வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும்!

politics

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைய தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதி வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில்,” கரூரில் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டு அறைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும்போது, 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கும்போது, சமூக இடைவெளியை பின்பற்றுவதில் சிக்கல் ஏற்படும். அதனால், வாக்கு எண்ணிக்கையை 3 அறைகளில் நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(ஏப்ரல் 26) தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, ”கொரனோ இரண்டாவது அலை தீவிரமடைய தேர்தல் ஆணையமே காரணம். கொரோனா இரண்டாம் அலையால் ஏற்படும் உயிரிழப்பை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. தேர்தல் பரப்புரை நடந்தபோது தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா? தேர்தல் நடைபெற்ற அன்று மட்டும்தான் தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.

அரசியல் கட்சிகளும் தங்கள் இஷ்டம்போல் பிரச்சாரம் செய்ததே கொரோனா பரவலுக்கு காரணம். நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லை என்றால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும். வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும். இதுகுறித்து சுகாதார செயலாளர் , இயக்குனரிடம் உரிய ஆலோசனை பெற்று ஏப்ரல் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையின்போது கரூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உரிய பாதுகாப்பு தரப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

**வினிதா**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *