தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று பிப்ரவரி 19ஆம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில்… வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடக்க இருக்கிறது.
தேர்தலின்போது ஆளுங்கட்சியான திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக புகார் கூறி இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை தினத்தன்று உய ர்நீதிமன்றம் சுட்டிக்காட்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மீண்டும் ஒருமுறை மனு அளித்து இருக்கிறது அதிமுக.
அதிமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆர்.எம். பாபு முருகவேல் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவில், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடந்த 3.1.2022 அன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு வேட்புமனுத்தாக்கலில் இருந்து வாக்குப்பதிவு முதற்கொண்டு வாக்கு எண்ணிக்கை வரை அனைத்தையும் காணொளி பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.
அந்த காணொளி பதிவுகளை தேர்தல் ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதனடிப்படையில் வாக்கு எண்ணிக்கை நாளன்று ஒவ்வொரு வார்டாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது அந்த வாக்கு எண்ணிக்கையை முடித்தவுடன் எந்தவிதமான காலதாமதமின்றி உடனடியாக தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
மாறாக காலம் தாழ்த்துவது தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும், அதோடு ஆளும் திமுக தன்னுடைய அதிகார பலத்தையும், ஆட்சி பலத்தையும் பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கை முடிவுகளை மாற்றி அறிவிப்பதற்கான அழுத்தத்தையும், தேவையில்லாத சட்டச் சிக்கல்களையும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இந்த சூழ்நிலைகளை தவிர்க்கும் பொருட்டு வாக்கு எண்ணிக்கை நாளன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் எண்ணப்படுகின்ற வாக்கு மாநகராட்சியாக இருந்தாலும், நகராட்சியாக இருந்தாலும், பேரூராட்சியாக இருந்தாலும் ஒவ்வொரு வார்டு வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை, வெற்றி பெற்றவர்களுடைய விவரங்களை உடனடியாக வெளிப்படுத்தி அவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் களையும் கையோடு வழங்கி முடித்த பிறகுதான் அடுத்த வார்டிற்கான வாக்கு எண்ணிக்கையை தொடங்கவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ” வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக தபால் வாக்குகளை எண்ணி முடித்து பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு உண்டான வாக்குகளை எண்ணத் தொடங்க வேண்டும். காரணம் மாநகர பகுதிகளில் உள்ள வார்டுகளில் அதிகபட்சமாக தபால் வாக்குகள் 50 ம் நகரப்பகுதிகளில் அதிகபட்சமாக தபால் வாக்குகள் 20ம் பேரூராட்சி பகுதிகளில் அதிகபட்சமாக தபால் வாக்குகள் ஐந்தும் தான் இருப்பதற்கு உண்டான நிலை இருக்கிறது.
எனவே இதில் எந்த நேர விரயமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை எனவே தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடித்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு உண்டான வாக்குகளை எண்ண வேண்டும்.
பெரும்பான்மையான தேர்தல்களில் தபால் வாக்குகளில் தான் பெரிய அளவிற்கு முறைகேடு நடப்பதற்கும், வெற்றி பெற்றவர்களை தோல்வி பெற்றவர்களாகவும், தோல்வியுற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவித்து சட்டச் சிக்கல் எழுப்பி அதன் மூலம் பெரும்பான்மையான தேர்தல் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் இன்றளவும் நிலுவையில் உள்ளது.
அதை தவிர்க்கும் பொருட்டு தபால் வாக்குகளை எண்ணி முடித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்குஉண்டான வாக்குகளை எண்ணி அந்தந்த வார்டு வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வெற்றி பெற்றவர்களை அறிவித்து, அவர்களுக்கு உண்டான சான்றிதழும் வழங்கி உடனடியாக வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து அவர்களை வெளியேற்றி அதற்கு அடுத்த வார்டுக்கான வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும்.
ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கக்கூடிய தீர்ப்பின்படி வேட்புமனு தாக்கலில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கண்காணிப்பு கேமராவின் மூலமாக அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
அதோடு வெற்றி பெற்றவர்களுக்கான அறிவிப்பையும் உடனுக்குடன் அறிவித்து தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்” என்றும் மனு அளித்துள்ளார் பாபு முருகவேல்.
**வேந்தன்**