சிறப்புக் கட்டுரை: ஊழல் என்றால் என்ன?

Published On:

| By Balaji

ராஜன் குறை

ஊழல் குறித்து நிறைய பேசப்படுகிறது. அரசியல் கட்சிகள் ஒன்றன் மீது மற்றொன்று ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறுவது தவிர்க்க முடியாதது. அது ஒரு வெகுஜன அரசியல் சமன்பாடு, கண்காணிப்புப் பணி. ஆனால், சிலர் ஊழலை ஒழிப்பேன், அதுவே என் அரசியல் என்று பேசுவதுதான் சிந்தனைக்குரியது. அது ஊழல் என்றால் என்ன என்பதை குறித்த தெளிவின்றி இருக்கிறது. கறை நல்லது என்பது போல ஊழல் நல்லது என்று கூற முடியாது. ஆனால், ஊழல் என்பது பலவகைப்பட்டது. ஊழல் என்று சில நேரம் நாம் அழைப்பது அதிகார பகிர்வின் இன்றியமையாத வடிவம் என்பதையும் நாம் புரிந்துகொள்ளாவிட்டால் சமகால அரசியலைப் புரிந்துகொள்ள முடியாது. மக்கள் ஏன் ஊழலை பெரிதாக நினைப்பதில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடியாது.

ஹரியானாவில் முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் செளதாலா, பேரன் அஜய் சிங் சௌதாலா இருவரும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும்போது கொள்ளுப் பேரன் துஷ்யந்த் செளதாலா புதிய கட்சி தொடங்கி பத்து தொகுதிகளில் வென்று, பாஜகவுடனான கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராகிவிட்டார். அப்பாவும் தாத்தாவும் பதவியேற்பு விழாவுக்கு பரோலில் வந்தனர். ஊழல் குடும்பம் என்று பாரதீய ஜனதா கட்சியும் கருதவில்லை, மக்களும் கருதவில்லை. இது ஓர் உதாரணம்தான்.

**அதிகாரப் பகிர்வின் வடிவங்கள்**

ஓர் அரசியல் கட்சிக்கு, ஒரு தொழிலதிபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனம் நன்கொடை தரலாமா? தரலாம். அது ஊழலா? நிச்சயம் இல்லை. அண்மையில் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் மிகவும் புதுமையான சட்டம் ஒன்றை இயற்றியது. அது என்னவென்றால் எந்த நிறுவனமும் அவர்கள் செலவுக்கணக்கில் அரசியல் கட்சி நன்கொடை என்று எழுதிக்கொள்ளலாம். அந்தப் பணத்தில் எலெக்ட்ரல் பாண்டுகளை (electoral bonds) வாங்கலாம். எந்த கட்சிக்கு பாண்டு என்று சொல்ல வேண்டியதில்லை. அதேபோல கட்சிகளும் பாண்டுகளை நன்கொடை வரவு வைத்துக்கொள்ளலாம். யார் கொடுத்த பாண்டு என்று சொல்லவேண்டிய தேவை இல்லை. இந்த எலெக்ட்ரல் பாண்டுகளை தரும் வங்கிக்கு அந்த விவரங்கள் தெரியலாம். அவர்கள் அதை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த புதிய ரகசிய ஏற்பாட்டில் மிகவும் பலன் அடைந்தது ஆளுகின்ற பாரதீய ஜனதா கட்சிதான் என்பதை சொல்ல வேண்டியதில்லை. 2018-19ஆம் ஆண்டில் மட்டும் 1,450 கோடிகள் நன்கொடை பெற்றுள்ளதாக அந்தக் கட்சி கூறியுள்ளது. இதன் பொருள் என்னவென்றால் தாங்கள் ஈட்டும் லாபத்திலிருந்து ஒரு தொகையை அரசியல் கட்சிகளுக்கு தொழில், வர்த்தக நிறுவனங்கள் பகிர்ந்து தரலாம் என்பதாகும். அரசு அவர்களுக்குச் செய்யும் உதவிகளுக்கு நன்றிக்கடன்.

