மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அரசியலில் மூத்த தலைவராக வலம்வரும் என்.சங்கரய்யா சுதந்திரப் போராட்ட வீரர். இவர் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். என்.சங்கரய்யாவைப் பெருமைப்படுத்தும் வகையில், கடந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருது அவருக்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. தகைசால் தமிழர் விருதுக்காக அளிக்கப்படும் ரூ.10 லட்சத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கே வழங்குகிறேன் என்று என்.சங்கரய்யா அறிவித்துவிட்டார்.
அரசியல் பணியிலிருந்து விலகி குரோம்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஓய்வில் இருந்து வரும் என்.சங்கரய்யாவுக்குக் கடந்த இரண்டு தினங்களாக லேசான காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ட்விட்டரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நலமுடன் உள்ளார். அவருக்கு ஆக்ஸிஜன் அளவு மற்ற அனைத்தும் வழக்கம் போலவே உள்ளது. சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை டீன் தேரணிராஜன் மற்றும் மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். அவரை கவனித்துக்கொள்ள தனி மருத்துவக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு தெரிவித்தார். என்.சங்கரய்யா உடல்நலம் குறித்தும் கேட்டு அறிந்தார். அவருக்கு விவரங்களை தெரிவித்துள்ளேன். மேலும் சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றியும் தெரிவித்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் விரைவில் முழுநலம் பெற்றுத் திரும்பிட விழைகிறேன். தோழர் அவர்களைக் கவனித்துக்கொள்ளத் தனி மருத்துவக் குழுவையும் ஏற்பாடு செய்து உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-வினிதா**
�,”