மோடி உயிருக்கு ஆபத்தா? பஞ்சாப்பில் நடந்தது என்ன?

politics

பஞ்சாப் மாநிலத்தில் நேற்று (ஜனவரி 5) பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்றபோது மேம்பாலம் ஒன்றில் 20 நிமிடங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது இந்தியா தாண்டி உலகம் முழுதும் பேசு பொருளானது. நடு சாலையில் பிரதமர் தனது காரில் காத்திருந்தது அனைவருக்கும் தெரிந்தது. இதையடுத்து விமான நிலையம் திரும்பிய பிரதமர் தனது பஞ்சாப் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 6) காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் பிரதமர் மோடி. இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நிகழ்ந்த குறைபாடு கவலையளிக்கிறது. நேற்று பஞ்சாப்பில் பிரதமருக்கு என்ன நடந்தது என்பதை அவரிடமே நேரில் கேட்டுத் தெரிந்துகொண்டார் குடியரசுத் தலைவர்”என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

**பஞ்சாப்பில் நேற்று பிரதமருக்கு என்ன நடந்தது?**

டெல்லியில் இருந்து ஜனவரி 5 ஆம் தேதி காலை புறப்பட்ட பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் பதின்டா விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து ஹுசைன்வாலாவில் இருக்கும் தேசிய மாவீரர்கள் நினைவிடத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்து ஃபெரோஸ்பூரில் வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார். மேலும்,

பஞ்சாப் மாநிலத்தின் கடுமையான எதிர்ப்பையும் போராட்டத்தையும் எதிர்கொண்ட மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்த பிறகு முதன் முறையாக பஞ்சாப்புக்கு பிரதமர் மேற்கொள்ளும் பயணம் இது.

நேற்று டெல்லியில் இருந்து புறப்படும்போது காலை 7.54 க்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பஞ்சாப்பின் சகோதர சகோதரிகளை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். இன்று ஃபெரோஸ்பூரில் நடக்க இருக்கும் விழாவில் 42 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சாப் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறேன்” என்று மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.

இதே மகிழ்ச்சியோடுதான் மோடி பஞ்சாப்பில் பதின்டாவில் உள்ள பிஷியானா விமான தளத்தில் காலை 10.25 க்கு வந்திறங்கினார். ஆனால் அப்போதைய நிலவரப்படி வானிலை மிகவும் மேக மூட்டமாக இருந்ததால் பிரதமர் மோடி சுமார் இருபது நிமிடங்கள் விமான தளத்திலேயே காத்திருந்தார். மேகமூட்டம் விலகினால் ஹெலிகாப்டர் பயணத்தைத் தொடர்வது என்று கருதினார்கள். ஆனால் மேகமூட்டம் தொடர்ந்ததால், ஹுசைன்வாலாவுக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்வது சரியாக இருக்காது என்று பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமரிடம் எடுத்துக் கூறினர். மேலும் ஹுசைன்வாலா என்ற அந்த ஊர் பாகிஸ்தான் எல்லை பகுதிக்கு அருகே உள்ள ஊராகும். எனவே பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்தனர்.

பிரதமரின் பஞ்சாப் பயணம் அரசு மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் பயணத்தை ரத்து செய்யவும் முடியாது. எனவே வேறு என்ன வழி என்று அவசரமாக ஆலோசித்த பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள்… ஹெலிகாப்டர் பயணத்துக்கு பதில் சாலைமார்க்கமாகவே காரிலேயே சென்றுவிடலாம் என்று ஆலோசனை செய்தனர்.

அதன்படி DL2CA18189 என்ற எண் கொண்ட பிரதமரின் அதி நவீன கார் வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகளின் அணிவகுப்போடு சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்தை அடைய சாலை வழிப் பயணத்தைத் துவக்கினார் பிரதமர்.

பிரதமரின் பயண தூரத்தில் 90% முடிந்துவிட்ட நிலையில் ஹுசைன்வாலா மாவீரர் நினைவிடத்துக்கு இன்னும் 30 கிலோ மீட்டர் தூரமே இருந்தபோது… பிரதமரின் கான்வாய் ஒரு மேம்பாலத்தின் மீது சட்டென வேகம் குறைந்தது. சிற்சில நிமிடங்கள் அப்படியே நின்றது. தடதடவென பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் வாகனங்களில் இருந்து மேம்பாலத்தில் குதித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பிரதமரின் காரைச் சுற்றி அரண் போல் அமைத்தனர்.

பிரதமர் மோடிக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. மாஸ்க் அணிந்துகொண்டு தனது காரின் முன் இருக்கையில் அப்படியே அமர்ந்திருந்தார் மோடி.

ஒன்றல்ல இரண்டல்ல… ஐந்து நிமிடங்கள் ஆனது. பிரதமரின் வாகனத்திலிருந்து கண்ணுக்கெட்டும் தூரத்தில், விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் சம்பவத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றிக் கொன்ற சர்ச்சையில் சிக்கியவரின் தந்தையான ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலகக் கோரி தான் விவசாயிகள் அங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

பிரதமர் செல்லும் சாலையில் திமுதிமுவென மக்கள் திரண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்த பிரதமரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பஞ்சாப் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டார். அடுத்தடுத்த நிமிடங்கள் அந்த மேம்பாலம் இந்திய அளவில் முக்கியத்தும் வாய்ந்த பகுதியாக மாறிவிட்டது.

