கொரோனா அரசியல்: ஸ்டாலினை மீண்டும் சீண்டும் தினகரன்

politics

கொரோனாவில் அரசியல் செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலினை தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்துகொண்டே வருகிறது. இதனிடையே ஒன்றிணைவோம் வா என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார். அத்தோடு, ‘ஒருகை தட்டினால் ஓசை வராது, தனித்தனியாக உதவிகள் செய்யாமல் ஒன்றிணைந்து மக்களுக்கு உதவவேண்டும்’ எனக் கூறி களப்பணியாற்ற வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் அமமுக தொண்டர்களுக்கு இன்று (ஏப்ரல் 23) கடிதம் எழுதியுள்ள தினகரன், ஆளுங்கட்சியை விமர்சித்ததோடு, கொரோனா காலத்தில் அரசியல் செய்வதாக ஸ்டாலின் மீதும் குற்றம்சாட்டினார்.

ஊரடங்கு முடியும் வரையிலும், இன்னும் சொல்லப்போனால் அதன் பிறகும் கூட சில காலத்திற்கு இந்த நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ள தினகரன், “,எழுபது வயதுக்கு மேலானவர்களையே அது தாக்கும் என்று அபத்தமான ஒரு விளக்கத்தை முதலமைச்சரும் சுகாதாரத்துறை அமைச்சரும் சட்டமன்றத்தில் சொன்னார்கள். அப்படி பேசிய அவர்களே சில வாரங்களில், எல்லோரும் முகக் கவசம் அணியுங்கள்; அணியாமல் வெளியே வந்தால் அபராதம் என்று அறிவித்த அவலத்தையும் நாம் கண்டோம். எல்லாவற்றையும் தானே செய்ததாக இருக்க வேண்டும், தனக்கே பெயர் கிடைக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு நடந்துகொண்ட முதல்வரையும் நாம் கண்டோம்” என்று விமர்சித்துள்ளார்.

அதுபோலவே, ஊரடங்கு அமலில் உள்ளபோது பத்திரப்பதிவு அலுவலகங்களை திறக்க வேண்டிய மர்மம் என்ன? என்று கேள்வி எழுப்பிய தினகரன், “ஆளுங்கட்சிக்கு சற்றும் சளைக்காமல் எதிர்க்கட்சி தரப்பில், ஊரடங்கின் காரணமாக அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் இந்த நேரத்தில், ‘ஒன்றிணைவோம் வா’ என்று சொல்லி அழைப்பு விடுக்கும் அபத்தத்தை என்னவென்று சொல்வது?

ஊரடங்கு அமலில் உள்ளபோது, அனைத்துக்கட்சி கூட்டம் போடுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறேன் என்று ஒரு தலைவரே நேரில் போவது இதெல்லாம் என்ன நாடகம்? மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசியல் கட்சித் தலைவர் செய்கிற வேலையா இவையெல்லாம்?” என்றும் ஸ்டாலினுக்கு அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார்.

ஏற்கனவே ஊரடங்கு நிவாரணத்தை நேரடியாக வழங்க அரசு தடை விதித்தபோது கருத்து தெரிவித்த தினகரன், “கட்சிகளின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவிகளை வழங்கியபோது எந்தச் சிக்கலும் எழவில்லை. ஆனால், ஊரடங்கை மீறி கட்சித் தலைவர்களே நேரடியாக சென்று உதவிகள் வழங்கும் போது விதிகளுக்கு புறம்பாக தொண்டர்களும் அங்கே கூடுவதால் தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.” என்று தெரிவித்திருந்தார்.

கொளத்தூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாலினே நேரடியாகச் சென்று நிவாரணம் வழங்கிய நிலையில், அவரைக் குறிப்பிட்டுத்தான் இவ்வாறு கூறினார் தினகரன். இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை ஸ்டாலினை சீண்டியிருக்கிறார்.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0