}ரூ.2 கோடி லஞ்சம்: நீதிமன்றத்தில் ஆஜராகாத சசிகலா

Published On:

| By admin

சிறையில் சொகுசு வசதிக்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா நேற்று (ஏப்ரல் 16) நீதிமன்றத்தில் ஆஜராகாததை அடுத்து வழக்கு விசாரணை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா சிறைத் தண்டனை பெற்றபோது சிறையில் சொகுசு வசதிகளைப் பெறுவதற்காகச் சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பெங்களூரு ஊழல் தடுப்புப் படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சிறைத் துறை தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், இரண்டாவது குற்றவாளியாகச் சிறைத் துறை கண்காணிப்பாளர் அனிதா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கு கடந்த மார்ச் 11ஆம் தேதி விதானசவுதா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சசிகலா, இளவரசி மற்றும் சிறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அனிதா இருவரும் தங்கள் மீதான விசாரணைக்குத் தடை வாங்கியுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அன்றைய தினம் வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயண பட் முன்பு சசிகலா, இளவரசிக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து 2 பேரும் தலா 3 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தும்படி உத்தரவிட்டு இரண்டு பேருக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். உடனடியாக சசிகலா தரப்பிலிருந்து இருவருக்கும் 6 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தப்பட்டதால் ஜாமீன் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் சசிகலாவும் இளவரசியும் விசாரணைக்குக் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர்களது சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சசிகலா, இளவரசி இருவரும் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டனர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இருவருக்கும் விலக்கு அளித்து வழக்கு விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் சசிகலா, இளவரசி இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share