திமுகவின் ஒன்றுக்கு மூன்று பார்முலா…6 தொகுதிகளை ஏற்றது இ.கம்யூ.

Published On:

| By Balaji

இழுபறியாக இருந்துவந்த இடதுசாரிகள்+ திமுக தொகுதிப்பங்கீட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டு, இன்று மாலை உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வந்திருந்த முத்தரசன், துணைச்செயலாளர்கள், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ஜி.பழனிச்சாமி ஆகியோருக்கு ஸ்டாலின் கைகொடுத்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

திமுக அணியில் முஸ்லிம் லீக், மமகவைத் தொடர்ந்து மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் பேச்சுவார்த்தை நீடித்துவந்தது. நேற்று நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட மதிமுக, சிபிஐ கட்சிகளுடனான தொகுதிப்பங்கீடு இறுதியாகவில்லை.

காங்கிரஸ் தரப்பில் சாதகமான சமிக்ஞைகள் தென்பட்டாலும் உடன்பாட்டை நோக்கி நகராமல் இருக்கிறது. மதிமுக மற்றும் இடதுசாரிகளுடனான பங்கீட்டை விரைந்து முடிக்க திமுக குழுவினர் களமிறங்கினர்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளைப் பொறுத்தவரை, ஒரு மக்களவைத் தொகுதிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள் எனும் கணக்கைக் கடைப்பிடிப்பதாகவும், அதன்படியே விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும், சிபிஐ, சிபிஐ-எம் கட்சிகளுக்கும் அவ்வாறே அவர்களின் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கு தலா 3 தொகுதிகள் வீதம் 6 தொகுதிகள் என்பதை திமுக குழுவினர் மீண்டும் வலியுறுத்தினர்.

மதிமுகவுக்கும் ஒரு மக்களவைத்தொகுதி என்பதால் 3 சட்டமன்றத் தொகுதிகள் அத்துடன் ஒரு தொகுதி சேர்த்து நான்கு சட்டமன்றத் தொகுதிகள் எனப் பேசப்பட்டுள்ளது; கூட்டணிக் கட்சிகளில் எந்தப் பாகுபாடும் இல்லை என்று திமுகவின் சார்பில் வியாக்யானத்தை முன்வைத்துள்ளனர்.

இடதுசாரிகளில் சிபிஐ கட்சி 8 தொகுதிகள் என நின்றபோதும், திமுக தரப்பில் மீண்டும் மீண்டும் இந்த 1: 3 கணக்கையே கூறியதை அடுத்து, அவர்கள் ஒருவழியாக திமுகவின் நிலைக்கு உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

திமுக தரப்புக்கும் காங்கிரஸ் தரப்பு தன்னுடைய பதிலை திட்டவட்டமாகத் தெரிவிக்காமல் இழுப்பதால், வாய்ப்புள்ள கட்சிகள் உடன் முதலில் தொகுதிப்பங்கீட்டை முடித்துவிடுவது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் மூன்றாம் கட்டமாக இன்று பேசி, கையோடு உடன்பாட்டுக்கும் வந்துள்ளனர்.

இன்னொரு இடதுசாரி கட்சியான சிபிஐ-எம் இந்த ஒன்றுக்கு மூன்று பார்முலாவை அப்படியே ஏற்றுக்கொள்ளுமா என்பதுதான் இப்போதைய கேள்வி!

– பாலசிங்கம்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share