இது ஒரு வகையான உறவுதான். அதைக்கடந்து அரசியல்வாதிகளுக்கும், தொழில் வர்த்தக நிறுவனங்களுக்கும் பல உறவுகள் இருக்கும். உதாரணமாக அதானி நிறுவனம் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒரு விமானத்தை நரேந்திர மோடிக்குக் கொடுக்கும். அதானி நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் தோண்ட 5,000 கோடி ரூபாயை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கொடுக்கும். தொழில் நட்டமடைந்தால் நிலுவைத் தொகையை ரத்து செய்யும். வாராக்கடனாகவே இருந்தால்தான் என்ன? வாராக்கடன்கள் குறித்து எச்சரித்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை மாற்றிவிட்டார்கள் அல்லவா? அதனால் வங்கிப் பணம் என்பது அரசே தொழிலில் பங்குதாரராவது போலத்தான். இதையெல்லாம் ஊழல் என்று சொல்ல மாட்டார்கள். விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நடக்கிறது என்பார்கள். சில சிறிய மீறல்கள் நடக்கும். சில நேரம் வங்கிகள் தகுதிக்கு மீறி கடன் கொடுத்துவிடும். கடன் வாங்கியவர்கள் பாவம் மல்லையா போல, நீரவ் மோடி போல தப்பியோடி, புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ வேண்டி வரும். இதெல்லாம் சிறிய விதி மீறல்கள்தானே தவிர ஊழல் என்ற கணக்கில் வராது.

அதே நேரம் எளிய பின்புலத்திலிருந்து வரும் அரசியல்வாதிகள் தனிப்பட்ட முறையில் தங்களை வலுப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். தொடர்ந்து கட்சி செயல்பாடுகளில் ஈடுபட, தேர்தல்களில் பங்கேற்க பொருளாதார வலு இல்லாமல் முடியாது. ஆனால் அவர்கள் அப்படி பொருளாதார வலு சேர்ப்பது ஊழலாகத் தெரியும்.

அதிகாரி குளிரூட்டப்பட்ட அறையில் லட்ச ரூபாய் வாங்கினால் தெரியாது. ஆனால், வாயிலில் நிற்கும் காவலாளி பத்து ரூபாய் வாங்கினால்கூட தெரியும். அதுபோல வலியோர் மேலும் தங்கள் வலிமையை பெருக்கிக்கொள்வது புலனாகாது. எளியோர் வலிமையடைவது பளிச்சென்று தெரியும்.

**அதிகாரத்தின் வடிவங்கள்**

அதிகாரம் என்பது அடிப்படையில் ஒருவர் சொல்வதைக் கேட்டு மற்றவர் செயல்படுவது. இது தவறானதோ, மோசமானதோ அல்ல. அப்படி ஒருவர் சொல்வதைப் பிறர் கேட்பதன் மூலம்தான் சமூக ஒருங்கிணைப்பும், இயக்கமும் சாத்தியமாகிறது. பிரச்சினை அதிகாரம் ஆதிக்கமாகி பிறரை வற்புறுத்துவது, அடிமையாக்குவது போன்றவற்றில்தான் இருக்கிறது. அதிகாரம் தவறல்ல. ஆதிக்கமே தவறு.

அதிகாரம் உருவாவது மூன்று விதங்களில் நடக்கலாம். பலசாலி பலவீனமானவரை தாக்குவார் என்ற அச்சத்தினால் நடக்கலாம். சாட்டைகளைக் கையில் வைத்துக்கொண்டு அடிமைகளை அடித்து வேலை வாங்குவதை நாம் சரித்திரப் படங்களில் பார்த்திருக்கிறோம். அது போல ஆயுதங்கள் துணை கொண்டு ஒருவர் அதிகாரத்தைச் செலுத்த முடியும். தாதாகிரி என்று இதை இப்போது குறிப்பிடுகிறார்கள். இது பெரும்பாலும் ஆதிக்கமாகவே வெளிப்படும்.

இன்னொரு வழி பணம் கொடுப்பதன் மூலம் ஒருவரைச் செயல்பட வைக்கமுடியும். பொதுவாக ஊதியம் கொடுப்பதன் மூலமே ஒருவரை வேலைக்கு அமர்த்த முடியும். தேவையான பண்டங்களை வாங்கிக்கொள்ள உதவும் பணம் என்ற குறியீடு இதைச் சாதிக்கிறது. அதனால் செல்வந்தர்கள், நிலப்பிரபுக்கள், தொழிலதிபர்கள் போன்றவர்கள் மிகுந்த அதிகாரம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். பணம் பத்தும் செய்யும் என்பது போன்ற பழமொழிகள் இதை உணர்த்தும். பணத்தால் உருவாகும் உறவு ஆதிக்கமாகவும் இருக்கும் அதிகாரமாகவும் இருக்கும்.

இதைத்தவிர மிகவும் பழையதொரு வழி நன்கு பேசி ஒருவர் மனதை வசப்படுத்தி அவரை நாம் சொல்வதைச் செய்ய வைப்பது. இது படித்தவர்கள், நீதிமான்கள், மதகுருக்கள் கைக்கொள்ளும் வழி. சொல்லின் மூலம் அதிகாரத்தைச் சாத்தியமாக்குவது. மக்களாட்சி அரசியலிலும் இது உதவும். அதிகாரப் பகிர்வுக்கு பரவலுக்கு இணக்கமான வழி.

