சில்லறை விற்பனையாளர்களும் தங்களது பணியாளர்களைக் குறைக்கவுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட நிதி மற்றும் பணப்புழக்க நெருக்கடி ஆகியவை சிறு மற்றும் நடுத்தர சில்லறை விற்பனையாளர்களின் செயல்பாடுகளை முடக்கியுள்ளது. இதன் காரணமாக வேலையாட்களைக் குறைக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சிறு சில்லறை விற்பனையாளர்கள் தங்களது பணியாளர்களில் 30 சதவிகிதம் பேரை பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாகவும், நடுத்தர சில்லறை விற்பனையாளர்கள் 12 சதவிகிதம் வரை குறைப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வர்த்தக அமைப்பின், சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் 682 சிறு மற்றும் நடுத்தர சில்லறை விற்பனையாளர்கள் உட்பட 768 சில்லறை விற்பனையாளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதுபோலவே பெரிய சில்லறை விற்பனையாளர்களும் 5 சதவிகிதம் வரை தங்களது பணியாளர்களைக் குறைக்கலாம். கணக்கெடுப்புக்குப் பதிலளித்த விற்பனையாளர்கள் ஒட்டுமொத்தமாக 20 சதவிகிதம் வரை தங்களது பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம்.
இதுகுறித்து, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி குமார் ராஜகோபாலன் கூறுகையில், “சில்லறை விற்பனையாளர்கள் தங்களது ஊழியர்கள் தங்களிடமே பணியாற்ற வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால், அது அவர்களால் முடியாது. அரசாங்கம் உதவாவிட்டால் இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடும். சில்லறை விற்பனையாளர்கள் ஒரு பெரிய பகுதி செலவு என்பது பணியாளர்களின் ஊதியம்தான். ஆனால், சிறு மற்றும் நடுத்தர சில்லறை விற்பனையாளர்களால் தொழிலை நடத்த முடியவில்லை. சம்பளம் கொடுக்கக் கூட அவர்களிடம் பணம் இல்லை” என்று வருந்துகிறார்.
மளிகை மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தவிர, ஆடைகள், பர்னீச்சர், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவை விற்பனையை கொரோனா வைரஸ் தாக்கம் கடுமையாக பாதித்துள்ளது. மளிகை, உணவு அல்லாத பொருட்களின் சில்லறை விற்பனையாளர்கள் தங்களுக்கு 80 முதல் 100 சதவிகிதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
சில்லறை நிறுவனங்களில் கடந்த ஆண்டு வருவாயைக் காட்டிலும், அடுத்த ஆறு மாதங்களில் 40 சதவிகிதம் வருவாய் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 51 சதவிகித சில்லறை விற்பனையாளர்கள், ஆறு – பன்னிரண்டு மாதங்களில் மீண்டு விடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.
**எழில்**�,