைகளான ஷரிப், பூட்டோ குடும்பத்தினரே அங்கே அரசியல் ஆதிக்கம் செய்து வந்தனர்.
இவர்களைத் தவிர்த்து அந்நாட்டு ராணுவம் மற்றுமோர் அரசியல் சக்தியாக இருந்து வந்திருக்கிறது. இந்த இரு குடும்பங்களும் தங்களின் பொருளாதார சொந்த சமூக வலுவுடன் அரசியல் ஆதிக்கம் செய்தன என்றால், ராணுவம் தனது ஆயுத வலுவுடன் அரசியல் செய்து பொருளாதாரப் பலன்களை அடைந்து வந்தது. பனிப்போர் காலத்தில் அமெரிக்க சார்பெடுத்து அவர்களுக்கு நெருக்கமான அரேபிய நாடுகளின் உதவியுடன் மக்களை இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் மூழ்கடித்து இவர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரை ஏற்படுத்தி அந்தப் பகுதியை உருக்குலைக்கும் மேற்கின் திட்டத்தின் பங்காளியாகவும் பிராந்திய அடியாளாகவும் இருந்து வந்தார்கள். பாகிஸ்தானில் அந்நியப் படைகளை நிறுத்த அனுமதித்து அந்த மண்ணின் இறையாண்மை கிலோ எவ்வளவு என்று கேட்கும் நிலைக்குக்கொண்டு சென்றார்கள்.

**மாறிய பாகிஸ்தானின் பாதை! **

2008-க்குப் பிறகு அமெரிக்க – அரேபிய நாடுகளின் பொருளாதார வலு குறைய ஆரம்பித்தது. இந்தியப் பெருங்கடல் பகுதி வர்த்தகப் பகுதியை சுற்றிவளைத்து தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சியை முறியடிக்க சீனா, பாகிஸ்தான் வழியாக நிலவழியை ஏற்படுத்தி அரபிக்கடலை அடைய எடுத்த முடிவு, பாகிஸ்தானுக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தப் பாதையை நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கும் மற்ற மத்திய ஆசிய நாடுகளுக்கும் அங்கிருந்து துருக்கிக்கும் பின்பு ஐரோப்பாவுக்கும் இதை விரிவுபடுத்தும்போது இந்தப் பகுதிகளில் குவிந்து கிடக்கும் இயற்கை வளங்கள் சந்தைக்கு வரும். ஆசிய – ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையிலான வர்த்தகம் வேகமெடுக்கும். அது பாகிஸ்தானை இந்த வர்த்தகத்தின் இதயமாக மாற்றும் வாய்ப்பை வழங்கும். இவை எல்லாம் நடக்க முக்கிய நிபந்தனை, ஆப்கானிஸ்தானின் அமெரிக்க ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு வந்து அங்கு ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும்.
அமெரிக்க – அரேபிய சார்பு என்பதை தளர்த்தி சீனாவுடனும் பாகிஸ்தான் நெருங்கியது. ‘சிபெக்’ (CPEC) திட்டம் நடைமுறைக்கு வந்தது. பாகிஸ்தானில் மற்ற சமூகங்களும் தங்கள் அரசியல் நலனை முன்னிறுத்திய அரசியல் பங்களிப்பின் அதிகரிப்பும் இரு குடும்ப ஆட்சியுடன் ராணுவத்துக்கு ஏற்பட்ட பிணக்கும் பஷ்டூன் இனத்தைச் சேர்ந்த இம்ரான்கானை ஆட்சியில் அமர்த்தியது. அவரது ஆட்சியின் வெளியுறவுக் கொள்கை, பிராந்திய நாடுகளுடனான நெருக்கத்தைக் கூட்டியது. ஆப்கானிஸ்தானில் சொந்த நலனை முன்னிறுத்திய நகர்வுகளை செய்தது. இறுதியில் பாகிஸ்தான் உளவுப்பிரிவின் துணையுடன் தாலிபான்கள் மின்னல் வேகத்தில் முன்னேறி காபூலை அடைய அமெரிக்கப் படைகள் அவசர அவசரமாக, அவமானகரமான தோல்வியுடன் வெளியேற நேரிட்டது. பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இரான் நாடுகள் இணைந்துகொண்டு ஆப்கானிஸ்தானில் குறைந்தபட்ச அமெரிக்க ராணுவ இருப்பை தக்கவைக்கும் முயற்சியையும் முறியடித்துவிட்டன. பாகிஸ்தானில் ராணுவ நிலையை வைத்துக்கொள்ள அமெரிக்கா விடுத்த கோரிக்கையையும் இம்ரான்கான் அரசு நிராகரித்துவிட்டது. இதைத் தொடர்ந்து சிபெக் திட்டத்தை ஆப்கானிஸ்தானுக்கு விரிவுபடுத்துவது, மத்திய ஆசியாவுக்கும் துருக்கிக்கும் பாதையமைத்தல் எனப் பல திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

