wதமிழகம், மகாராஷ்டிராவில் 50 சதவிகித பாதிப்பு!

Published On:

| By Balaji

இந்தியாவில் கடந்த நான்கு நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 9 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர் உட்பட இதுவரை 23,727 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று (ஜூலை 14) செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரி ராஜேஷ் பூஷன், “மொத்த கொரோனா பாதிப்பில் 50 சதவிகிதம் மகாராஷ்டிரா, தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது. 36 சதவிகித பாதிப்பு டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத், அசாம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 63 சதவிகிதமாக உள்ளதென தெரிவித்த அவர், “மே 2 முதல் 30 வரை கொரோனாவிலிருந்து மீள்வோரை விட, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதன்பிறகு குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, கொரோனா பாதிக்கப்படுபவர்களை விட, அதிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கை 1.8 மடங்கு அதிகமாக உள்ளது” என்று விவரித்தார்.

மேலும், “10 லட்சத்திற்கு 140 பேருக்கு சோதனை மேற்கொண்டால், அது விரிவான சோதனையைக் குறிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. 22 மாநிலங்கள் 10 லட்சத்திற்கு 140 பேருக்கு அதிகமாகவே சோதனைகளை மேற்கொள்கின்றன” என்றும் கூறினார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share