பதினைந்து நிமிடம் முதல் இருபது நிமிடங்கள் வரை பிரதமரின் கார் ஒரு இஞ்ச் கூட முன்னேறவில்லை. திடீரென பிரதமரின் கான்வாய் அப்படியே எதிர்த்திசையில் திரும்பியது. அதைத் தொடர்ந்து பிரதமரின் காரும் திரும்பியது. இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு பிரதமரின் கான்வாய் மறிக்கப்பட்டு போராட்டம் காரணமாக வந்த வழியே செல்வது இந்தத் தலைமுறைக்கு இதுதான் முதல் முறையாக இருக்கக் கூடும்.

அதேநேரம் ஃபெரோஸ்பூரில் பிரதமர் கலந்துகொள்ள இருந்த கூட்டத்தில், ‘பிரதமரின் வருகை ரத்து செய்யப்பட்டுவிட்டது. காரணங்கள் தற்போது தெரியவில்லை’ என்று அறிவித்தனர்.

அந்த மேம்பாலத்தில் இருந்து திரும்பிய பிரதமரின் கான்வாய் மீண்டும் 170 கிலோ மீட்டர் பயணித்து பதின்டா விமான நிலையம் சென்று, அங்கிருந்து பிரதமர் உடனடியாக டெல்லி திரும்பிவிட்டார். ‘நான் உயிரோடு திரும்பிவிட்டேன் என்று உங்கள் முதல்வரிடம் சொல்லிவிடுங்கள்’ என்று பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கூறிவிட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சம்பவத்தை அறிந்த ஒன்றிய உள்துறை அமைச்சகம், ‘பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு அதிர்ச்சி அளிக்கிறது. பஞ்சாப் அரசு இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த அலட்சியத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தது.

உடனடியாக பாஜகவினர் பஞ்சாப்பின் காங்கிரஸ் முதல்வரான சரண் ஜித் சிங் சென்னிதான் இதற்குக் காரணம் என்று அரசியல் ரீதியாக தாக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த பஞ்சாப் முதல்வர் சரண் ஜித் சென்னி,

“பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் எந்த பாதுகாப்புக் குறைபாடும் இல்லை. பாஜக இதற்கு அரசியல் சாயம் பூசப் பார்க்கிறது. விவசாயிகள் அமைதியாக நடத்திய போராட்டத்தை பிரதமரின் பாதுகாப்போடு முடிச்சு போட்டு பெரிதாக சித்திரிக்கிறார்கள். விவசாயிகள் போராட்டம் நடத்திய அந்த சாலை பிரதமர் வரும் பயணத் திட்டத்திலேயே இல்லை.

நாங்கள் பிரதமர் மீது முழு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். விவசாயிகள் டெல்லியில் ஆண்டு முழுதும் சாலை மறியல் செய்திருக்கிறார்கள். அப்போது யாருக்கும் எதுவும் நிகழவில்லை. ஒருவேளை அப்படி பிரதமரின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்குமானால், நான் முதலில் ரத்தம் சிந்தி பிரதமரைக் காப்பாற்றுவேன். எந்த விருந்தினரையும் பஞ்சாபி தாக்கமாட்டான்” என்ற பஞ்சாப் முதல்வர் மேலும் தொடர்ந்தார்.

“பிரதமரின் பயணம் என்பது பதின்டாவில் இருந்து ஃபெரோஸ்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் என்றுதான் முதலில் மாநில அரசுக்கு சொல்லப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில்தான் பிரதமர் ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்துவிட்டு, சாலை மார்க்கமாக செல்கிறார் என்று எங்களுக்கு சொல்லப்பட்டது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா எனக்கு ஏற்கனவே போனில் பேசிய நிலையில், பாஜகவின் அரசியல் பேரணிகள் நடக்கும் இடங்களில் விவசாயிகளின் போராட்டம் எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொண்டோம். பாஜகவின் பேரணிகள் நடக்கும் இடங்கள் எல்லாம் முதல் நாள் இரவே க்ளியர் செய்யப்பட்டன. ஆனால் அதையும் மீறி சில விவசாய குழுவினர் ஆங்காங்கே திடீரென வந்து போராட்டம் செய்திருக்கிறார்கள். அதுபோலத்தான் அந்த மேம்பாலத்திலும் சிலர் திரண்டிருக்கிறார்கள். அவர்களை க்ளியர் செய்ய 10 முதல் 20 நிமிடங்கள் ஆனது. உடனே மாற்றுப் பாதையில் செல்வதற்கு ஏற்பாடு செய்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமரோ திரும்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார்” என்றார் முதல்வர்.

“பிரதமரை வரவேற்க முதல்வர் என்ற முறையில் நீங்கள் ஏன் செல்லவில்லை?” என்று கேட்கப்பட்டதற்கு… “நான் கொரோனா பாசிடிவ் கொண்ட ஒருவரோடு நெருக்கமாக இருந்த காரணத்தால் பிரதமரை வரவேற்க செல்லமுடியவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார் பஞ்சாப் முதல்வர்.

இந்தப் பின்னணியில் இன்று (ஜனவரி 6) பஞ்சாப் மாநில அரசு பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி மெஹ்தாப் சிங் கில், உள்துறை முதன்மைச் செயலாளர் அனுராக் வர்மா ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கிடையே பிரதமரின் பாதுகாப்புக் குறைபாடு பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான மணிந்தர் சிங் இன்று (ஜனவரி 6) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஜனவரி 7 ஆம் தேதி தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *