மாநிலங்களுக்கான தடுப்பூசி விலையை ரூ.400இல் இருந்து 300 ஆக குறைத்துள்ளது சீரம் நிறுவனம்.
கொரோனா தடுப்பூசி மீது முதலில் ஆர்வம் இல்லாமல் இருந்த மக்கள், தற்போது விழிப்புணர்வோடு தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள முன்வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை திடீரென உயர்த்தப்பட்டது. அதாவது மத்திய அரசுக்கு இதுவரை ரூ.150க்கு விற்கப்பட்டு வந்த கோவிஷீல்டின் விலை, மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் விலை உயர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசியின் விலை உயர்வுக்கு மாநிலங்கள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், தடுப்பூசி விலையைக் குறைக்க உத்தரவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்குப் பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில், சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா ட்விட்டரில், “மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில், மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியின் விலையை ரூ.400இல் இருந்து 300 ஆக குறைக்கிறோம். இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இது மாநில அரசுகளின் கோடிக்கணக்கான நிதியை மிச்சப்படுத்தும். மேலும் அதிக தடுப்பூசிகளை வாங்கவும், எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றவும் உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களுக்கு ஒரு தடுப்பூசி ரூ.600க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400க்கும் வழங்கப்படும் என கூறியிருந்த நிலையில், தற்போது மாநில அரசுகளுக்கு மட்டும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.
**தடுப்பூசி**
நேற்று காலை வரை நாட்டில் 14 கோடியே 78 லட்சத்து 27,367 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
சுகாதார பணியாளர்களில் 93 லட்சத்து 47,775 பேர் முதல் டோஸும், 61 லட்சத்து 6,237 பேர் இரண்டாவது டோஸும் போட்டுக்கொண்டுள்ளனர். முன்களப் பணியாளர்களில் 1 கோடியே 22 லட்சத்து 21,975 பேர் முதல் டோஸும், 65 லட்சத்து 26,378 பேர் இரண்டாவது டோஸும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 10 லட்சத்து 85,677 பேர் முதல் டோஸும், 93 லட்சத்து 37,292 பேர் இரண்டாவது டோஸும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
45 – 60 வயதுள்ளவர்களில் 5 கோடியே 2 லட்சத்து 74,581 பேர் முதல் டோஸும், 29 லட்சத்து 27,452 பேர் இரண்டாவது டோஸும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் 15 லட்சத்து 69,000 பேர். இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் 9 லட்சத்து 87,182 பேர்.
**வினிதா**
.�,