சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் கோவிட் மரணங்கள்: உண்மையான கணக்கு என்ன?

politics

அவந்திகா கோஷ்
**[லான்சட்](https://bit.ly/36ddzrH)** ஆய்வு தரும் அதிர்ச்சித் தகவல்கள்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை, உலக அளவில் கோவிட்-19 பாதிப்பு காரணமாக 1.82 கோடிப் பேர் இறந்துள்ளனர் என்று லான்சட் இதழின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது அதிகாரபூர்வ மரணங்களைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.

இந்தியாவில் அதிகபட்சமாக 40.7 லட்சம் கூடுதல் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதிக மக்கள்தொகை காரணமாக, உலக அளவிலான இறப்புகளில் 22 சதவிகிதம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது என்றும் லான்சட் அறிக்கை தெரிவிக்கிறது.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதாரக் காரணிகள் மற்றும் மதிப்பீடு கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, 12 இந்திய மாநிலங்களின் கூடுதல் கோவிட் மரணங்களையும் ஆய்வு செய்துள்ளது. இதன்படி, பிகார் மாநிலத்தில் 26.69 சதவிகிதம் அதிகபட்சமாகவும், கோவாவில் 0.96 சதவிகிதம் குறைந்தபட்சமாகவும் அமைந்துள்ளது.

“2021 ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலத்தில் அதிகரித்த கோவிட்-19 பாதிப்பு உள்பட, 12 இந்தியா மாநிலங்களில் நிகழ்ந்த கூடுதல் மரணங்களை ஆய்வு செய்ததில் தேசிய அளவில் இந்தியா ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 152.5 கூடுதல் மரணங்களைக் கொண்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதே காலத்தில் இந்தியா வெளியிட்ட ஒரு லட்சம் பேருக்கான 18.3 என்னும் விகிதத்தைவிட இது மிக அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகக் கூடுதல் மரணங்களைக் கொண்ட மற்ற நாடுகள்: அமெரிக்கா (11.3 லட்சம்), ரஷ்யா (10.7 லட்சம்), மெக்சிகோ (7.9 லட்சம்), பிரேசில் (7.9 லட்சம்), இந்தோனேசியா (7.3 லட்சம்), பாகிஸ்தான் (6.6 லட்சம்).

இந்த ஏழு நாடுகள் உலக அளவிலான கூடுதல் மரணங்களில் பாதி அளவைக் கொண்டுள்ளன.

இந்த நாடுகளில் ரஷ்யா அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. (ஒரு லட்சம் பேருக்கு 375 மரணம்), மெக்சிகோ (ஒரு லட்சம் பேருக்கு 325 மரணம்), பிரேசில் ஒரு லட்சம் பேருக்கு 187 மரணம்), அமெரிக்கா (ஒரு லட்சம் பேருக்கு 179 மரணம்), இந்தியா (ஒரு லட்சம் பேருக்கு 152 மரணம்) என இந்த நாடுகள் கூடுதல் மரண விகிதம் கொண்டுள்ளன.

அனைத்து இந்திய மாநிலங்களிலும் வெவ்வேறு அளவில் அதிக கூடுதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“2020 ஜனவரிமுதல் 2021 டிசம்பர் வரை எட்டு இந்திய மாநிலங்கள் ஒரு லட்சம் பேருக்கு 200 பேருக்கு மேல் மரண விகிதத்தைக் கொண்டிருந்தன. உலகில் 50 நாடுகளில்தான் இத்தகைய விகிதம் காணப்பட்டது”.


உத்தரகாண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரம், சத்தீஷ்கர், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா ஆகியவையே அந்த மாநிலங்கள்.

அருணாசலப் பிரதேசம், தெலங்கானா, சிக்கிம், ராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் சர்வதேச அளவைவிட குறைவான கூடுதல் இறப்பு விகிதம் கொண்டுள்ளன. (ஒரு லட்சம் பேருக்கு 120.6).

கடந்த ஆண்டு டிசம்பர் வரை, ஏழு இந்திய மாநிலங்கள் 2 லட்சத்துக்கும் அதிகமான கூடுதல் இறப்புகளைக் கொண்டிருந்தன. இவை பற்றிய விவரம் வருமாறு: மேற்கு வங்கம் 2,20,000 (1,32,000–2,54,000), மத்தியப் பிரதேசம் 2,23,000 (1,88,000–2,53,000), தமிழ்நாடு 2,60,000 (1,99,000–3,01,000), கர்நாடகம் 2,84,000 (2,23,000–3,27,000), பிகார் 3,23,000 (2,57,000–3,88,000), உத்தரப் பிரதேசம் 5,17,000 (4,18 000–6,02,000), மகாராஷ்டிரம் 6,16,000 (4,84,000–7,36,000).

உலக அளவில் கூடுதல் மரணங்கள் இந்திய மாநிலங்களில் அதிகம் இல்லை என்றாலும், மக்கள்தொகை காரணமாக இந்தியா உலக இறப்புகளில் 22 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.


இந்த ஆய்வு கோவிட் தொடர்பாக ஏற்பட்ட கூடுதல் மரணங்கள் குறித்த முதல் ஆய்வறிக்கையாக அமைகிறது. 191 நாடுகளில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவிட் 19 காரணமாக தெற்காசியாவில் 53 லட்சம் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் 17 லட்சம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் 14 லட்சம் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்தியாவில் நிகழ்ந்த கூடுதல் மரணங்கள் தொடர்பான தகவல்களை ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனினும், மத்திய அரசு இந்த தகவல்களை மறுத்துள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள மறுப்பில், கோவிட்-19 பாதிப்பு மரணங்கள் உள்பட இறப்புகளை பதிவு செய்ய இந்தியா சிறந்த செயல்முறையைக் கொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம அளவில் தொடங்கி மாநில அளவு வரை வெளிப்படையான முறையில் இறப்பு தகவல்கள் தொகுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


**அவந்திகா கோஷ்** – துணை – இணை ஆசிரியர். தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா உட்பட இந்தியாவின் மிகப்பெரிய ஆங்கில நாளிதழ்களில் 17 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சுகாதாரக் கொள்கை, பொது சுகாதாரம், உடல்நலம் மற்றும் அரசியலில் ஆழ்ந்த ஆர்வம்கொண்டவர்.

நன்றி: [தி பிரின்ட்](https://theprint.in/health/40-lakh-more-indians-died-during-2-yrs-of-covid-than-avg-highest-in-world-says-lancet-study/866987/)
தமிழில்: சைபர் சிம்மன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.