mதமிழக சட்டமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா?

Published On:

| By Balaji

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே பீகார் மாநில சட்டமன்றத்திற்கான பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

பீகாரில் அக்டோபர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. எனினும், அம்மாநிலத்தில் 1,28,780 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 538 பேர் உயிரிழந்தனர். இதனால் சட்டமன்றத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. ஆனாலும், கொரோனா காலத்தில் தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

இந்த நிலையில் அவினாஷ் குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், “கொரோனா காலத்தில் தேர்தலை நடத்துவது மக்களின் உயிருக்கும், உடல்நலத்துக்கும் அச்சுறுத்தலாக அமையும். அசாதாரண சூழ்நிலைகளில் தேர்தலை ஒத்திவைக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அனுமதிக்கிறது. எனவே, பீகார் சட்டமன்றத் தேர்தலைத் தள்ளிவைக்க தலைமைத் தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு அஷோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர். ஷா அடங்கிய அமர்வு முன்பு நேற்று (ஆகஸ்ட் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில், முன்பாகவே மனுதாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கொரோனாவால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று கோருவது நியாயமான காரணமல்ல என்றும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், “தலைமைத் தேர்தல் ஆணையர் என்ன செய்ய வேண்டும் என நீதிமன்றம் சொல்ல முடியாது. அனைத்தையும் தேர்தல் ஆணையர்தான் பரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து சூழ்நிலைகளையும் கவனத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்” என்று கூறிய நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

இந்த சூழல் தமிழகத்துக்கும் பொருந்துமா என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் பதவிக் காலம் இன்னும் 8 மாதங்களில் முடிவடைய இருக்கிறது. தற்போதே தேர்தலுக்கு ஆயத்தமாகும் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன், தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுக்களும் எழுந்துள்ளது.

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க தாமதமானால், தேர்தலை நடத்துவதற்கு பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றை காரணம் காட்டி தமிழகத்தில் நடைபெற இருக்கும் தேர்தல் 6 மாதத்திற்கு தள்ளிப்போகலாம் என்று பேசப்பட்டது. எனினும், அக்டோபரில் பீகார் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட்டது என்றால் தமிழ்நாட்டிலும் அடுத்த வருடம் தேர்தலுக்கு தடை இருக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. [மதிமுக கூட்டத்தில்](https://minnambalam.com/politics/2020/07/07/24/vaiko-health-district-secerataries-meeting) நடந்த விவாதத்தில் இதுபற்றி விவாதமும் நடந்துள்ளது.

இந்த நிலையில் அக்டோபரில் நடக்க இருக்கும் பீகார் தேர்தலை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை ஏதும் விதிக்காததால், தமிழகத்தில் தேர்தல் நடத்துவதற்கும் எவ்வித தடையும் விதிக்கப்படாது என்பது தெளிவாகியுள்ளது.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share