இந்த மூன்று அதிகாரத்தின் பாதைகளையும் கல்வி, செல்வம், வீரம் என்று குறிப்பிடலாம். ஒரு நவீன புராணக் கற்பனையான சரஸ்வதி சபதம் பட த்தில் வரும் “கல்வியா, செல்வமா, வீரமா?” என்ற பாடல் உங்களுக்கு நினைவிருக்கும். இந்த மூன்றில் எது அதிக அதிகாரம் பெற்றது என்பதே படத்தின் முக்கிய கேள்வி. படைத்தளபதி வீரம், அரசி செல்வம், கவிஞர் கல்வி. அவர்களுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டிதான் கதை.

இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் நடைமுறை வாழ்வில் இந்த மூன்று வடிவங்களுக்கிடையே தொடர்ந்த பரிவர்த்தனை மற்றும் உருமாற்றம் இருக்கத்தான் செய்யும். செல்வந்தர் வீட்டில் பிறந்த ஒருவர் எந்தக் கவலையும் இல்லாமல் கல்வி கற்கலாம் என்பதால் சிறந்த அறிஞர் ஆகலாம். அதே போல ஏழையாய் பிறந்து கற்றலில் சிறந்த நபர் செல்வந்தர் ஆகலாம். அந்த காலத்தில் வீரம் மிகுந்தவர் மராத்திய சிவாஜி போல படை திரட்டி சாம்ராஜ்யத்தை உருவாக்கலாம்.

**மக்களாட்சியில் அதிகாரத்தின் செயல்பாடு**

பண்டைய அரசமைப்பைப் பொறுத்தவரை காலம், காலமாக நிலப்பிரபுக்களும், பெருவணிகர்களுமே அதிகார குவிமையங்களாக இருந்துள்ளார்கள். அரசர்களும், படைகளும் இவர்களுக்காக இவர்கள் நலனுக்காக இயங்குபவர்களே. அரசர்களும் அதிகாரக் குவிப்பால் செல்வங்களை பகிர்ந்து செல்வச் செழிப்பில் திளைப்பார்கள்.

நவீன காலத்தில் மக்களுக்கும் அதிகாரம் பகிரப்படவேண்டும் என்ற மக்களாட்சி கோட்பாடு உருவானபின் புதியதொரு சூழல் தோன்றுகிறது. தேர்தல் என்ற நடைமுறையே அரசாள்பவர்களைத் தீர்மானிக்கிறது. தேர்தலில் முகேஷ் அம்பானிக்கும் ஓர் ஓட்டுதான், எனக்கும் ஓர் ஓட்டுதான், முதியோர் பென்ஷனுக்காக அலையும் கிராமத்து மனிதருக்கும் ஓர் ஓட்டுதான். இதனால் ஓட்டுகளைக் குவித்து மக்கள் பிரதிநிதியாக வெற்றிபெறக்கூடிய அரசியல்வாதிகள் அதிகாரம் மிக்கவர்களாக ஆகிறார்கள்.

முதலில் தேர்தல்களில் நில உடைமையாளர்கள், பெரும் பணக்காரர்களே நின்று வெற்றி பெறுவார்கள். அதை யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள். அதாவது செல்வம் என்ற அதிகாரம் அரசியல் அதிகாரமாக இருப்பது தவறல்ல என்று நினைப்பார்கள். ஆனால் அரசியல் அதிகாரத்தை எளிய மனிதர் ஒருவர் பெற்றால் அவர் இயல்பாகவே செல்வத்தை அடையலாம் என்பதைச் செல்வந்தர்கள் தவறாக நினைக்கிறார்கள். செல்வம் அரசியல் அதிகாரமாகலாம், அரசியல் அதிகாரம் செல்வமாகக் கூடாது என்று கூறுகிறார்கள்.

பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் உள்ள சமமற்ற அதிகார வெளியில் நடைபெறும் மக்களாட்சி அரசியலில் அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் பணபலம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் எளிமையாக வாழலாம். அல்லது கொடநாடு பங்களாவில் ஆடம்பர வாழ்க்கை வாழலாம். அது தனிப்பட்ட வித்தியாசம்தான். ஆனால் அரசியல் என்பது ஓட்டுக்களின் மூலம் பெறும் அதிகாரத்துக்கும், பரம்பரை சொத்துரிமை, மூலதனக் குவிப்பின் மூலம் பெறும் அதிகாரத்துக்கும் நடக்கும் பேரமாகத்தான் எப்போதும் இருக்கும்.

