அனைத்து கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் 100 கோடி தடுப்பூசி சாதனை பதிலாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், நேற்று (அக்டோபர் 21) இந்தியாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு மிகப் பெரிய சாதனை படைக்கப்பட்டது.
இந்த சாதனை குறித்து இன்று(அக்டோபர் 22) பிரதமர் நரேந்திர மோடி தொலைகாட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
”நாட்டு மக்களின் கூட்டு முயற்சியில் தான் 100 கோடி தடுப்பூசி என்பது சாத்தியமானது. 100 கோடி என்பது வெறும் எண் மட்டுமில்லை; புதிய இந்தியாவின் தொடக்கமாகும். இந்த சாதனை 130 கோடி மக்களுக்கும் சொந்தமானது. வளர்ச்சி அடைந்த பல நாடுகளால் கூட அடைய முடியாத சாதனையை இந்தியா 257 நாட்களில் அடைந்துள்ளது.
தடுப்பூசியில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு குழுக்களிடமிருந்து அழுத்தம் வந்தது. ஆனால் எங்களின் மற்ற திட்டங்களைப் போல, தடுப்பூசி இயக்கத்திலும் விஐபி கலாச்சாரம் இல்லை என்பதை அரசு உறுதி செய்துள்ளது. ஏழை,பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
உலக நாடுகள் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களுக்கு இருக்கும் தயக்கத்துடன் போராடுகின்றன. நம் நாட்டிலும் அந்த பிரச்சினை இருந்தது. ஆனால், அதையெல்லாம் முறியடித்து 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம். அறிவியல் மற்றும் புதுமைகளின் மீதான நம்பிக்கையால், இந்தியா இந்த பெரிய சாதனையை அடைய முடிந்தது.
இந்தியாவின் தடுப்பூசி திட்டம் உலகளவில் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்த ஆரம்பிக்கப்பட்டபோது இந்தியா மீது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. பெரும் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, தடுப்பூசிகளை எப்படி பெறும், அனைத்து மக்களுக்கும் எப்படி செலுத்தும் என பல கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் 100 கோடி தடுப்பூசி சாதனை பதிலளித்துள்ளது.
அதுபோன்று, விளக்கு ஏற்றுவதாலும், கைத்தட்டுவதாலும், கொரோனாவை ஒழிக்க முடியுமா என பலரும் கேலி, கிண்டலும் செய்தனர். கொரோனாவுக்கு எதிரான போரில் களப்பணியாற்றி கொண்டிருக்கும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை ஊக்குவிக்கவே கைகள் மற்றும் தட்டுகளில் ஓசை எழுப்பவும்,விளக்கேற்றவும் கூறினோம். இருப்பினும், எங்களது வேண்டுகோளுக்கு மக்கள் செவிசாய்த்தனர். அவர்கள் கைதட்டியதும், விளக்கேற்றியதும் தடுப்பூசித் திட்டத்தில் அவர்களின் பங்களிப்பை உணர்த்துகிறது. அதனால், அனைத்து விமர்சனங்களையும் 100 கோடி தடுப்பூசி சாதனை முறியடித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி கொள்முதல் செய்த தேசம் என்ற நிலை மாறி, சொந்தமாக தடுப்பூசி தயாரிக்கும் நாடு என்ற நிலை உருவாகி இருப்பது பெருமையாக இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல், தற்போது, இந்தியப் பொருளாதாரம் குறித்து நிபுணர்கள் நேர்மறையான கணிப்புகளை கூறுகின்றனர். இதனால், பொருளாதாரம் நிச்சயம் மென்மேலும் ஏற்றம் அடையும் சூழல் உருவாகியுள்ளது” என்று கூறினார்.
நாட்டு மக்களுக்கு தீபாவளி பண்டிகை வாழ்த்து கூறிய பிரதமர்,” கடந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக தீபாவளியின் போது விற்பனை கணிசமாகக் குறைந்ததால், பல வர்த்தகர்கள் பெரும் இழப்பைச் சந்தித்தனர். இந்த ஆண்டு, 100 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பாக இருப்பதால், வர்த்தகர்கள் வழக்கம் போல் வியாபாரம் செய்யலாம். முன்பொரு காலத்தில் ‘இந்த நாட்டில் செய்யப்பட்டது, ‘அந்த நாட்டில் செய்யப்பட்டது’, என்ற வார்த்தைகளை அதிகமாக கேட்டு கொண்டிருந்தோம். தற்போது, அனைத்து இந்தியர்களும் ‘மேட் இன் இந்தியா’வின் சக்தியை உணர்ந்துள்ளனர். அதனால், மேட் இன் இந்தியா” தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் இந்திய உற்பத்தியாளர்களை ஊக்குவிக்குமாறு அனைத்து இந்தியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
பண்டிகையை நல்லமுறையில் கொண்டாட வேண்டும், அதேசமயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை விட்டுவிடக் கூடாது என்று எச்சரித்த பிரதமர், வீட்டை விட்டு வெளியேறும்போது எப்படி மறக்காமல் காலணிகளை அணிந்து செல்கிறோமோ, அதுபோன்று மறக்காமல் முகக்கவசத்தையும் அணிந்து வெளியே செல்ல வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருப்பதால் ஆயுதங்களை கீழே போட்டு விடக்கூடாது” என்று அறிவுறுத்தினார்.
**-வினிதா**
�,”