எல்லையோர மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக அரசு முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்ததாகவும், அவருக்கும் குணமாகிவிட்டதாகவும், கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தை விட அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. பெங்களூருவில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டன. கேரளாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேலும், வெளிமாநிலங்களுக்கு பயணிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
**எழில்**�,