அரசியல்வாதிகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையோ, பெரும் செல்வத்தைக் குவிப்பதையோ மக்கள் ரசிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டால் அத்தகைய அரசியல்வாதிகளை ஏற்க மாட்டார்கள். அதே நேரம் மக்களுக்கான உரிமைகளை, அவர்களது நல்வாழ்வுக்கான தேவைகளை அரசு இயந்திரத்தின் மூலம் நிறைவேற்றித் தரும் அரசியல்வாதிகளை நிச்சயம் ஆதரிப்பார்கள். மக்கள் ஊழல் என்பதை அதிகாரப் பகிர்வின், அரசியல் அதிகார சமன்பாடுகளின் அங்கம் என்றுதான் பார்க்கிறார்கள். ஆட்சியின் விளைவாக தங்கள் வாழ்வு மேம்படுகிறதா, அதற்கான முயற்சிகளைச் செய்யும் வலிமையுடன் அரசியல்வாதிகள் இருக்கிறார்களா என்பதே அவர்கள் அக்கறை.

**எதிர்மறை ஊழலும், ஊடக பிம்பங்களும்**

ஊழலில் சில வகைகள் எதிர்மறையானவை. தரமற்ற சேவை, ஏமாற்று வணிகம், இடிந்துவிழும் கட்டடம், உணவில் கலப்படம் என மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயங்களை தங்கள் தனிப்பட்ட வருமானத்துக்காகவோ, அரசியல் முதலீட்டுக்காகவோ அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ அனுமதிப்பது எதிர்மறை ஊழலாகும். இவ்வகை ஊழல்களைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் குடிமைச் சமூகமும், மக்களும் தீவிரமான முனைப்புடன் இயங்க வேண்டும். இத்துடன் இப்போது சுற்றுச்சூழலுக்குத் தீங்கிழைக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், ஊடகங்கள் எந்தவகை ஊழல்களை ஊதிப்பெருக்குகின்றன, எந்த ஊழல்களை அதிகம் பேசாமல் விடுகின்றன என்பதெல்லாம் அரசியல் பேரத்தில் நடக்கிறது என்பதையும் காண வேண்டும். போஃபர்ஸ் ஊழலை பிரமாண்டமாக்கியதில் ராஜீவ் காந்தி பதவியிழந்தார். இங்கே பிரச்சினை போஃபர்ஸ் பீரங்கிகள் தரமற்றவை என்பதல்ல. அதில் கமிஷன் பணம் கைமாறிவிட்டது என்பதுதான். அதைவிட பெரிய ஊழலான மோடி அரசின் ரஃபேல் விமான ஊழலை பாஜக சார்பு ஊடகங்கள் பெரிய அளவில் மக்கள் கவனத்தை ஈர்க்க அனுமதிக்கவில்லை. மோடி மீண்டும் வெற்றி பெற்ற பிறகு அது மறக்கப்பட்ட ஊழலாயிற்று.

அதேபோல 2G ஊழல் என்ற பெயரில் ஒரு கற்பனைத் தொகையை, ஊகத்தை மக்களிடையே பிரபலப்படுத்திய ஊடகங்கள், கொடநாடு எஸ்டேட் ஆடம்பர வாழ்க்கை, அங்கே நடந்த மர்மக் கொலைகள் ஆகியவற்றை மக்களுக்கு நினைவுபடுத்துவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

அரசியல் போரில் ஊழல் குற்றச்சாட்டு என்பது ஒரு ஆயுதம் என்பதற்கு மேல் அதற்கு மக்கள் மதிப்பளிப்பதில்லை. ஊழலை ஒழிப்பதே அரசியல் என்ற அணுகுமுறையின் போதாமையை வெகுஜன மனோபாவம் புரிந்துகொள்கிறது. ஏனெனில் மக்களைப் பொறுத்தவரை பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பதும் அதன் மூலம் ஏற்படும் அதிகார சமமின்மை என்பதும், அதையொட்டிய போராட்டமும்தான் வாழ்வின் அடிப்படை.

ஒருவிதத்தில் சொன்னால் ஒட்டுமொத்தமான அறமற்ற அமைப்பில் அரசியலில் நடக்கும் ஊழலை மட்டும் பிரச்சினையாகச் சொல்வதை மக்கள் இயல்பாகவே பெரிதுபடுத்துவதில்லை.

**கட்டுரையாளர் குறிப்பு**

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment