இனி தேர்தல்கள் இப்படித்தான் நடக்கும்: தேர்தல் ஆணையம்

Published On:

| By Balaji

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனா காலத்தில் இடைத் தேர்தல், பொதுத் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்பதால் மார்ச்சிலிருந்து செப்டம்பருக்குள் நடத்த வேண்டிய இடைத் தேர்தல்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் தள்ளிவைத்தது.

இதனிடையே பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், இடைத் தேர்தல்களும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் நடைபெறும் இடைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலுக்கான [வழிகாட்டு நெறிமுறைகளை](file:///C:/Users/kannan/Downloads/Guidelines%20for%20Conduct%20of%20General%20Election_Bye%20election%20during%20COVID-19.pdf) இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (ஆகஸ்ட் 21) வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் செயல்பாடுகளில் ஈடுபடும் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். தேர்தல் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் தெர்மல் ஸ்கேனர் வைத்து சோதனை செய்ய வேண்டும். கையை சுத்தம் செய்ய சானிட்டைசர், சோப் கட்டாயம் இருக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.

ஒரு வாக்குச் சாவடிக்கு 1,000 முதல் 1,500 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தெர்மல் ஸ்கேனர் சோதனை, சானிட்டைசர் இடம்பெறுவது கட்டாயம். வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன் அளித்து வாக்குச் செலுத்த வைக்கலாம். வாக்குச் சாவடி உள்ளே செல்லும்போதும் வெளியே செல்லும்போதும் சானிட்டைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். மாஸ்க் அணிந்து வராதவர்களுக்கு மாஸ்க் வழங்க வேண்டும். அடையாள அட்டை சரிபார்ப்புக்காக மட்டுமே வாக்காளர்கள் மாஸ்க்கை இறக்கி முகத்தை காண்பித்தால் போதுமானதாகும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும்போது அலுவலர்கள் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும். வாக்குப்பதிவின்போது தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும். வேட்புமனுத் தாக்கலின்போது இருவர் மட்டுமே வரவேண்டும். அதிகபட்சமாக இரு வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

**பிரச்சாரம்**

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மாநில, மாவட்ட மற்றும் தொகுதி வாரியாக சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு பிரச்சார பொதுக்கூட்டங்கள், பொது இடங்களில் வாக்கு சேகரித்தல் நடைபெறலாம். பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தை மாவட்டத் தேர்தல் அதிகாரி முன்கூட்டியே பார்வையிட்டு, உள்ளே செல்லும் வழி, வெளியே வரும் இடம் ஆகியவற்றை அடையாளம் காண வேண்டும். அங்கு சமூக இடைவெளியை உறுதிப்படுத்துவதற்கான குறியீடுகள் இருக்க வேண்டும்.

இந்த ஒவ்வொரு செயல்பாட்டின் போதும் மாஸ்க்குகள், சானிட்டைசர், தெர்மல் ஸ்கேனிங் உள்ளிட்ட அனைத்துவிதமான கொரோனா தடுப்பு சாதனங்களுக்கான தேவைகளும் பூர்த்தி செய்யப்படுவதை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும்.கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005, ஐபிசி 188 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

**வாக்கு எண்ணிக்கை**

ஒரு அறைக்குள் 7 வாக்கு எண்ணும் மேசைகள் இடம்பெறலாம். ஒரு தொகுதியின் வாக்கு எண்ணிக்கையைக் கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்கள் மூலமாக 3-4 அரங்குகளில் நடத்துவதற்கு பரிசீலிக்கலாம். விவிபாட் உள்ளிட்ட இயந்திரங்களை எடுத்துச் செல்லும் முன் சானிட்டைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதிக எண்ணிக்கையிலான வாக்குச் சாவடி முகவர்கள் கூடுவதைத் தவிர்க்க வாக்கு எண்ணிக்கையை பெரிய திரையில் காட்சிப்படுத்தலாம்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share