மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவரது பெற்றோருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையில் உள்ள பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் மரணத்துக்கு மதமாற்றம் காரணம் என்று சர்ச்சை எழுந்த நிலையில், நீதிபதி முன்பு மாணவி அளித்த வாக்குமூலத்தில் மதமாற்றம் குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், மாணவியின் பெற்றோர் அளித்த இரண்டாவது புகாரில் மதமாற்றம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர்.
அதனால், மாணவியின் மரணத்துக்கு கட்டாய மதமாற்றம் காரணமா?, வார்டனின் டார்ச்சல் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு பக்கம் பிரேத பரிசோதனை முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்கி கொள்வோம் என்று பெற்றோர் கூறிவிட்டனர். இதனால், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிரேத கிடங்கில் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை திங்கட்கிழமை நடைபெறும் என்று நேற்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தற்போது விசாரணை மேற்கொண்டார்.
அப்போது மனுதாரர் தரப்பில் மாணவியின் இறப்பில் மர்மம் உள்ளது. மாணவியை மதம் மாற சொல்லி பள்ளி நிர்வாகம் துன்புறுத்தியதால்தான் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.
ஆனால் இது அரசு தரப்பில் முற்றிலுமாக மறுக்கப்பட்டது. மாணவியின் மரண வாக்குமூலம் தெளிவாக உள்ளது. மாணவி நிர்வாக ரீதியில் தன்னை வேலை செய்ய சொல்லியதால்தான் தற்கொலைக்கு முயன்றதாகவும், விஷமருந்தியதை யாரிடமும் சொல்லவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டுள்ளார். மாணவியின் வழக்கு விசாரணை தெளிவாக உள்ளது. எனவே இதனை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாணவியின் பிரேத பரிசோதனை நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது . அதிலும் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இரண்டு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மாணவியின் பெற்றோரை வீடியோ கான்பரன்ஸில் வர சொல்லி பெற்றோருக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா என்று கேட்டறிந்தார். அப்போது மாணவின் பிரேத பரிசோதனையில் எந்த சந்தேகமும் இல்லை என்று பெற்றோர் தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதி, “ மாணவியின் உடலை உடனடியாக பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கு செய்யலாம். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.
குறிப்பாக தஞ்சையில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும். மாணவியின் இறுதி சடங்கை இன்று முடித்துவிட்டு நாளை தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் பெற்றோர் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
**-வினிதா**
�,