**அமெரிக்காவால் தூக்கி எறியப்பட்ட இம்ரான்கான்!**

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் கொடுத்து வந்த கடனை அரசின் செயலின்மை, சீர்திருத்தங்களை முன்னெடுக்காமை உள்ளிட்ட காரணங்களைக் காட்டி முன்பே நிறுத்திவிட்டிருந்தது. அந்நாட்டின் டாலர் கையிருப்பு சில பில்லியன் டாலருக்கு சரிந்து கொண்டிருந்தது. ஐஎம்எஃப்பின் நிபந்தனைகளான எரிபொருள், மின்சாரம் உள்ளிட்டவற்றுக்கு வழங்கிவரும் மானியத்தை வெட்டினால் அது இம்ரானின் முடியப்போகும் ஆட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்கி அவரை ஆட்சியில் இருந்து அகற்றும். ஆதலால் அவர் அதை ஏற்காமல் இருந்தார். ஏற்கனவே எண்ணெய் விலை உச்சத்தில் இருந்த நிலையில் வந்த உக்ரைன் போர் அவரை மேலும் நெருக்கடிக்குத் தள்ளும் சூழலில் அவர் ரஷ்யாவுக்குப் பயணம் செய்ய கிளம்பினார். அமெரிக்கா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதைப் புறம்தள்ளி இந்தியாவைப் போலவே இரு நாட்டு நாணயத்தில் 30 விழுக்காடு தள்ளுபடியில் எரிபொருள் மற்றும் கோதுமையை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்கிறார்.


இம்ரான்கான் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் இல்லையென்றால் ‘விளைவுகளை (Consequences)’ சந்திக்க வேண்டிவரும் என இந்த பிராந்தியத்துக்கான அமெரிக்க துணைச்செயலர் டொனால்டு லு பாகிஸ்தான் தூதருக்குச் செய்தி அனுப்புகிறார். ராணுவ தளபதி பஜ்வா, ‘ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர் கண்டிக்கத்தக்கது; அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கமான உறவைப் பேணவே விரும்புகிறது’ எனத் தன்னுடைய சமிக்கையை வெளிப்படுத்துகிறார். இம்ரான்கான் அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சி நடக்கிறது. அது மற்றவரை ஆட்சியில் அமர்த்தி இவரின் முன்னெடுப்புகளைத் தடுக்கும் என்பதால் இம்ரான்கான் ஆட்சியைக் கலைத்து மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சி செய்கிறார். அது சட்டத்துக்குப் புறம்பானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவே இம்ரான்கான் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஷரிப் குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. இந்திய ஆளும்வர்க்கம் பழைய பாசத்துடன் தனது பேராதரவை வழங்குகிறது.

**புதிய ஆட்சியும் போக்கும்…**

புதிய ஆட்சி சிபெக் திட்டத்தை வேகப்படுத்தும் என்கிறார் ஷரிப். ‘அமெரிக்காவுக்குத்தான் நாம் அதிகமாக ஏற்றுமதி செய்கிறோம். அவர்களின் ராணுவ தளவாடங்கள் மேம்பட்ட ஒன்று’ என்கிறார் பஜ்வா. அதாவது முந்தைய அமெரிக்க – சீன நிலை தொடரும். பிந்தைய சீன ராணுவ ஒப்பந்தம், ரஷ்ய வர்த்தக ஒப்பந்தம் கிடப்பில் போடப்படும் என்கிறார்கள். ஐஎம்எஃப்பின் சீர்திருத்தங்களை இவர் நடைமுறைப்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். அடுத்து, ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் குண்டுவீச்சில் பத்து பேர் பலி என செய்தி வருகிறது. பாகிஸ்தானின் ஆட்சி மாற்றம் ஆப்கானிஸ்தானில் சீர்குலைவை ஏற்படுத்தி, அது அந்த பிராந்தியம் முழுக்க எதிரொலித்து பழைய குழப்பகரமான நிலைக்குச் செல்லும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதை மற்ற நாடுகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இம்ரான்கான், ‘இவர்கள் அமெரிக்காவுக்கு விலைபோய் விட்ட கைக்கூலிகள்’ எனக் கூறி பல வீதி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார். அவருக்கு அங்கே மாபெரும் அளவில் மக்கள் கூட்டம் கூடுகிறது. அங்கு நிலவும் அமெரிக்க எதிர்ப்பை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி இவர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தி அடுத்து ஆட்சிக்கு வரும் திசையில் அவர் பயணிக்கிறார். இது வரப்போகும் தேர்தலில் பாகிஸ்தானின் வழைமையான குடும்ப, ராணுவ ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்து இந்த பிராந்தியத்தின் முக்கிய அரசியல் மாற்றமாக மாறுமா என்ற கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்லும்.

இம்ரானைபோல சொந்த நாணய வர்த்தகம் தள்ளுபடி விலையில் எண்ணெய் இறக்குமதி செய்த இந்தியாவின் மீதான அமெரிக்காவின் அழுத்தம் என்ன?

**நாளை காலை 7 மணி பதிப்பில் பார்க்கலாம்.**

**[பகுதி 1](https://www.minnambalam.com/politics/2022/04/20/1/creating-turbulence-in-south-asia)**

**கட்டுரையாளர் குறிப்பு**

**பாஸ்கர் செல்வராஜ்,** தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *